உபாகமம் 1 : 1 (RCTA)
இஸ்ராயேலர் யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்திலே பாலைவனத்தில் செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியில், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும், மிகுதியான பொன்விளையும் அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஓர் இடத்தில் இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையையும் நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு.
உபாகமம் 1 : 2 (RCTA)
மேற்படி இடம் காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினோரு நாள் பயணத் தொலைவில் இருக்கிறது.
உபாகமம் 1 : 3 (RCTA)
அப்பொழுது ( பாலைவனப் பயணத்தின் ) நாற்பதாம் ஆண்டு, பதினோராம் மாதம், முதல் நாள். அந்நாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களிடம் சொல்லுமாறு தனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை மோயீசன் சொல்லலானார்.
உபாகமம் 1 : 4 (RCTA)
அதற்குமுன் அவர் எசெபோனில் குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனையும், அசெரோட்டிலும் எதிராயிலும் வாழ்ந்துவந்த பாசானின் அரசனாகிய ஓகையையும் முறியடித்திருந்தார்.
உபாகமம் 1 : 5 (RCTA)
யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்தில் மோவாப் நாட்டில் அது நடந்தது. மோயீசன் (ஆண்டவருடைய) நியாய விதிகளை மக்களுக்குத் தெளிவித்துக் காட்டத் தொடங்கினார். எப்படியென்றால்:
உபாகமம் 1 : 6 (RCTA)
ஓரேபில் நம்முடைய கடவுள் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் இந்த மலையருகில் இருந்தது போதும்.
உபாகமம் 1 : 7 (RCTA)
நீங்கள் புறப்பட்டு அமோறையர் மலையையும் அதைச் சுற்றிலுமிருக்கிற மற்ற இடங்களையும், தென் புறமாயுள்ள சமவெளியையும் மலைக்கணவாய்களையும், கடற்கரையோரமாய்க் கானான், லாபான் நாடுகளையும், யூப்பிராத்து என்ற பெரிய நதியையும் சென்றடைவீர்கள்.
உபாகமம் 1 : 8 (RCTA)
இதோ ( அவற்றை ) உங்கள் உடைமையாக்கினோம். நீங்கள் போய், ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப்புக்கும், அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்னாரே, அந்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
உபாகமம் 1 : 9 (RCTA)
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி:
உபாகமம் 1 : 10 (RCTA)
நான் ஒருவனாய் உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாதவனாய் இருக்கிறேன். ஏனென்றால், உங்கள் கடவுள் உங்களைப் பெருகச் செய்தார். நீங்கள் இப்பொழுது விண்மீன்களைப்போல் அளவற்றுப் பெருகி இருக்கிறீர்கள்.
உபாகமம் 1 : 11 (RCTA)
உங்கள் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்களை இன்னும் ஆயிர மடங்காகும்படி செய்து, தாம் சொல்லிய வார்த்தையின்படியே உங்களுக்கு ஆசீர் அளிப்பாராக.
உபாகமம் 1 : 12 (RCTA)
உங்கள் குறைகளையும் துன்பங்களையும் வழக்குகளையும் நான் ஒருவனாகத் தாங்குவது இயலாத காரியம்.
உபாகமம் 1 : 13 (RCTA)
ஆதலால், உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் நன்னடத்தையுமுள்ள ஆடவர்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்ல, நீங்கள் மறுமொழியாக:
உபாகமம் 1 : 14 (RCTA)
தாங்கள் செய்யக் கருதினது நல்லது என்று எனக்குச் சொன்னீர்கள்.
உபாகமம் 1 : 15 (RCTA)
ஆதலால், நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் மதிப்பும் பொருந்திய ஆடவர்களைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தலைவர்களாகவும் ஆயிரவர்க்கும் ஐந்நூற்றுவர்க்கும் நூற்றுவர்க்கும் ஐம்பதின்மர்க்கும் தலைவராகவும் ஏற்படுத்தி வைத்தேன்.
உபாகமம் 1 : 16 (RCTA)
பிறகு நான் அவர்களை நோக்கி: மக்களுடைய வழக்குகளைக் கேட்டு, அவர்கள் சகோதரரானாலும் அந்நியரானாலும், நீதிப்படி தீர்ப்புச் சொல்லுங்கள்.
