தானியேல் 2 : 1 (RCTA)
நபுக்கோதனசாரின் இரண்டாம் ஆட்சியாண்டில், நபுக்கோதனசார் கனவுகள் சிலகண்டான்; அதனால் அவன் உள்ளம் கலங்கினான், உறக்கமின்றித் தவித்தான்.
தானியேல் 2 : 2 (RCTA)
அப்போது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும் படி அறிஞர்களையும் நிமித்திகர்களையும் மந்திரவாதிகளையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான்; அவர்களும் வந்து அரசனுக்கு முன்பாக நின்றார்கள்.
தானியேல் 2 : 3 (RCTA)
அரசன் அவர்களை நோக்கி, "நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்" என்றான்.
தானியேல் 2 : 4 (RCTA)
அப்போது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமாயிக் மொழியில்) "அரசே, நீர் நீடுழி வாழ்க! கண்ட கனவை நீர் உம் ஊழியர்களுக்குச் சொல்லுவீராகில், அதன் பொருளை உமக்கு விளக்குவோம்" என்று கூறினார்கள்.
தானியேல் 2 : 5 (RCTA)
அரசன் கல்தேயருக்குக் கூறிய மறுமொழி இதுவே: "நீங்கள் நான் கண்ட கனவையும், அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்காமற் போனால் சின்னாபின்னமாய்க் கிழிக்கப்படுவீர்கள்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு.
தானியேல் 2 : 6 (RCTA)
ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் தெரிவிப்பீர்காளகில் வெகுமதிகளும் பரிசுகளும் மிகுந்த மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்; ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்குத் தெரிவியுங்கள்."
தானியேல் 2 : 7 (RCTA)
அதற்கு அவர்கள் மறுமொழியாக, "அரசர் கனவைத் தம் அடியார்களுக்குச் சொல்லட்டும்; அப்போது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்றார்கள்.
தானியேல் 2 : 8 (RCTA)
அதற்கு அரசன் கூறினான்: "நான் முடிவு செய்து விட்டேன் என்பதை அறிந்து நீங்கள் காலந்தாழ்த்தப் பார்க்கிறீர்கள்; இது எனக்குத் தெரியாமலில்லை;
தானியேல் 2 : 9 (RCTA)
கனவு இன்னதென்று வெளிப்படுத்த உங்களால் இயலாமற் போனால், அதன் உட்பொருளையும் தெரிவிக்க உங்களால் முடியாதென்றே நான் முடிவு செய்ய வேண்டியுள்ளது; பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்லிக் காலத்தைப் போக்கப் பார்க்கிறீர்கள்; ஆதலால் கனவை நீங்கள் சொல்லுங்கள்; அப்போது தான் அதன் உட்பொருளையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிந்து கொள்வேன்."
தானியேல் 2 : 10 (RCTA)
கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, "அரசே, நீர் கேட்கின்ற காரியத்தைச் செய்யக்கூடிய மனிதன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; ஏனெனில் மகிமையும் வல்லமையும் கொண்ட எந்த அரசனும் இத்தகைய காரியத்தை நிமித்திகனிடமாவது மந்திரவாதியிடமாவது கல்தேயனிடமாவது கேட்டது கிடையாது.
தானியேல் 2 : 11 (RCTA)
ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களன்றி வேறெவரும் அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால் அற்ப மனிதர்கள் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!" என்று மறுமொழி கூறினார்கள்.
தானியேல் 2 : 12 (RCTA)
அரசன் இதைக் கேட்டுக் கடுங்கோபமும் சீற்றமும் கொண்டான்; பபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி ஆணை பிறப்பித்தான்.
தானியேல் 2 : 13 (RCTA)
ஆணை பிறந்தவுடனே ஞானிகளைக் கொலை செய்யத் தேடும் போது தானியேலையும்; அவர் தோழர்களையும் கூடக் கொலைச் செய்யத் தேடினார்கள்.
தானியேல் 2 : 14 (RCTA)
பபிலோனிய ஞானிகளைக் கொலை செய்யப் புறப்பட்டவனும், அரசனுடைய மெய்க்காவலர்களின் தலைவனுமாகிய அரியோக்கிடம் தானியேல் விவேகத்தோடும் எச்சரிக்கையோடும் விசாரித்தார்.
தானியேல் 2 : 15 (RCTA)
இத்துணைக் கொடிய கட்டளையொண்று அரசனிடமிருந்து பிறக்கக் காரணமென்ன என்று அரசனின் அதிகாரம் பெற்றவனைக் கேட்டார்; அப்போது அரியோக்கு என்பவன் தானியேலுக்குக் காரணத்தை விளக்கினான்.
