தானியேல் 8 : 1 (RCTA)
முன்பு கண்ட காட்சிக்குப் பிறகு, மன்னன் பல்தசாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் தானியேலாகிய நான் வேறொரு காட்சி கண்டேன்.
தானியேல் 8 : 2 (RCTA)
அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் நாட்டிலுள்ள சூசா என்னும் அரண் சூழ்ந்த பட்டணத்தில் நான் இருந்தேன்; அங்கே ஊலாய் ஆற்றை நோக்கியிருக்கும் வாயிலருகே நான் இருந்ததாகக் கண்டேன்.
தானியேல் 8 : 3 (RCTA)
நான் கண்களை உயர்த்திப் பார்த்தேன்; இதோ, ஒரு செம்மறிக்கடா அந்த ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தது; அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன; இரண்டும் நீளமான கொம்புகள்; ஆயினும் அவற்றுள் ஒன்று மற்றதை விட நீளமானது; அது வளர்ந்து கொண்டே வந்தது.
தானியேல் 8 : 4 (RCTA)
அந்தச் செம்மறிக்கடா தன் கொம்புகளினால் மேற்கு, வடக்கு, தெற்குப் பக்கங்களில் முட்டுவதைக் கண்டேன்; அதனை எதிர்த்து நிற்க எந்த மிருகத்தாலும் இயலவில்லை; அதனிடமிருந்து (அவற்றைத்) தப்புவிக்கவல்ல யாருமில்லை; அதுவும் தன் விருப்பம் போலச் செய்து பெருமிதம் கொண்டது.
தானியேல் 8 : 5 (RCTA)
நான் அதையே கவனித்துக் கொண்டிருந்தேன்; அந்நேரத்தில் அதோ மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கடா ஒன்று நிலத்தில் கால்பாவாமல் பூமி மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக் கடாவின் கண்களுக்கு இடையில் விந்தையான ஒரு கொம்பிருந்தது.
தானியேல் 8 : 6 (RCTA)
இரண்டு கொம்புகளுள்ளதும், ஆற்றங்கரையில் நின்றிருந்ததுமாக நான் பார்த்த அந்தச் செம்மறிக் கடாவை நோக்கி வெள்ளாட்டுக் கடா முன்னேறி வந்தது; வந்து தன் ஆற்றலையெல்லாம் கூட்டி அதன் மேல் பாய்ந்தது.
தானியேல் 8 : 7 (RCTA)
இவ்வாறு அது செம்மறிக்கடாவை நெருங்கி, அதன் மேல் கடுஞ் சினங்கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துப் போட்டது; செம்மறிக்கடாவை அதன் வல்லமையினின்று தப்புவிப்பார் யாருமில்லை.
தானியேல் 8 : 8 (RCTA)
அதன்பின்னர் வெள்ளாட்டுக்கடா மிக்கப் பெருமிதம் கொண்டு திரிந்தது; ஆனால் அது வலிமையோடு இருந்த நாட்களில் அந்தப் பெரிய கொம்பு முறிந்து விட்டது; அதனிடத்தில் வேறு நான்கு கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.
தானியேல் 8 : 9 (RCTA)
அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பொன்று கிளம்பிற்று; அது தேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் மகிமையுள்ள நாட்டை நோக்கியும் மிகப் பெரியதாக வளர்ந்தது.
தானியேல் 8 : 10 (RCTA)
அது வானத்தின் சேனை வரை வளர்ந்தது; விண்மீன்களின் சேனைகளுள் சிலவற்றைக் கீழே தள்ளி மிதித்தது.
தானியேல் 8 : 11 (RCTA)
மேலும் அது சேனைகளின் தலைவர் வரைக்கும் தன்னையே உயர்த்தி, அவரிடமிருந்து அன்றாடத் தகனப்பலியைப் பறித்துக் கொண்டு, அவருடைய பரிசுத்த இடத்தையும் பங்கப்படுத்தி அழித்தது.
தானியேல் 8 : 12 (RCTA)
பாவத்தின் காரணமாய் அந்தச் சேனைக்கும், இடைவிடாத தகனப்பலிக்கும் எதிராக அதற்கு வல்லமை தரப்பட்டது; உண்மை மண்ணிலே வீழ்த்தப்பட்டது; அந்தக் கொம்பு முனைந்து முன்னேறிற்று.
