தானியேல் 4 : 1 (RCTA)
(3:98) கனவில் கிடைத்த எச்சரிக்கையும் நபுக்கோதனசாருக்குப் பைத்தியம் பிடித்தலும்: நபுக்கோதனசார் அரசனாகிய நான் உலகில் எங்கணுமுள்ள எல்லா மக்களுக்கும் இனத்தார்க்கும் மொழியினர்க்கும் அறிவிப்பது: "உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக!
தானியேல் 4 : 2 (RCTA)
(3:99) உன்னத கடவுள் எனக்காக வியத்தகு அடையாளங்களையும் விந்தைகளையும் செய்தருளினார்; அவற்றை அனைவர்க்கும் வெளிப்படையாய்ச் சொல்லிக்காட்ட விரும்புகிறேன்:
தானியேல் 4 : 3 (RCTA)
(3:100) அவர் செய்து காட்டிய அடையாளங்கள் எவ்வளவு உயர்ந்தவை! அவர் செய்த விந்தைகள் எவ்வளவு வல்லமை மிக்கவை! அவரது அரசு முடிவில்லாத அரசு, அவருடைய வல்லமை என்றென்றும் இருக்கிறது."
தானியேல் 4 : 4 (RCTA)
(1) நபுக்கோதனசாராகிய நான் என் வீட்டில் அமைதியோடும், என் அரண்மனையில் வளமையோடும் இருந்து வந்தேன்.
தானியேல் 4 : 5 (RCTA)
(2) ஒருநாள் கனவு ஒன்று கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; நான் படுத்திருக்கையில் எனக்குண்டான நினைவுகளும், என் மனக் கண்முன் தோன்றிய காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
தானியேல் 4 : 6 (RCTA)
(3) அப்போது, நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கும்படியாகப் பபிலோனிய ஞானிகள் யாவரும் என் முன்னிலையில் வந்து கூட வேண்டும் என்னும் கட்டளையைப் பிறப்பித்தேன்.
தானியேல் 4 : 7 (RCTA)
(4) அவ்வாறே, ஞானிகளும் நிமித்தர்களும் கல்தேயரும் குறிசொல்கிறவர்களும் வந்து கூடினர்; அவர்களோ எனக்கு அதன் உட்பொருளை விளக்க முடியவில்லை.
தானியேல் 4 : 8 (RCTA)
(5) கடைசியாக, என் கடவுளின் திருப்பெயராகிய பல்தசார் என்னும் பெயரைக் கொண்ட தானியேல் வந்தார்; அவரிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி நிறைந்திருந்துள்ளது; நான் கண்ட கனவை அவரிடத்தில் சொன்னேன்:
தானியேல் 4 : 9 (RCTA)
(6) ஞானிகளின் தலைவராகிய பல்தசாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடம் நிறைந்துள்ளது என்றும், எந்த மறைபொளையும் அறிவது உமக்குக் கடினமன்று என்றும் நான் அறிந்திருக்கிறேன்; நான் கண்ட கனவில் தோன்றிய காட்சிகளையும், அவற்றின் உட்பொருளையும் விளக்குக!
தானியேல் 4 : 10 (RCTA)
(7) நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக் கண்முன் தோன்றிய காட்சி இதுவே: "இதோ, உலகின் நடுவில் மரமொன்றைக் கண்டேன், அது மிகவும் உயரமானதாய் இருந்தது;
தானியேல் 4 : 11 (RCTA)
(8) அந்த மரம் மிகப் பெரிதாகவும், வலுவுள்ளதாகவும், வானத்தைத் தொடுமளவு உயரமாகவும் வளர்ந்தது; உலகின் எல்லைகளிடமிருந்து கூட அதைப் பார்க்கக் கூடும்.
தானியேல் 4 : 12 (RCTA)
(9) அதன் இலைகள் மிகவும் பசுமையாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்க்கும் போதிய உணவு இருந்தது. அதன் கீழ் காட்டு மிருகங்கள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; உயிர்கள் அனைத்தும் அதிலிருந்து உணவு பெற்றன.
தானியேல் 4 : 13 (RCTA)
(10) நான் படுத்திருக்கையில் என் மனக் கண்முன் இந்தக் காட்சிகள் தோன்றியதைக் கண்டேன்; அப்போது, இதோ, காவல் வீரராகிய பரிசுத்தர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார்.