தானியேல் 2 : 16 (RCTA)
உடனே தானியேல் அரசனிடம் போய்க் கனவின் உட்பொருளையும் அரசனுக்கு விளக்கிக் காட்டத் தமக்குத் தவணை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தானியேல் 2 : 17 (RCTA)
பின்னர் தானியேல் வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தம் தோழர்களான அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் ஆகியவர்களிடத்தில் செய்தியைக் கூறினார்:
தானியேல் 2 : 18 (RCTA)
கூறி, அவரும், அவருடைய தோழர்களும் பபிலோனிய ஞானிகளோடு கொல்லப்படாதபடிக்கு இந்த மறைபொருளை குறித்து விண்ணகக் கடவுளின் இரக்கத்தை இறைஞ்சிக் கேட்குமாறு அவர்களுக்குச் சொன்னார்.
தானியேல் 2 : 19 (RCTA)
பின்பு இரவில் கண்ட காட்சியொன்றில் தானியேலுக்கு இந்த மறை பொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்போது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
தானியேல் 2 : 20 (RCTA)
தானியேல் கூறியதாவது: "கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக! ஏனெனில் ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன.
தானியேல் 2 : 21 (RCTA)
நாட்களையும் காலங்களையும் மாற்றுகிறவரும், அரசுகளை வீழ்த்தி வேற்றரசுகளை ஏற்படுத்துகிறவரும் அவரே; ஞானிகளுக்கு ஞானத்தைத் தருகிறவரும், கண்டுணர்வோருக்கு அறிவு கொடுப்பவரும் அவரே.
தானியேல் 2 : 22 (RCTA)
ஆழ்ந்த மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகிறார், ஒளி அவரோடு இருக்கிறது.
தானியேல் 2 : 23 (RCTA)
எங்கள் தந்தையரின் புகழும் கூறுகிறேன்; ஏனெனில், எனக்கு ஞானமும் திறமையும் தந்தீர், நாங்கள் உம்மிடம் கேட்டதை நீர் இப்போது எனக்கு அறிவித்தீர், அரசனது காரியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தினீர்."
தானியேல் 2 : 24 (RCTA)
பின்பு தானியேல் பபிலோனின் ஞானிகளை அழிக்கும்படி அரசனால் ஏற்படுத்தப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, "நீர் பபிலோனின் ஞானிகளை அழித்தல் வேண்டா; என்னை அரசன் முன்னிலையில் கூட்டிக் கொண்டுபோம்; நான் அரசனது கனவின் உட்பொருளைத் தெளிவாய்த் தெரிவிப்பேன்" என்றார்.
தானியேல் 2 : 25 (RCTA)
அப்போது அரியோக் தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைந்தழைத்துக் கொண்டுபோய், அரசனிடம், "அரசே, சிறைப்பட்ட யூதா நாட்டினருள் ஒருவனைக் கண்டுபிடித்தேன்; அவன் அரசருடைய கனவின் உட்பொருளைத் தெரிவிப்பானாம்." என்றான்.
தானியேல் 2 : 26 (RCTA)
அரசனோ பல்தசார் என்னும் பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, 'நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்க உன்னால் கூடுமா?" என்று கேட்டான்.
தானியேல் 2 : 27 (RCTA)
தானியேல் அரசனது முன்னிலையில் சொன்ன மறுமொழி இதுவே: "அரசர் கேட்கிற மறைபொருளை அரசர்க்கு அறிவிக்க ஞானிகளாலும் நிமித்திகர்களாலும் அறிஞர்களாலும் குறிச்சொல்லுகிறவர்களாலும் இயலாது.
தானியேல் 2 : 28 (RCTA)
ஆனால், அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்ற விண்ணகக் கடவுள் கடைசி நாட்களிலே நிகழப்போகிறதை நபுக்கோதனசாராகிய உமக்குத் தெரிவித்திருக்கிறார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருக்கையில் உம் சிந்தையில் தோன்றிய காட்சிகளும் பின் வருமாறு:
தானியேல் 2 : 29 (RCTA)
அரசே, நீர் படுத்திருக்கும் போது இனி மேல் எதிர்காலத்தில் நடக்கப் போவதென்ன என்று நினைக்கத் தொடங்கினீர்: அப்போது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்கப்போகின்றதை உமக்குக் காண்பித்தார்.
தானியேல் 2 : 30 (RCTA)
ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், மனிதர்கள் அனைவரையும் விட எனக்கு மிகுதியான ஞானமிருக்கிறது என்பதால் எனக்கு இந்த மறை பொருட்கள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும், உம்முடைய இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்து கொள்ளவுமே அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டன.
தானியேல் 2 : 31 (RCTA)
அரசே, நீர் கண்ட காட்சி: பெரிய சிலையொன்றைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை ஒளி மிகுந்ததாய் உமக்கு எதிரே நின்றது; அதன் தோற்றமோ அச்சமூட்டுவதாய் இருந்தது.