உபாகமம் 1 : 17 (RCTA)
நீதியிலே ஒருதலைச் சார்பில்லாமல், பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரியாகச் செவி கொடுப்பீர்கள். நடுநிலை தவறவே கூடாது. அதுவே இறை நீதி. உங்களுக்குக் கடினமாய்த் தோன்றும் காரியத்தை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதைக் கேட்டுத் தீர்ப்புச் சொல்வேன் என்று கட்டளையிட்டேன்.
உபாகமம் 1 : 18 (RCTA)
நீங்கள் செய்ய வேண்டியன எல்லாவற்றையும் கட்டளையிட்டேன்.
உபாகமம் 1 : 19 (RCTA)
அதன்பின், நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்கள் கண்ட பயங்கரமான பெரும் பரப்புள்ள பாலையைக் கடந்து, அமோறையரின் மலை வழியாய்ச் சென்று காதேசுக்கு வந்துசேர்ந்தோம்.
உபாகமம் 1 : 20 (RCTA)
அப்பொழுது, நான் உங்களை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கிற அமோறையரின் மலைநாடு வரையிலும் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
உபாகமம் 1 : 21 (RCTA)
இதோ உன் கடவுள் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைப் பார். நம் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி நீ போய் அதை உரிமையாக்கிக்கொள். அஞ்சவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம் என்றேன்.
உபாகமம் 1 : 22 (RCTA)
அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து: அந்த நாட்டை ஆராய்ந்து பார்க்கவும், நாம் எவ்வழியாகச் சென்று எந்தெந்த நகரங்களுக்குப் போகலாமென்று சொல்லவும், தக்கவர்களான மனிதர்களை அனுப்புவது நலம் என்றீர்கள்.
உபாகமம் 1 : 23 (RCTA)
நான் ( உங்கள் ) சொல்லை ஏற்றுக்கொண்டு, உங்கள் கோத்திரங்களுக்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு மனிதர்களை அனுப்பினேன்.
உபாகமம் 1 : 24 (RCTA)
அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறிக் கொடிமுந்திரிப் பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டை நன்றாகப் பார்த்ததுமல்லாமல்,
உபாகமம் 1 : 25 (RCTA)
நாட்டின் செழுமைக்கு அடையாளமாக அதன் பழங்களில் சிலவற்றை எடுத்து நம்மிடம் கொண்டுவந்து: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் நாடு நல்ல நாடு என்று சொன்னார்கள்.
உபாகமம் 1 : 26 (RCTA)
நீங்களோ: போகமாட்டோம் என்று நம் கடவுளின் வார்த்தையை நம்பாதவர்களாய்,
உபாகமம் 1 : 27 (RCTA)
உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தீர்கள். ஆண்டவர் நம்மை வெறுத்திருக்கிறார். ஆகையால், அவர் அமோறையர் கையில் நம்மை ஒப்புவித்து நம்மை அழித்துவிடுவதற்காகவே, எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
உபாகமம் 1 : 28 (RCTA)
நாம் போவது எவ்வாறு ? அந்த மக்கள் கணக்கில்லாதவர்களும் நம்மைவிட நெட்டையர்களுமாவர் என்றும், அவர்களுடைய நகரங்கள் பெரியவைகளும் வானளாவிய கோபுரங்கள் கொண்டவைகளுமாய் இருக்கின்றன என்றும், அவ்விடத்தில் ஏனோக்கின் புதல்வர்களையும் கண்டோம் என்றும், போய்ப் பார்த்தவர்கள் சொல்லி அச்சுறுத்தினார்களே என்று சொன்னீர்கள்.
உபாகமம் 1 : 29 (RCTA)
அதைக்கேட்ட நான்: அஞ்சாதீர்கள்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
உபாகமம் 1 : 30 (RCTA)
உங்களை நடத்துகின்ற கடவுளாகிய ஆண்டவர் உங்களை ஆதரித்து, எகிப்து நாட்டிலே உங்கள் கண்களுக்கு முன்பாக அவர் எப்படி உங்களோடிருந்து போர்புரிந்தாரோ, அப்படியே செய்வார்.
உபாகமம் 1 : 31 (RCTA)
பாலைவனத்தில் அவர் செய்ததும் உங்களுக்குத் தெரியுமன்றோ ? ஒரு மனிதன் தன் குழந்தையை ஏந்திக் கொள்வதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ( உங்களைப் பேணி ) நீங்கள் இவ்விடம் வந்து சேரும்வரையில் நடந்துவந்த வழிதோறும் உங்களை ஏந்திக்கொண்டாரன்றோ ?
