தானியேல் 1 : 1 (RCTA)
யூதாவின் அரசனாகிய யோவாக்கீமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பபிலோனின் அரசனாகிய நபுக்கோதனசார் யெருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்.
தானியேல் 1 : 2 (RCTA)
ஆண்டவர் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமையும், கடவுளுடைய கோயிலின் பாத்திரங்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார்; அவனும் அவற்றைச் சென்னார் நாட்டிலுள்ள தன் தெய்வத்தின் கோயிலுக்குக் கொண்டு போய் அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலங்களோடு சேர்த்து வைத்தான்.
தானியேல் 1 : 3 (RCTA)
அப்போது அரசன் தன் அரண்மனையிலிருந்து அண்ணகர்களின் தலைவனாகிய அஸ்பேனேசுக்கு ஒரு கட்டளை கொடுத்தான்: அதன்படி, இஸ்ராயேலருக்குள் அரசகுலத்திலிருந்தும்,
தானியேல் 1 : 4 (RCTA)
உயர்குடியிலிருந்தும், யாதொரு மாசும் இல்லாதவர்களும் அழகுள்ளவர்களும், எல்லா வகை ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் வல்லவர்களும், அரசனின் அரண்மனையில் சேவிக்கும் திறமையுள்ளவர்களுமான இளைஞர் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கல்தேயரின் கலைகளையும் மொழியையும் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான்.
தானியேல் 1 : 5 (RCTA)
அரசன் தான் உண்ணும் உணவிலும், பருகும் திராட்சை இரசத்திலும் நாடோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்; இவ்வாறு மூன்றாண்டுகள் வளர்ந்த பின்னர் இறுதியில் அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியக் கொண்டுவரப்படல் வேண்டும், என்றான்.
தானியேல் 1 : 6 (RCTA)
அவர்களுள் யூதாவின் வழிவந்தவர்களான தானியேல், அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் என்பவர்கள் இருந்தார்கள்.
தானியேல் 1 : 7 (RCTA)
அண்ணகரின் தலைவன் தானியேலுக்குப் பல்தசார் என்றும், அனனியாசுக்குச் சித்ராக் என்றும், மிசாயேலுக்கு மிசாக் என்றும், அசாரியாசுக்கு அப்தேநாகோ என்றும் வேறு பெயர் கொடுத்தான்.
தானியேல் 1 : 8 (RCTA)
அரசனது உணவினாலும், அவன் குடிக்கும் திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப் படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே, தம்மைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு அண்ணகரின் தலைவனிடம் அனுமதியும் கேட்டுக்கொண்டார்.
தானியேல் 1 : 9 (RCTA)
கடவுளும் அண்ணகரின் தலைவனிடத்தில் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்;
தானியேல் 1 : 10 (RCTA)
அப்போது அண்ணகரின் தலைவன் தானியேலை நோக்கி, "உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் ஆண்டவனுக்கு நான் அஞ்சுகிறேன்: உங்களைப் போன்ற இளைஞர்களின் முகங்களை விட உங்கள் முகங்கள் களை குன்றியனவாய் இருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய் விடுமே! நீங்கள் அதற்குக் காரணமாவீர்கள்" என்றான்.
தானியேல் 1 : 11 (RCTA)
தானியேல், அனனியாஸ் மிசாயேல், அசாரியாஸ் ஆகியவர்களைக் கண்காணிக்கும்படி அண்ணகரின் தலைவனால் ஏற்படுத்தப்பட்டவனிடம் தானியேல்,
தானியேல் 1 : 12 (RCTA)
ஐயா, தயைகூர்ந்து பத்து நாள்வரைக்கும் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும்; எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டும் கொடுக்கச் சொல்லும்.
தானியேல் 1 : 13 (RCTA)
அதற்குப் பிறகு, எங்கள் முகங்களையும், அரசன் தரும் புலால் உணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் முகங்களையும் ஒப்பிட்டுப் பாரும்; பின்னர் உம் விருப்பபடி உம்முடைய ஊழியர்களாகிய எங்களுக்குச் செய்தருளும் என்றார்.
தானியேல் 1 : 14 (RCTA)
அவர்களுடைய வேண்டுகோளின்படியே அவர்களைப் பத்து நாட்களாகச் சோதித்துப் பார்த்தான்.
தானியேல் 1 : 15 (RCTA)
பத்து நாட்களுக்குப் பிறகோ அரச உணவை உண்டு வந்த இளைஞர் அனைவரையும் விட இவர்கள் முகப்பொலிவோடும் உடல் கட்டோடும் விளங்குவதைக் கண்டான்.
தானியேல் 1 : 16 (RCTA)
ஆதலால் கண்காணிப்பாளான் புலாலுணவுக்கும் திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறியுணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.
தானியேல் 1 : 17 (RCTA)
இந்த நான்கு இளைஞர்களுக்கும் கடவுள் எல்லாக் கலைகளிலும் அறிவிலும், தேர்ச்சியையும் தந்தார்; சிறப்பாகத் தானியேலுக்கு எல்லா காட்சிகளையும் கனவுகளையும் கண்டுபிடிக்கும் ஆற்றலையும் அளித்தார்.
தானியேல் 1 : 18 (RCTA)
அவர்களை அரசனது முன்னிலையில் கொண்டு வரும் நாள் வந்தது; அண்ணகருடைய தலைவன் அவர்களை நபுக்கோதனசாருக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டான்.
தானியேல் 1 : 19 (RCTA)
அரசன் அவர்களோடு உரையாடினான்; அப்போது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; ஆகவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரிய அமர்த்தப்பட்டனர்.
தானியேல் 1 : 20 (RCTA)
ஞானத்திற்கும் புத்திக்கும் அடுத்தவற்றில் அரசன் அவர்களிடம் விசாரித்தபோதெல்லாம், அவனது அரசில் இருக்கும் எல்லா நிமித்திகர்களையும் மந்திரக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்பதைக் கண்டறிந்தான்.
தானியேல் 1 : 21 (RCTA)
இவ்வாறு, கீருஸ் அரசனது முதல் ஆட்சியாண்டு வரை தானியேல் அரண்மனையில் இருந்தார்.
❮
❯