தானியேல் 8 : 13 (RCTA)
அப்போது பரிசுத்தர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்; வேறொரு பரிசுத்தர் முன்பேசியவரிடம், "இடைவிடாத தகனப்பலியையும் பாழாக்கும் அக்கிரமத்தையும், பரிசுத்த இடமும் அந்தச் சேனையும் காலால் மிதிபடுவதையும் பற்றிய இந்தக் காட்சி எதுவரைக்கும் நீடிக்கும்?" என்றார்.
தானியேல் 8 : 14 (RCTA)
அதற்கு அவர், "இரண்டாயிரத்து முந்நூறு காலை மாலையளவு நீடிக்கும்; அதன் பிறகு பரிசுத்த இடம் தூய்மை நிலையைத் திரும்ப அடையும்" என்றார்.
தானியேல் 8 : 15 (RCTA)
தானியேலாகிய நான் இந்தக் காட்சியின் உட்பொருள் அறியத் தேடுகையில், இதோ மனித சாயலைக் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக நின்றார்.
தானியேல் 8 : 16 (RCTA)
அப்பொழுது ஊலாய் ஆற்றின் நடுவில் ஒரு மனிதக் குரல் கேட்டது; அது, "கபிரியேலே, இந்தக் காட்சியை விளக்கிச் சொல்" என்று உரத்த குரலில் சொன்னது.
தானியேல் 8 : 17 (RCTA)
அவர் நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்; வரும் போது, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; ஆனால் அவர் என்னை நோக்கி, மனிதா, இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள்" என்றார்.
தானியேல் 8 : 18 (RCTA)
அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் மயங்கித் தரையில் குப்புற விழுந்து கிடந்தேன்; அவர் என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கச் செய்து, எனக்கு விளக்கினார்:
தானியேல் 8 : 19 (RCTA)
கோபத்தின் முடிவுநாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்; ஏனெனில் காலம் முடிவுறப் போகிறது.
தானியேல் 8 : 20 (RCTA)
நீ கண்ட கொம்புகளுடைய செம்மறிக்கடா மேதியர், பேர்சியர்களின் அரசனைக் குறிக்கிறது;
தானியேல் 8 : 21 (RCTA)
வெள்ளாட்டுக்கடா கிரேக்க அரசனைக் குறிக்கிறது; அதன் கண்களுக்கு நடுவிலிருந்து பெரிய கொம்பு முதல் அரசனாகும்.
தானியேல் 8 : 22 (RCTA)
அது முறிந்து போன பின்பு, அதற்குப் பதிலாக எழும்பிய நான்கு கொம்புகள், அந்த இனத்தாருள் எழும்பப் போகும் நான்கு அரசுகள் என்க; ஆனால் அவனுடைய ஆற்றல் இவற்றுக்கு இராது.
தானியேல் 8 : 23 (RCTA)
அவர்களுடைய ஆட்சி முடிவுற்ற பிறகு, அக்கிரமங்கள் மலிந்து நிறைவுறும் போது, முன்கோபமுள்ளவனும் கூர்மதி கொண்டவனுமாகிய ஓர் அரசன் தோன்றுவான்;
தானியேல் 8 : 24 (RCTA)
அவனுடைய வல்லமை பெருகும், ஆனால் அவனது சொந்த ஆற்றலால் அன்று- அஞ்சத் தக்க வகையில் அழிவு வேலை செய்வான்; செய்யும் செயலிலெல்லாம் வெற்றியே காண்பான், வல்லவர்களையும் பரிசுத்தர்களையும் அழிப்பான்.
தானியேல் 8 : 25 (RCTA)
வஞ்சகம் அவன் கையில் சிறந்த கருவியாய் இருக்கும், அவன் உள்ளம் இறுமாப்பால் நிறைந்திருக்கும்; எதிர்பாராத நேரத்தில் பலரைத் தாக்கிக் கொலைசெய்வான், இறுதியில் தலைவர்க்கெல்லாம் தலைவரை எதிர்ப்பான்; ஆயினும் மனிதன் எவனும் தலையிடாமலே, அவனே அழிந்து ஒழிந்துபோவான்.
தானியேல் 8 : 26 (RCTA)
இதுவரை சொல்லி வந்த காலை மாலைகள் பற்றிய காட்சி உண்மையானது, நீயோ இந்தக் காட்சியை மறைத்து வை; ஏனெனில் பல நாட்களுக்குப் பிறகே இது நடைபெறும்."
தானியேல் 8 : 27 (RCTA)
தானியேலாகிய நானோ சோர்வடைந்து சில நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தேன்; பிறகு எழுந்து அரசனின் அலுவல்களைச் செய்தேன்; ஆயினும் அந்தக் காட்சியினால் இன்னும் திகைப்புற்றிருந்தேன்; அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27