தானியேல் 6 : 1 (RCTA)
தாரியுஸ் என்பவன் தன் அரசெங்கணும் ஆட்சி நடத்தும்படி நூற்றிருபது மாநிலத்தலைவர்களையும்,
தானியேல் 6 : 2 (RCTA)
இவர்களுக்கு மேல் ஆளுநர் மூவரையும் ஏற்படுத்துவது நலமெனக் கண்டான்; அரசனுக்கு நஷ்டம் வராதபடி அந்த மாநிலத் தலைவர்கள் இவர்களுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்; ஆளுநர் மூவருள் தானியேலும் ஒருவர்.
தானியேல் 6 : 3 (RCTA)
இந்தத் தானியேல் மற்ற ஆளுநர்களையும் மாநிலத் தலைவர்களையும் விட மேம்பட்டு விளங்கினார்; ஏனெனில் கடவுளின் ஆவி சிறப்பான வகையில் அவரிடத்தில் இருந்தது.
தானியேல் 6 : 4 (RCTA)
தன் அரசு முழுமைக்கும் அவரை அதிகாரியாக ஏற்படுத்தலாமென அரசன் நினைத்துக் கொண்டிருந்தான்; ஆதலால் ஆளுநர்களும் மாநிலத் தலைவர்களும் மேற்பார்வையிடும் காரியத்தில் தானியேலின் மீது குற்றம் சாட்டத் தேடினார்கள்; ஆனால் அவர் உண்மையுள்ளவராய் இருந்ததால், அவரிடத்தில் யாதொரு குற்றத்தையும் தவற்றையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தானியேல் 6 : 5 (RCTA)
அப்போது அந்த மனிதர்கள், "நாம் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளைச் சார்ந்த காரியத்தில் தான் குற்றம் கண்டுபிடிக்க முடியுமே தவிர வேறெதிலும் குற்றம் காண முடியாது" என்றார்கள்.
தானியேல் 6 : 6 (RCTA)
ஆகவே, அந்த ஆளுநர்களும் மாநிலத் தலைவர்களும் அரசனிடம் வந்து வஞ்சகமாய் சொன்னது: "தாரியிஸ் அரசே, நீர் நீடூழி வாழ்க!
தானியேல் 6 : 7 (RCTA)
உமது அரசின் ஆளுநர்களும் அதிகாரிகளும் மாநிலத் தலைவர்களும் அமைச்சர்களும் நாட்டின் முதல்வர்களும் ஒருமனப்பட ஓர் ஆலோசனை கூறுகின்றனர்; அதாவது: முப்பது நாள்வரையில் அரசனாகிய உம்மிடமன்றி வெறெந்தக் கடவுளிடமோ மனிதனிடமோ யாதொரு மன்றாட்டைக் கோருகின்ற எந்த மனிதனும் சிங்கங்களின் குகையில் போடப்படுவான் என்று நீர் ஓர் உறுதியான கட்டளை பிறப்பித்து, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வாரும்.
தானியேல் 6 : 8 (RCTA)
ஆகையால், அரசே, இப்பொழுதே அந்தக் கட்டளையைப் பிறப்பித்து, ஆணைப்பத்திரத்தில் கையெழுத்திடும்; அப்போது தான் மேதியர், பேர்சியர்களின் சட்டப்படி அதனை மாற்றவோ மீறவோ முடியாது" என்றார்கள்.
தானியேல் 6 : 9 (RCTA)
மன்னன் தாரியுஸ் அவ்வாறே ஆணைப்பத்திரத்தில் கையொப்பமிட்டுச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தான்.
தானியேல் 6 : 10 (RCTA)
தானியேல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்ததை அறிந்து தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டின் மேலறையின் பலகணிகள் யெருசலேமின் பக்கமாய்த் திறந்திருந்தன. தமது வழக்கப்படியே நாடோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடிப் புகழ்ந்தார்.
தானியேல் 6 : 11 (RCTA)
வஞ்சகமாய் வந்து உள்ளே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்கள், தானியேல் தம் கடவுளை நினைத்துச் செபிப்பதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.
தானியேல் 6 : 12 (RCTA)
அப்போது அவர்கள் அரசனிடம் வந்து, அரசனின் சட்டத்தைக் குறிப்பிட்டு, "அரசே, முப்பது நாள்வரையில் அரசனாகிய உம்மிடமன்றி வேறெந்தக் கடவுளிடமோ மனிதனிடமோ யாதொரு மன்றாட்டைக் கோருகின்ற எந்த மனிதனும் சிங்கங்களின் குகைகளில் போடப்படுவான் என்று நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?" என்றார்கள். அதற்கு அரசன், "மேதியர், பேர்சியர்களின் சட்டப்படி நான் பிறப்பித்த கட்டளை நிலையானது, அதை எவரும் மாற்ற முடியாது" என்றான்.
