உபாகமம் 10 : 1 (RCTA)
அக்காலத்தில் ஆண்டவர் என்னை நோக்கி: முந்தினவைகளைப்போல் நீ இரண்டு கற்பலகைகளைச் செதுக்கிக் கொண்டு மலையில் ஏறி நம்மிடம் வருவாய். ஒரு மரப்பெட்டகத்தையும் செய்வாயாக.
உபாகமம் 10 : 2 (RCTA)
நீ முன் உடைத்துப் போட்ட பலகைகளில் எழுதியிருந்த வார்த்தைகளை நாம் இந்தப் பலகைகளிலும் எழுதுவோம். நீ அவைகளைப் பெட்டகத்திலே வைப்பாய் என்றார்.
உபாகமம் 10 : 3 (RCTA)
அப்படியே நான் சேத்தீம் மரத்தால் ஒரு பெட்டகத்தைச் செய்து, முந்தினவைகளின் வடிவமாக இரண்டு பலகைகளை வெட்டிச் செதுக்கி அவைகளைக் கையிலே ஏந்திக்கொண்டு மலையில் ஏறினேன்.
உபாகமம் 10 : 4 (RCTA)
மக்கள் சபை கூடியிருந்த நாளில் ஆண்டவர் மலையிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களுக்குத் திருவாக்கருளிய பத்துக் கட்டளைகளையும் தாம் முன்பு எழுதிய வண்ணமே இந்தப் பலகைகளிலும் எழுதி, அவைகளை என்னிடம் தந்தார்.
உபாகமம் 10 : 5 (RCTA)
அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கி, பலகைகளை நான் செய்திருந்த பெட்டகத்தில் வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை இன்னும் அதிலே இருக்கின்றன.
உபாகமம் 10 : 6 (RCTA)
அதன்பின் இஸ்ராயேல் மக்கள் ஜக்கான் புதல்வரைச் சேர்ந்த பெரோத்திலிருந்து பாளையம் பெயர்ந்து மோசராவுக்கு வந்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதல்வனாகிய எலெயஸார் அவருக்குப் பதிலாகத் தலைமைக்குரு ஆனார்.
உபாகமம் 10 : 7 (RCTA)
அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டுக் காற்காதுக்கும், காற்காதிலிருந்து ஆறுகளும் வெள்ளங்களுமுள்ள நாடாகிய ஜெத்தெபத்தாவுக்கும் வந்து பாளையம் இறங்கினர்.
உபாகமம் 10 : 8 (RCTA)
அக்காலத்தில் ஆண்டவருடைய உடன் படிக்கைக் கூடாரத்தைச் சுமப்பதற்கும், இந்நாள் வரையிலும் நடந்து வருவதுபோல் ஆண்டவர் திருமுன் நின்று அலுவலைச் செய்வதற்கும், அவருடைய பெயரால் ஆசீர் அளிப்பதற்கும் ஆண்டவர் லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
உபாகமம் 10 : 9 (RCTA)
அக்காரணத்தால் லேவிக்குத் தன் சகோதரர்களோடு பங்குமில்லை; உரிமையுமில்லை. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அவனுக்குச் சொல்லியுள்ளபடி, ஆண்டவரே அவன் உடைமை.
உபாகமம் 10 : 10 (RCTA)
நானோ முன்போல் நாற்பது நாளும் இரவு பகலாய் மலையிலே இருந்தேன். ஆண்டவர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளி உன்னை அழிக்காமல் விட்டார்.
உபாகமம் 10 : 11 (RCTA)
அவர் என்னை நோக்கி: நாம் மக்களுக்கு அளிப்போமென்று அவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில், அவர்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறு நீ போய் மக்களுக்கு முன்பாகச் சொல்வாய் என்று எனக்குத் திருவுளம்பற்றினார்.
உபாகமம் 10 : 12 (RCTA)
இப்பொழுது, இஸ்ராயலே, நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய நெறியில் ஒழுகி, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொண்டு, உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவருக்கு ஊழியம் செய்து,
உபாகமம் 10 : 13 (RCTA)
உனக்கு நன்மை பயக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கற்பிக்கிற ஆண்டவருடைய கட்டளைகளையும் ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்பதேயல்லாது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் வேறு எதனைக் கேட்கிறார் ?
உபாகமம் 10 : 14 (RCTA)
இதோ வானமும், வானங்களின் வானமும், பூமியும் அதிலடங்கிய அனைத்தும் உன் கடவுளாகிய ஆண்டவரின் உடைமைகளே.
உபாகமம் 10 : 15 (RCTA)
ஆயினும், ஆண்டவர் உன் மூதாதையரோடு ஒன்றித்து அவர்களை நேசித்தமையால், அவர்களுடைய சந்ததியாகிய உங்களை எல்லா மக்கள் கூட்டங்களுக்குள் தேர்ந்து கொண்டார். இது இந்நாளிலே எண்பிக்கப்பட்டதன்றோ ?
உபாகமம் 10 : 16 (RCTA)
ஆகையால், நீங்கள் உங்கள் இதயத்தின் மிஞ்சின (ஆசை என்னும்) நுனித்தோலை விருத்தசேதனம் செய்து, உங்கள் தலையையும் இனி கடினப்படுத்தாதீர்கள்.
உபாகமம் 10 : 17 (RCTA)
ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்தாமே கடவுளர்க்கெல்லாம் கடவுளும், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரும், மகத்துவரும் வல்லவரும் பயங்கரமுள்ளவருமான கடவுளாய் இருக்கிறார். அவர் ஒருதலைச் சார்பாய் இருப்பவருமல்லர்; கையூட்டு வாங்குபவருமல்லர்.
உபாகமம் 10 : 18 (RCTA)
அவர் அநாதைப் பிள்ளைக்கும் விதவைக்கும் நீதி நியாயம் வழங்குபவரும், அகதியை நேசித்து அவனுக்கு உணவும் உடையும் தந்தருளுபவருமாய் இருக்கிறார்.
உபாகமம் 10 : 19 (RCTA)
நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியர்களாய் இருந்தீர்கள் அல்லவா ? ஆகையால், அகதிகளுக்கு அன்பு செய்யுங்கள்.
உபாகமம் 10 : 20 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பயந்து, அவருக்கே பணிசெய்து, அவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய பெயரைக் கைக்கொண்டு ஆணையிடுவாயாக.
உபாகமம் 10 : 21 (RCTA)
உன் புகழும் அவரே; உன் கடவுளும் அவரே; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை நடத்தினவரும் அவரே.
உபாகமம் 10 : 22 (RCTA)
உன் மூதாதையர் எழுபது ஆட்களாய் எகிப்துக்குப் போனார்கள். ஆனால் இதோ கடவுளாகிய ஆண்டவர் உன்னை விண்மீன்களைப் போல் பெருகச் செய்துள்ளார்.
❮
❯