தானியேல் 4 : 14 (RCTA)
(11) அவர் தமது குரலையுயர்த்திக் கூவியது இதுவே: 'இந்த மரத்தை வெட்டுங்கள், கிளைகளைத் தறித்துப் போடுங்கள்; இதன் இலைகளையெல்லாம் பறித்தெறியுங்கள், கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் மிருகங்கள் ஓடிப் போகட்டும், இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
தானியேல் 4 : 15 (RCTA)
(12) ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவிடுங்கள்; இரும்பும் வெண்கலமுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் இருக்கக்கடவது. வானத்தின் பனியால் நனைந்து கிடக்கட்டும். தரையின் புல்வெளியில் மிருகங்களோடு இருக்கட்டும்.
தானியேல் 4 : 16 (RCTA)
(13) மனித உள்ளமாயிருந்த அவன் உள்ளம் மாறி மிருகத்தின் உள்ளமாய் ஆகக்கடவது, இவ்வாறு காலப் பகுதிகள் ஏழு அவனைக் கடந்து செல்லட்டும்.
தானியேல் 4 : 17 (RCTA)
(14) காவல் வீரர்களின் தீர்ப்புப்படி இது விதிக்கப்பட்டது, பரிசுத்தரின் வாய்மொழியும் விண்ணப்பமும் இதுவே; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவனையும் அதற்குத் தலைவனாக்குகிறார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.'
தானியேல் 4 : 18 (RCTA)
(15) நபுக்கோதனசார் அரசனாகிய நான் கண்ட கனவு இதுவே; பல்தசாரே, இதன் உட்பொருளை எனக்கு விரைவில் தெரிவியும்; என் நாட்டிலுள்ள ஞானிகளுள் எவராலும் இதற்கு உட்பொருள் கூற இயலவில்லை; நீர் இதைத் தெரிவிக்கக் கூடியவர்; ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடத்தில் இருக்கிறது."
தானியேல் 4 : 19 (RCTA)
(16) அப்போது, பல்தசார் என்னும் பெயர் கொண்ட தானியேல் தனக்குள்ளே சில வினாடிகள் பேசாமல் சிந்திக்கத் துவக்கினார்; அவருடைய சிந்தனைகள் அவருக்குக் கலக்கத்தைக் கொடுத்தன; அதைக் கண்ட அரசன் அவரை நோக்கி. "பல்தசார் கனவும் உட்பொருளும் உம்மைக் கலங்க வைக்காதிருக்கட்டும்" என்றான்; பல்தசார் மறுமொழியாக, "என் ஆண்டவனே, அந்தக் கனவு உம்மை வெறுப்போருக்கும், அதன் உட்பொருள் உம் எதிரிகளுக்கும் பலிப்பதாக!
தானியேல் 4 : 20 (RCTA)
(17) நீர் பார்த்த மரம் மிக உயரமானதாகவும் மிகப் பெரிதாகவும், வலுவுள்ளதாகவும், வானத்தைத் தொடுமளவு உயரமாகவும் வளர்ந்து, உலகின் எல்லைகளிலிருந்து கூடப் பார்க்கக் கூடியதாய் இருந்தது;
தானியேல் 4 : 21 (RCTA)
(18) அதன் இலைகள் மிகவும் பசுமையாய் இருந்தன; மரத்தில் கனிகளும் மிகுதியாய் இருந்தன; எல்லா உயிர்க்கும் அதில் போதிய உணவு இருந்தது. அதன் கீழ் காட்டு மிருகங்கள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன.
தானியேல் 4 : 22 (RCTA)
(19) அரசே, அந்த மரம் நீர்தான்; நீர் மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் வளர்ந்தீர்; உமது மகிமை வளர்ந்து வானமட்டும் உயர்ந்தது; உம்முடைய வல்லமை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
தானியேல் 4 : 23 (RCTA)
(20) மேலும் அரசராகிய நீர், காவல் வீரராகிய பரிசுத்தர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததைக் கண்டீர்; அவர், 'இந்த மரத்தை வெட்டி அழித்துப் போடுங்கள், ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டு விடுங்கள், இரும்பும் வெண்கலமுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல் வெளியின் புற்கள் நடுவில் வானத்தின் பனியால் நனைந்து கிடக்கட்டும், காலப்பகுதிகள் ஏழு கடக்கும் மட்டும் அவனுடைய உணவு மிருகங்களின் உணவாய் இருக்கட்டும்' என்று சொன்னதையும் கேட்டீர்.
தானியேல் 4 : 24 (RCTA)
(21) அரசே, அதன் உட்பொருள் இதுவே: இந்தக் கனவு என் ஆண்டவனாகிய அரசன் ¢மேல் உன்னதர் இட்ட தீர்ப்பாகும்:
தானியேல் 4 : 25 (RCTA)
(22) மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர், மிருகங்களோடும் கொடிய விலங்குகளோடும் வாழ்வீர்; மாட்டைப் போல நீர் புல்லை மேய்வீர்; வானத்தின் பனியிலே நனைந்து கிடப்பீர்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீர் அறிந்து கொள்ளும்வரையில், காலப்பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறு இருக்கும்.