தானியேல் 6 : 13 (RCTA)
உடனே அவர்கள் அரசனை நோக்கி, "சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட யூதர்களுள் ஒருவனான தானியேல் என்பவன் உமது சட்டத்தையும், நீர் பிறப்பித்த கட்டளையையும் பொருட்படுத்தவில்லை; ஆனால் நாடோறும் மூன்று வேளையும் அவன் செபத்தில் ஆழ்ந்திருக்கிறான்" என்றார்கள்.
தானியேல் 6 : 14 (RCTA)
அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி செய்து கொண்டு அன்று மாலை பொழுதிறங்கும் வரையில் அவரைக் காக்க முயற்சி செய்தான்.
தானியேல் 6 : 15 (RCTA)
ஆனால் அந்த மனிதர்கள் அரசனின் எண்ணத்தை அறிந்து கொண்டு, வஞ்சகமாய் வந்து அவனை நோக்கி, "அரசன் ஏற்படுத்திய கட்டளையை மாற்ற முடியாது என்பது மேதியர், பேர்சியர்களின் சட்டம்; அரசே, அதை உமக்கு நினைவூட்டிக் கொள்ளுகிறோம்" என்றனர்.
தானியேல் 6 : 16 (RCTA)
ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி அவர்கள் தானியேலைக் கொண்டு வந்து சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அப்போது அரசன் தானியேலை நோக்கி, "நீ இடைவிடாமல் வழிபடுகிற உன் கடவுள் உன்னைக் காப்பாராக!" என்றான்.
தானியேல் 6 : 17 (RCTA)
பெரிய கல்லொன்றைக் கொண்டு வந்து குகையின் வாயிலை அடைந்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தினாலும், தன் பெருங்குடி மக்களின் மோதிரங்களாலும் அதில் முத்திரையிட்டான்.
தானியேல் 6 : 18 (RCTA)
அரசன் அரண்மனைக்குத் திரும்பினான்; அன்றிரவு அவன் உண்ணவில்லை; வைப்பாட்டிகளையும் உள்ளே வர விடவில்லை; அவனுக்கு உறக்கமும் பிடிக்கவில்லை.
தானியேல் 6 : 19 (RCTA)
கிழக்கு வெளுக்கும் போது அரசன் எழுந்திருந்து சிங்கங்களின் குகைக்கு விரைந்து சென்றான்.
தானியேல் 6 : 20 (RCTA)
அவன் குகையின் அருகில் வந்ததும், துயரக் குரலில் தானியேலைக் கூப்பிட்டு, "தானியேலே, உயிருள்ள கடவுளின் ஊழியனே, நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னைச் சிங்கங்களினின்று காக்க வல்லவராய் இருந்தாரா?" என்று கேட்டான்.
தானியேல் 6 : 21 (RCTA)
அதற்குத் தானியேல் அரசனிடம், "அரசே, நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்;
தானியேல் 6 : 22 (RCTA)
அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை; ஏனெனில் அவர் முன்னிலையில் என்னிடம் பரிசுத்தமே காணப்பட்டது; மேலும், அரசே, உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவன்" என்று மறுமொழி கொடுத்தார்.
தானியேல் 6 : 23 (RCTA)
அப்போது அரசன் மிகவும் மனமகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து தூக்கி வெளிப்படுத்தும் படி கட்டளையிட்டான்; அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே எடுத்தார்கள்; அவருக்கு யாதொரு தீங்கும் ஏற்படவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை நம்பினார்.
தானியேல் 6 : 24 (RCTA)
அதன்பிறகு, அரசன் தானியேலைக் குற்றம் சாட்டிய அந்த வஞ்சகர்களைக் கொண்டு வரக் கட்டளையிட்டான்; அவர்களும், அவர்களுடைய மனைவி மக்களும் சிங்கங்களின் குகையிலே போடப்பட்டார்கள்; அவர்கள் குகையில் விழுமுன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டன.
தானியேல் 6 : 25 (RCTA)
அப்போது தாரியுஸ் அரசன் நாடெங்கணுமுள்ள எல்லா மக்களுக்கும் இனத்தார்களுக்கும் மொழியினர்களுக்கும் ஓர் அறிக்கை விடுத்தான்: "உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
தானியேல் 6 : 26 (RCTA)
என் ஆளுகைக்குட்பட்ட அரசெங்கணுமுள்ள மக்கள் அனைவரும் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்கியிருத்தல் வேண்டும்- இது என் ஆணை: "ஏனெனில் அவரே உயிருள்ள கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கிறார்; அவருடைய அரசு என்றும் அழிவுறாது, அவருடைய ஆட்சிக்கு முடிவிராது.
தானியேல் 6 : 27 (RCTA)
தானியேலைச் சிங்கக் குகையினின்று காப்பாற்றினவர் அவரே; அவரே மீட்பவர், விடுதலை கொடுப்பவர், விண்ணிலும் மண்ணிலும் விந்தைகள் செய்கிறார்."
தானியேல் 6 : 28 (RCTA)
இவ்வாறு, தானியேல் தாரியுசின் ஆட்சிக் காலத்திலும் பேர்சியனாகிய கீருஸ் மன்னனின் ஆட்சிக்காலத்திலும் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28