தானியேல் 3 : 1 (RCTA)
நபுக்கோதனசார் அரசன் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையொன்றைச் செய்வித்து, அதைப் பபிலோன் மாநிலத்திலிருந்த தூரா என்னும் சமவெளியில் நாட்டி வைத்தான்.
தானியேல் 3 : 2 (RCTA)
பின்பு, மாநிலத் தலைவர்களையும் அதிகாரிகளையும் ஆளுநர்களையும் ஆலோசனைக் குழுவினர்களையும் நிதிப்பொறுப்பாளர்களையும் நீதிபதிகளையும் குற்ற விசாரணைக்காரர்களையும், மாநிலங்களின் மற்றெல்லா அலுவலர்களையும் நபுக்கோதனசார் அரசன் தான் நிறுத்திய படிமத்தின் பிரதிட்டைக்கு வரும்படி கட்டளை அனுப்பினான்.
தானியேல் 3 : 3 (RCTA)
அவ்வாறே மாநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் ஆளுநர்களும் ஆலோசனைக் குழுவினர்களும் நிதிப் பொறுப்பாளர்களும் நீதிபதிகளும் குற்ற விசாரணைக்காரர்களும், மாநிலங்களின் மற்றறெல்லா அலுவலர்களும் மன்னன் நபுக்கோதனசார் நாட்டிய படிமத்தின் பிரதிட்டைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்; நபுக்கோதனசார் நிறுத்திய சிலையின் முன்னால் நின்றார்கள்.
தானியேல் 3 : 4 (RCTA)
கட்டியக்காரன் உரத்த சத்தமாய்க் கூவி, "இதனால் மக்களனைவருக்கும், எல்லா இனத்தவர்க்கும் மொழியினர்க்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்:
தானியேல் 3 : 5 (RCTA)
எக்காளம், நாகசுரம், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியிலே, நீங்கள் தாழ விழுந்து, நபுக்கோதனசார் அரசன் நிறுத்திய பொற்சிலையைப் பணிதல் வேண்டும்.
தானியேல் 3 : 6 (RCTA)
எவனாகிலும் தாழ விழுந்து பணியவில்லையெனில் அவன் அந்நேரமே தீச்சூளையில் போடப்படுவான்" என்றான்.
தானியேல் 3 : 7 (RCTA)
ஆகையால், எக்காளம், நாசுகரம் கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடனே, எல்லா மொழியினரும் தாழ விழுந்து மன்னன் நபுக்கோதனசார் நிறுத்திய சிலையைப் பணிந்து தொழுதார்கள்.
தானியேல் 3 : 8 (RCTA)
உடனே, அப்பொழுது கல்தேயர் சிலர் அணுகி வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள்.
தானியேல் 3 : 9 (RCTA)
மன்னன் நபுக்கோதனசாரிடம் அவர்கள் கூறினர்: "அரசே, நீர் நீடுழி வாழ்க!
தானியேல் 3 : 10 (RCTA)
அரசே, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழ விழுந்து பொற்சிலையைப் பணிய வேண்டும் என்றொரு கட்டளை பிறப்பித்தீர்;
தானியேல் 3 : 11 (RCTA)
எவனாகிலும் தாழ விழுந்து பணியாமற் போனால் அவன் எரிகிற தீச்சூளையில் போடப்படுவான் என்றும் நீர் ஆணை விடுத்தீர்.
தானியேல் 3 : 12 (RCTA)
ஆனால் அரசே, பபிலோன் மாநிலத்தின் காரியங்களைக் கண்காணிக்கும்படி நீர் ஏற்படுத்திய சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்னும் யூதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் உமது கட்டளையை அவமதித்து, உம் தெய்வங்களை வணங்காமல், நீர் நாட்டி வைத்த பொற்சிலையைப் பணியாமலிருக்கிறார்கள்."
தானியேல் 3 : 13 (RCTA)
அப்போது நபுக்கோதனசார் கடுஞ்சினங் கொண்டு, சித்ராக்கையும் மிசாக்கையும் அப்தேநாகோவையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்; உடனே அவர்கள் அரசன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர்.
தானியேல் 3 : 14 (RCTA)
நபுக்கோதனசார் அவர்களை நோக்கி, "சித்ராக், மிசாக், அப்தேநாகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்காமலும், நான் நாட்டிய பொற்சிலையைப் பணியாமலும் இருந்தது உண்மை தானா?
தானியேல் 3 : 15 (RCTA)
இப்போதாவது, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் போது, நீங்கள் தாழவிழுந்து நான் செய்த சிலையைப் பணியத் தயாராயிருக்கிறீர்களா? பணியா விட்டால் அந்த நொடியிலே எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள்; உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய கடவுள் யார் இருக்கிறார்?" என்றான்.
