ஆமோஸ் 6 : 1 (RCTA)
சீயோனில் சிற்றின்ப வாழ்வில் திளைத்திருக்கிறவர்களே, சமாரியா மலை மேல் கவலையற்றிருக்கிறவர்களே, மக்களினங்களுள் சிறந்த இவ்வினத்தின் பெருங்குடி மக்களே, இஸ்ராயேல் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு!
ஆமோஸ் 6 : 2 (RCTA)
காலானே என்னுமிடத்திற்குப் போய்ப் பாருங்கள், அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஏமாத்துக்குப் போங்கள், பிறகு பிலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள். அந்த அரசுகளை விட நீங்கள் சிறந்தவர்களோ? உங்கள் நாட்டை விடப் பரப்பளவில் அவர்களுடைய நாடு பெரியதோ?
ஆமோஸ் 6 : 3 (RCTA)
தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் வன்முறையின் அரியணையை அருகில் கொண்டு வருகிறீர்கள்.
ஆமோஸ் 6 : 4 (RCTA)
தந்தத்தால் இழைத்த கட்டிலில் படுத்துப் பஞ்சணையில் சாய்ந்து கிடக்கிறார்கள்; கிடையிலிருந்து ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து கொழுத்த கன்றுகளையும் சாப்பிடுகிறார்கள்;
ஆமோஸ் 6 : 5 (RCTA)
வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கிறார்கள், தாவீதைப் போலப் புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.
ஆமோஸ் 6 : 6 (RCTA)
கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கிறார்கள், உயர்ந்த நறுமண எண்ணெய் தடவிக் கொள்ளுகிறார்கள், ஆனால் யோசேப்பின் வீட்டாரழிவைக் குறித்துக் கலங்குகிறதில்லை!
ஆமோஸ் 6 : 7 (RCTA)
ஆகையால் அவர்கள் தான் முதற் கண் நாடு கடத்தப்படுவர், சிற்றின்பம் தேடுகிறவர் கூட்டம் அற்றுப்போகும்."
ஆமோஸ் 6 : 8 (RCTA)
இறைவனாகிய ஆண்டவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறுகிறார், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: "யாக்கோபின் செருக்கை நாம் அருவருக்கிறோம், அவனுடைய மாளிகைகளை வெறுக்கிறோம்; நகரத்தையும் அதிலுள்ளவை அனைத்தையும் நாம் கைவிட்டு விடுவோம்."
ஆமோஸ் 6 : 9 (RCTA)
ஒரு வீட்டில் பத்துப் பேர்களே இருந்தால், அவர்களும் மாண்டு போவார்கள்.
ஆமோஸ் 6 : 10 (RCTA)
வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள், ஒருவன், வீட்டின் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், "உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?" என்று கேட்க, (11) அவன், "இல்லை" என்று விடையளித்து, "உஸ்ஸ், ஆண்டவர் பெயரைச் சொல்லக் கூடாது" என்பான்.
ஆமோஸ் 6 : 11 (RCTA)
(12) இதோ, ஆண்டவர் தாமே ஆணை கொடுக்கிறார், பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாய்த் தகர்ப்பார்; சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
ஆமோஸ் 6 : 12 (RCTA)
(13) கற்பாறைகள் மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டி யாரேனும் கடலை உழுவாரோ? நீங்களோ நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்கசப்பாய் ஆக்கினீர்கள்.
ஆமோஸ் 6 : 13 (RCTA)
(14) லோ-தபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள், "நம் சொந்த வலிமையால் கார்னாயீமைப் பிடிக்கவில்லையா?" என்கிறீர்கள்.
ஆமோஸ் 6 : 14 (RCTA)
(15) இதோ, இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுக்கு எதிராக ஒரு மக்களினத்தைக் கிளப்பி விடுவோம், அவர்கள் ஏமாத்து வாயில் முதல் அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்" என்கிறார் சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர்.
❮
❯