தானியேல் 2 : 32 (RCTA)
அந்தச் சிலையின் தலை பசும்பொன்னாலானது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியாலானவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
தானியேல் 2 : 33 (RCTA)
கால்கள் இரும்பினாலும், பாதங்களில் ஒரு பகுதி இரும்பாலும், மறுபகுதி களிமண்ணாலும் ஆனவையாய் இருந்தன.
தானியேல் 2 : 34 (RCTA)
நீர் பார்த்துக்கொண்டிருந்த போது, கைகளால் பெயர்க்கப்படாத கல்லொன்று (மலையிலிருந்து) உருண்டு வந்தது; வந்து சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அவற்றை நொறுக்கிப் போட்டது.
தானியேல் 2 : 35 (RCTA)
அப்போது, அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கிக் கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளமே இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக்கல் பெரிய மலையாய் வளர்ந்து மணணுலகத்தை முழுவதும் நிரப்பிற்று.
தானியேல் 2 : 36 (RCTA)
இதுவே நீர் கண்ட கனவு; அரசே, அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது தெரிவிப்பேன்.
தானியேல் 2 : 37 (RCTA)
நீர் அரசர்க்கரசராய் விளங்குகிறீர்; விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வல்லமை, மகிமை ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார்:
தானியேல் 2 : 38 (RCTA)
எல்லா இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வயல் வெளி மிருகங்களையும், வானத்துப் பறவைகளையும் உம் கைகளில் அவர் தந்திருக்கிறார்; நீர் அவற்றையெல்லாம் ஆளும்படி செய்துள்ளார்-ஆகவே பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கிறது.
தானியேல் 2 : 39 (RCTA)
உமக்குப் பின் உம்மிலும் கீழ்ப்பட்ட வேறொரு அரசு தோன்றும்; அடுத்து உலகெல்லாம் ஆளும் வெண்கலமான மூன்றாம் அரசு எழும்பும்.
தானியேல் 2 : 40 (RCTA)
நான்காம் அரசு இரும்பைப் போல் இருக்கும்; இரும்பு எப்படி எல்லாவற்றையும் நொறுக்கிச் சின்னா பின்னமாக்குகிறதோ, அப்படியே இது அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கிவிடும்.
தானியேல் 2 : 41 (RCTA)
ஆனால் அச்சிலையின் பாதங்களும் கால் விரல்களும் ஒரு பகுதி குயவனின் களி மண்ணும், மறு பகுதி இரும்புமாயிருப்பதை நீர் கண்டீர். அந்த அரசு பிரிக்கப்படும்; ஆயினும் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டது போலவே இரும்பின் உறுதி அதில் இருக்கும்.
தானியேல் 2 : 42 (RCTA)
கால்களின் விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாய் இருந்தன; அந்த அரசு பாதி வலிமையுற்றதாயும் பாதி வலிமையற்றதாயும் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
தானியேல் 2 : 43 (RCTA)
இரும்பு களிமண்ணோடே கலந்திருப்பதை நீர் கண்டீர்; அவர்களும் மற்ற மனிதர்களுடன் திருமண உறவினால் கலந்திருப்பார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல் அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.
தானியேல் 2 : 44 (RCTA)
அந்த அரசுகளின் நாட்களில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; வேற்றினத்துக்கும் தரப்படாது.
தானியேல் 2 : 45 (RCTA)
அது மற்ற அரசுகளையெல்லாம் அழிக்கும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்; கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து, களிமண்ணையும் இரும்பையும் வெண்கலத்தையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்க்காலத்தில் நிகழப்போவதை மாபெருங் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவு உண்மையானது; அதன் உட்பொருளும் சரியானது."
தானியேல் 2 : 46 (RCTA)
அதைக்கேட்ட அரசன் நபுக்கோதனசார் முகங்குப்புற விழுந்து, தானியேலைப் பணிந்தான்; அவருக்குப் பலி செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
தானியேல் 2 : 47 (RCTA)
மேலும் அரசன் தானியேலை நோக்கி, "நீர் இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியால் மெய்யாகவே உங்கள் கடவுள் தான் தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர், மறைபொருட்களையெல்லாம் வெளிப்படுத்துகிறவர்" என்றான்.
தானியேல் 2 : 48 (RCTA)
பின்பு அரசன் தானியேலுக்கு உயர்ந்த மரியாதைகளைத் தந்து, அவருக்கு அன்பளிப்புகள் பலவும் கொடுத்தான்; பபிலோன் மாநிலம் முழுவதற்கும் ஆளுநராகவும், பபிலோனின் ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் அவரை ஏற்படுத்தினான்.
தானியேல் 2 : 49 (RCTA)
ஆனால் தானியேலின் வேண்டுகோளின்படி சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் பபிலோன் மாநிலத்தின் காரியங்களைப் பார்த்துக் கொள்ளும்படி ஏற்படுத்தப்பட்டனர்; தானியேலோ அரசனது அவையிலேயே இருந்து வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49