உபாகமம் 1 : 32 (RCTA)
ஆனால் நீங்கள் அப்பொழுதுமுதலாய்,
உபாகமம் 1 : 33 (RCTA)
உங்களுக்கு முன் வழியைத் திறந்து நீங்கள் பாளையம் இறங்கவேண்டிய இடத்தை அளந்து கொடுத்தவரும், உங்கள் வழிகாட்டியாக இரவில் நெருப்புத்தூணிலும் பகலில் மேகத்தூணிலும் உங்களுக்கு முன்சென்றவரும் உங்கள் கடவுளுமாகிய ஆண்டவரை நம்பினீர்களோ ? இல்லை.
உபாகமம் 1 : 34 (RCTA)
ஆகையால், ஆண்டவர் உங்கள் வார்த்தைகளின் குரலைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டு:
உபாகமம் 1 : 35 (RCTA)
உங்கள் மூதாதையருக்குக் கொடுப்போமென்று நாம் ஆணையிட்டுச் சொல்லிய அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட மக்களில் ஒருவனும் காணப்போவதில்லை என்றும்;
உபாகமம் 1 : 36 (RCTA)
ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப் ஆண்டவரைப் பின்பற்றி நடந்தான்; ஆதலால், அவன் அதைக் காண்பான் என்றும்; அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அவன் மிதித்து வந்த நாட்டைத் தருவோம் என்றும் சொன்னார்.
உபாகமம் 1 : 37 (RCTA)
அவர் இப்படி ( மக்கள்மீது ) கோபம் கொண்டதில் வியப்பு என்ன ? உங்கள் பொருட்டு அவர் என்மேலும் கோபம் கொண்டு: நீயும் அதில் புகுவதில்லை.
உபாகமம் 1 : 38 (RCTA)
ஆனால், உன் ஊழியனாய் இருக்கிற நூனின் புதல்னாகிய யோசுவா அதில் உனக்குப் பதிலாய்ப் புகுவான். அவனுக்கு நீ அறிவுரை சொல்லி அவனைத் திடப்படுத்து. ஏனென்றால், அவனே திருவுளச் சீட்டுப்போட்டு அதை இஸ்ராயேலுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்.
உபாகமம் 1 : 39 (RCTA)
சிறையாய்க் கொண்டுபோகப்படுவார்களென்று நீங்கள் சொன்ன உங்கள் சிறுவர்களும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத ( உங்கள் ) பிள்ளைகளும், அந்நாட்டில் புகுவார்கள். அவர்களுக்கே அதைக் கொடுப்போம். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
உபாகமம் 1 : 40 (RCTA)
நீங்களோ திரும்பிச் சென்று, செங்கடல் வழியாய்ப் பாலைவனத்திற்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்றருளினார் என்றேன்.
உபாகமம் 1 : 41 (RCTA)
அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:
உபாகமம் 1 : 42 (RCTA)
நீங்கள் உங்கள் பகைவர் முன்பாக முறிந்துபோவீர்கள். ஆதலால், நீங்கள் போகவும் போர்புரியவும் வேண்டாம். நாம் உங்கள் நடுவே இருக்கமாட்டோம் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
உபாகமம் 1 : 43 (RCTA)
நான் அப்படியே உங்களுக்குச் சொன்னேன். ஆனால், நீங்கள் செவிகொடாமல் ஆண்டவருடைய கட்டளையை மீறி, செருக்குற்றோராய் மலைமேல் ஏறத்துணிந்தமையால்,
உபாகமம் 1 : 44 (RCTA)
அந்த மலைகளில் குடியிருந்த அமோறையர் உங்களை எதிர்க்கப் புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துவதுபோல உங்களைத் துரத்தி, செயீர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தார்கள்.
உபாகமம் 1 : 45 (RCTA)
அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து ஆண்டவருடைய முன்னிலையிலே அழுதபோது, அவர் உங்களுக்குச் செவிகொடுக்கவுமில்லை; உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை.
உபாகமம் 1 : 46 (RCTA)
ஆகையால் நீங்கள் காதேஸ் பர்னேயில் நீண்ட நாட்கள் தங்கினீர்கள்.
❮
❯