ஆமோஸ் 9 : 1 (RCTA)
ஆண்டவர் பீடத்தருகில் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: "தூணின் முகட்டை இடித்துப் போடு, மேல் தளம் ஆட்டங் கொடுக்கட்டும்; மக்கள் அனைவருடைய தலைமேலும் உடைத்துத் தள்ளு, அவர்களுள் எஞ்சியிருப்பவர்களை நாம் வாளால் மாய்ப்போம்; அவர்களில் ஒருவனும் ஓடிப்போகான், ஒருவன் கூடத் தப்பிப்பிழைக்க மாட்டான்.
ஆமோஸ் 9 : 2 (RCTA)
பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும், அங்கிருந்தும் நம் கை அவர்களைப் பிடித்து வரும்; வானமட்டும் அவர்கள் ஏறிப் போனாலும், அங்கிருந்தும் அவர்களை நாம் இழுத்து வருவோம்;
ஆமோஸ் 9 : 3 (RCTA)
கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்து கொண்டாலும், அவர்களைத் தேடி அங்கிருந்தும் நாம் கொண்டு வருவோம்; நம் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவோம்.
ஆமோஸ் 9 : 4 (RCTA)
தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணை தருவோம். அவர்கள் மேலேயே நாம் கண்ணாயிருப்போம், நன்மை செய்வதற்கன்று, அவர்களுக்குத் தீமை செய்வதற்கே."
ஆமோஸ் 9 : 5 (RCTA)
சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் அவரே; அவர் தொட்டால், மண்ணுலகம் பாகாய் உருகுகிறது, அதில் வாழ்பவர் அனைவரும் புலம்புகிறார்கள்; நிலம் முழுவதும் நைல் நதி போலப் பொங்கியெழுந்து எகிப்து நாட்டு நைல் நதி போல் அடங்குகிறது.
ஆமோஸ் 9 : 6 (RCTA)
அவரே வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகிறவர், வானவளைவை நிலத்தில் அடிப்படையிட்டு நாட்டுகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின் மேலே பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
ஆமோஸ் 9 : 7 (RCTA)
இஸ்ராயேல் மக்களே, நீங்கள் நமக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள் தானே? இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும், பிலிஸ்தியரைக் காதோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் நாம் கூட்டி வரவில்லையோ?" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 9 : 8 (RCTA)
இதோ, இறைவனாகிய ஆண்டவரின் கண்கள் பாவஞ் செய்கிற அரசை உறுத்துப் பார்க்கின்றன; மண்ணுலகில் இராதபடி அதை நாம் அழித்துவிடுவோம்." ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நாம் முற்றிலும் அழித்துவிட மாட்டோம்" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 9 : 9 (RCTA)
இதோ, நாம் ஆணை பிறப்பிப்போம், எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ராயேல் வீட்டாரைச் சல்லடையால் சலிப்பது போலச் சலிக்கப் போகிறோம்; ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது;
ஆமோஸ் 9 : 10 (RCTA)
தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வாராது' என்று நம் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகிறார்களோ, அந்தப் பாவிகள் அனைவரும் வாளால் மடிவார்கள்.
ஆமோஸ் 9 : 11 (RCTA)
அந்நாளில், விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டியெழுப்புவோம்; அதிலுள்ள திறப்புகளைப் பழுதுபார்த்துப் பழுதானவற்றைச் சீர்ப்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போலவே மறுபடி கட்டுவோம்;
ஆமோஸ் 9 : 12 (RCTA)
அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும், நமது திருப்பெயரைத் தாங்கியிருக்கும் புறவினத்தார் அனைவரையும் அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வார்கள்" என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
ஆமோஸ் 9 : 13 (RCTA)
இதோ, நாட்கள் வருகின்றன, அப்போது அறுவடை செய்பவனை ஏர் உழுகிறவனும், விதைப்பவனைத் திராட்சைப் பழம் பிழிபவனும் தொடர்ந்து சென்று பிடிப்பார்கள்; மலைகள் புதிய இரசத்தைப் பொழியும், குன்றுகளிலெல்லாம் அது வழிந்தோடும்" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 9 : 14 (RCTA)
நம் மக்களாகிய இஸ்ராயேலை முன்போல நன்னிலைக்குக் கொணர்வோம் அவர்கள் பாழடைந்த நகரங்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்து அவற்றின் இரசத்தைக் குடிப்பார்கள்; பழத் தோட்டங்களைப் போடுவார்கள், அவற்றிலிருந்து கனிகளைப் புசிப்பார்கள்.
ஆமோஸ் 9 : 15 (RCTA)
அவர்கள் நாட்டில் நாம் அவர்களைத் திரும்ப நாட்டுவோம், நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து இனி அவர்கள் மறுபடியும் அகற்றப்பட மாட்டார்கள்" என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
❮
❯