தானியேல் 7 : 1 (RCTA)
பபிலோனின் அரசனாகிய பல்தசாரின் முதலாண்டில் தானியேல் கனவு ஒன்று கண்டார்; அவர் படுக்கையில் இருக்கும் போது அவரது மனக்கண் முன் காட்சிகள் தோன்றின; பிறகு அவர் அந்தக் கனவை எழுதி வைத்து, அதனைச் சுருங்கச் சொன்னார்:
தானியேல் 7 : 2 (RCTA)
இரவில் நான் கண்ட காட்சி இதுவே: இதோ, வானத்தின் நாற்புறத்துக் காற்றுகளும் மாபெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
தானியேல் 7 : 3 (RCTA)
அப்போது வெவ்வேறு வடிவமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் கடலினின்று மேலெழும்பின.
தானியேல் 7 : 4 (RCTA)
அவற்றுள் முதல் மிருகம் கழுகின் இறக்கைகளையுடைய சிங்கத்தைப் போல் இருந்தது; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டது; மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
தானியேல் 7 : 5 (RCTA)
அடுத்தாற்போல், இதோ முற்றிலும் வேறானதொரு மிருகத்தைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த மிருகம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, பற்களிடையில் மூன்று விலாவெலும்புகளை வாயில் கவ்விக் கொண்டிருந்தது. 'எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.
தானியேல் 7 : 6 (RCTA)
இன்னும் நோக்கினேன்: இதோ, வேங்கை போலும் வேறொரு மிருகம் காணப்பட்டது; அதன் மேல் பறவையின் இறக்கைகளைப் போல நான்கு இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது.
தானியேல் 7 : 7 (RCTA)
இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் இதோ நான்காம் மிருகம் அச்சத்திற்குரியதாயும் வியப்பூட்டத்தக்கதாயும் மிகுந்த வலிமையுள்ளதாயும் இருக்கக் கண்டேன்; அதற்குப் பெரிய இருப்புப் பற்கள் இருந்தன; அது தான் விழுங்கியது போக மீதியை நொறுக்கிக் கால்களால் மிதித்துப் போடும்; இதற்குமுன் காணப்பட்ட மிருகங்களிலிருந்து இது வேறாகக் காணப்பட்டது; இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
தானியேல் 7 : 8 (RCTA)
அந்தக்கொம்புகளை நான் கவனித்துப் பாத்துக் கொண்டிருக்கையில், இதோ அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்பு அதற்கிருந்த கொம்புகள் மூன்று பிடுங்கப்பட்டன; இதோ, அந்தக் கொம்பில் மனித கண்களைப் போலக் கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் இருந்தன.
தானியேல் 7 : 9 (RCTA)
நான் பார்த்துக் கொண்டிருக்கையில், "அரியணைகள் அமைக்கப்பட்டன, நீண்ட ஆயுளுள்ளவர் ஆங்கமர்ந்தார்; அவருடைய ஆடை பனிபோல வெண்மையாயும், அவரது தலைமயிர் தூய பஞ்சு போலும் இருந்தன. அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும், அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
தானியேல் 7 : 10 (RCTA)
அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாறு புறப்பட்டது, புறப்பட்டு விரைவாய்ப் பாய்ந்தோடிற்று; ஆயிரமாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள், கோடான கோடிப் பேர் அவர் முன் நின்றார்கள்; அறங்கூறவையும் நீதி வழங்க அமர்ந்தது, நூல்களும் திறந்து வைக்கப்பட்டன.
தானியேல் 7 : 11 (RCTA)
அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் கவனித்துப் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதன் உடல் அழிந்து போயிற்று நெருப்பினால் எரிக்கப்படும்படி போடப்பட்டது.
தானியேல் 7 : 12 (RCTA)
மற்ற மிருகங்களின் வல்லமை பறிக்கப்பட்டது; அவற்றின் வாழ்நாட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்டன.
தானியேல் 7 : 13 (RCTA)
இரவில் நான் கண்ட காட்சியாவது: இதோ, வானத்தின் மேகங்கள் மீது மனுமகனைப் போன்ற ஒருவர் வந்தார்; நீண்ட ஆயுளுள்ளவரின் அருகில் வந்தார், அவர்முன் கொண்டு வரப்பட்டார்.