தானியேல் 4 : 26 (RCTA)
(23) ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரம் விடப்பட வேண்டும் என்று பிறந்த கட்டளையின் பொருள்: எல்லா அதிகாரமும் விண்ணிலிருந்து வரவேண்டுமென்பதை நீர் அறிந்து கொண்ட பிறகு உம்முடைய அரசு உமக்கு உரிமையாய் நிலைநிற்கும் என்பதே.
தானியேல் 4 : 27 (RCTA)
(24) ஆகையால், அரசே, என் ஆலோசனைனக்குச் செவிசாயும்; அறச் செயல்களால் உம் பாவங்களையும், ஏழைகளுக்குச் செய்கிற இரக்கச் செயல்களால் உம் அக்கிரமங்களையும் போக்கி விடும்; அப்பொழுது நீர் அமைதியாய் நீடு வாழ்வீர்" என்றார்.
தானியேல் 4 : 28 (RCTA)
(25) இவை யாவும் நபுக்கோதனசார் அரசனுக்கு நேர்ந்தன.
தானியேல் 4 : 29 (RCTA)
(26) பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அரசன் பபிலோன் நகரத்து அரண்மனையின் மேல்மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.
தானியேல் 4 : 30 (RCTA)
(27) அப்போது அவன், "என் வல்லமையின் ஆற்றலால் அரச குலத்தின் அரண்மனை நகராகவும், என் மகிமையின் சிறப்புக்கொரு சின்னமாகவும் நான் கட்டிய மாநகரன்றோ இந்தப் பபிலோன்!" என்றான்.
தானியேல் 4 : 31 (RCTA)
(28) இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்குமுன்பே வானத்திலிருந்து ஒரு குரலொலி கேட்டது: "நபுக்கோதனசார் அரசனே, உனக்கே இந்தச் சொல்: உன்னுடைய அரசு உன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
தானியேல் 4 : 32 (RCTA)
(29) மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய், காட்டு மிருகங்களோடு வாழ்வாய்; மாட்டைப் போல நீ புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளாகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீ அறிந்து கொள்ளும் வரையில் காலப் பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறே இருப்பாய்."
தானியேல் 4 : 33 (RCTA)
(30) அப்பொழுதே இந்த வாக்கு நபுக்கோதனசாருக்குப் பலித்தது; மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான்; மாட்டைப் போலப் புல்லை மேய்ந்தான்; அவனுடைய உடல் வானத்தின் பனியினால் நனைந்தது; அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கின.
தானியேல் 4 : 34 (RCTA)
(31) குறிக்கப்பட்ட நாட்கள் சென்ற பிறகு, நபுக்கோதனசாராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; நானோ உன்னதரைப் போற்றினேன்: "என்றென்றும் வாழும் அவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன், ஏனெனில் அவருடைய வல்லமை என்றென்றும் உள்ளது, அவருடைய அரசு தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.
தானியேல் 4 : 35 (RCTA)
(32) உலகத்தார் அனைவரும் அவர் முன் ஒன்றுமே இல்லை, வானத்தின் சேனைகள் நடுவிலும், உலகத்துக் குடிமக்கள் நடுவிலும் தம் திருவுளத்தின் படியே அவர் செயலாற்றுகிறார்; அவரது கையைத் தடுக்க வல்லவனோ, 'ஏன் இப்படிச் செய்தீர்?' எனக் கேட்கக் கூடியவனோ இல்லை."
தானியேல் 4 : 36 (RCTA)
(33) அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது; என் அரசின் மேன்மைக்காக மாட்சியும் மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன; என் அமைச்சர்களும் தலைவர்களும் என்னைத் தேடி வந்தார்கள்; எனது அரசில் நான் திரும்பவும் நிலைநாட்டப் பட்டேன்; முன்னை விட மிகுந்த மகிமை எனக்குக் கிடைத்தது.
தானியேல் 4 : 37 (RCTA)
(34) ஆகையால் நபுக்கோதனசாராகிய நான் இப்போது, "விண்ணக அரசரைப் புகழ்கிறேன், அவரை உயர்த்தி மகிமைப் படுத்துகிறேன்; அவருடைய செயல்கள் யாவும் சரியானவை, அவருடைய வழிகள் அனைத்தும் நீதியானவை, இறுமாப்புக் கொண்டவர்களாய் நடப்பவர்களைத் தரைமட்டும் அவர் தாழ்த்த வல்லவர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37