தானியேல் 3 : 16 (RCTA)
அதற்குச் சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் மன்னன் நபுக்கோதனசாரை நோக்கி, "இதைப்பற்றி உமக்கு மறுமொழி சொல்ல எங்களுக்குக் கடமையில்லை.
தானியேல் 3 : 17 (RCTA)
ஏனெனில், அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகிற தீச்சூளையினின்றும் உம் கைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி மீட்க வல்லவர்.
தானியேல் 3 : 18 (RCTA)
அப்படியே அவருக்கு மனமில்லாமற்போயினும் உம்முடைய தெய்வங்களுக்குப் பணிபுரியோம், நீர் நாட்டிய பொற்சிலையைப் பணிய மாட்டோம்; இதெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கட்டும், அரசே" என்றார்கள்.
தானியேல் 3 : 19 (RCTA)
அப்போது மன்னன் நபுக்கோதனசாருக்கு கடுஞ்சின மூண்டது; கடுகடுப்பான முகத்தோடு சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களைப் பார்த்தான்; சாதாரணமாய்ச் சூடாக்குவதை விடத் தீச்சூளையை ஏழு மடங்கு மிகுதியாய்ச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
தானியேல் 3 : 20 (RCTA)
பின்பு சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களின் கால்களைக் கட்டி, அவர்களை அந்த எரிகிற சூளையில் போடும்படி தன் படைவீரர்களுள் மிகுந்த உடல் வலிமையுள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.
தானியேல் 3 : 21 (RCTA)
உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேற்போர்வையோடும் தலைப்பாகையோடும் மிதியடிகளோடும் ஆடைகளோடும் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டி எரிகிற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்.
தானியேல் 3 : 22 (RCTA)
ஏனெனில் அரசனின் கட்டளையை உடனடியாய் நிறைவேற்ற வேண்டியிருந்தது; தீச்சூளையோ மிக வெப்பமாய் இருந்தது; ஆகையால் சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரைத் தீச்சூளையில் எரிவதற்குத் தூக்கிச் சென்றவர்களை அந்தத் தீப்பிழம்பு சுட்டெரித்துச் சாகடித்தது.
தானியேல் 3 : 23 (RCTA)
சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்.
தானியேல் 3 : 24 (RCTA)
(91) அரசன் புதுமையை ஏற்றுக் கொள்ளுகிறான்: அப்போது மன்னன் நபுக்கோதனசார் வியப்புற்று விரைந்தெழுந்தான்; தன் அமைச்சர்களை நோக்கி, "மூன்று மனிதர்களையல்லவா கட்டி நெருப்பின் நடுவில் எறிந்தோம்?" என்று வினவினான்; அதற்கு அவர்கள், "ஆம், அரசே" என்று விடை தந்தனர்.
தானியேல் 3 : 25 (RCTA)
(92) அதற்கு அவன், "கட்டவிழ்க்கப் பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் இதோ, நான்கு பேர் உலாவுகிறதை நான் காண்கிறேனே! அவர்களுக்கோ ஒருவகைத் துன்பமும் நேரவில்லை; மேலும் நான்காம் பேர்வழியின் சாயல் உம்பருலகத்தார் சாயல் போல் இருக்கிறதே!" என்றான்.
தானியேல் 3 : 26 (RCTA)
(93) அப்போது நபுக்கோதனசார் எரிகிற தீச்சூளையின் வாயிலண்டை வந்து, "உன்னத கடவுளின் ஊழியர்களாகிய சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரே, வெளியே வாருங்கள்" என்றான். உடனே சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்கள் தீயின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
தானியேல் 3 : 27 (RCTA)
(95) ஆலோசனைக்காரர்களும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீயே படாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய மேற்போர்வை தீயாமலும், அவர்களிடத்தில் நெருப்பின் புகை நாற்றம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்:
தானியேல் 3 : 28 (RCTA)
(95b) அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.
தானியேல் 3 : 29 (RCTA)
(96) ஆதலால், சித்ராக், மிசாக், அப்தேநாகோ இவர்களின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறுகிற எந்த மக்கள் குலத்தவனும் எந்த இனத்தானும் எந்த மொழியினனும் வாளுக்கு இரையாகி மாண்டு போவான் என்றும், அவனுடைய வீடும் தரையாய் மீட்கும் ஆற்றலுள்ள கடவுள் வேறொருவருமில்லை."
தானியேல் 3 : 30 (RCTA)
(97) பிறகு அரசன், சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களைப் பபிலோன் மாநிலத்தில் பெருமையளித்து உயர்த்தினான்.
❮
❯