தானியேல் 7 : 14 (RCTA)
ஆட்சியும் மகிமையும் அரசுரிமையும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா மக்களும் இனத்தாரும் மொழியினரும் அவருக்கு ஊழியம் செய்வர். அவருடைய ஆட்சி என்றென்றும் நீடிக்கும், அதற்கு என்றுமே முடிவிராது; அவருக்கு அளிக்கப்பட்ட அரசுரிமை என்றுமே அழிந்து போகாது.
தானியேல் 7 : 15 (RCTA)
"என் மனம் திகிலுற்றது; தானியேலாகிய நான் அஞ்சி நடுங்கினேன்; என் மணக்கண் முன் தோன்றிய காட்சிகள் என்னைக் கலக்கத்திற்குள்ளாக்கின.
தானியேல் 7 : 16 (RCTA)
அருகில் நின்றிருந்தவர்களுள் ஒருவரை அண்டிப்போய், இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளையெல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்:
தானியேல் 7 : 17 (RCTA)
'இந்த நான்கு மிருகங்களும் பூமியில் எழும்பப் போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.
தானியேல் 7 : 18 (RCTA)
ஆனால் உன்னத கடவுளின் பரிசுத்தர்கள் அரசுரிமை பெறுவார்கள்; அந்த அரசுரிமையை என்றென்றைக்கும், நீடூழி காலங்களுக்கும் கொண்டிருப்பார்கள்.'
தானியேல் 7 : 19 (RCTA)
அதன்பின்னர், மற்ற மிருகங்களினும் வேறானதாகக் காணப்பட்டதும், மிகுந்த அச்சத்திற்குரியதும், இருப்புப்பற்கள், நகங்கள் கொண்டதாய், தான் தின்று நொறுக்கியது போக மீதியைக் கால்களால் மிதித்துப் போட்டதுமான அந்த நான்காம் மிருகத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன்;
தானியேல் 7 : 20 (RCTA)
அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் விழுந்து போக அவற்றினிடத்தில் எழும்பினதும், கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் கொண்டிருந்ததும், மற்றவர்களைக் காட்டிலும் பெரியதுமாயிருந்த அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
தானியேல் 7 : 21 (RCTA)
நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதோ அந்தக் கொம்பு பரிசுத்தர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்து அவர்களை வென்றது;
தானியேல் 7 : 22 (RCTA)
நீண்ட ஆயுளுள்ளவர் வந்து, உன்னதருடைய பரிசுத்தர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும் வரை போர் நடந்தது; அதன் பின் காலம் வந்தது; அப்போது பரிசுத்தர்கள் அரசுரிமை பெற்றுக் கொண்டார்கள்.
தானியேல் 7 : 23 (RCTA)
அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: 'அந்த நான்காம் மிருகம்: உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கிறது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது விழுங்கிவிடும், மிதித்து நொறுக்கிவிடும்; அந்தப் பத்துக் கொம்புகள்:
தானியேல் 7 : 24 (RCTA)
இந்த அரசினின்று பத்து மன்னர்கள் எழும்புவர்; அவர்களுக்குப்பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட இவன் வேறுபட்டவனாய் இருப்பான், அவர்களுள் மூவரைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான்.
தானியேல் 7 : 25 (RCTA)
அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான், உன்னதரின் பரிசுத்தர்களைத் துன்புறுத்துவான், நாள் கிழமைகளையும் சட்டத்தையும் மாற்றப் பார்ப்பான், அவர்களோ ஒருகாலம், இருகாலம், அரைகாலம் அளவும் அவனுடைய கையில் விடப்படுவர்.
தானியேல் 7 : 26 (RCTA)
ஆனால் அறங்கூறவையம் நீதி வழங்க அமரும், அவனுடைய அரசுரிமை அவனிடமிருந்து பறிக்கப்படும்; முடிவு வரை ஒடுக்கப்பட்டு அழிந்து போகும்.
தானியேல் 7 : 27 (RCTA)
அரசும் அரசுரிமையும், வானத்தின்கீழ் எங்கணுமுள்ள அரசுகளின் மகிமை பெருமையும் உன்னதரின் பரிசுத்தர்களுடைய இனத்தார்க்குத்தரப்படும்; அவர்களுடைய அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு. அரசர்கள் அனைவரும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.'
தானியேல் 7 : 28 (RCTA)
இவ்வாறு அவர் விளக்கம் கூறி முடித்தார்; தானியேலாகிய நான் என் நினைவுகளின் காரணமாய் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; ஆயினும் இவற்றை என் மனத்திலேயே வைத்துக்கொண்டேன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28