ஆமோஸ் 5 : 1 (RCTA)
இஸ்ராயேல் வீட்டாரே, இந்த வாக்கைக் கேளுங்கள், உங்களைக் குறித்து பாடிய புலம்பல் இது:
ஆமோஸ் 5 : 2 (RCTA)
இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண், வீழ்ச்சியுற்றாள், இனி எழ மாட்டாள்; தரையில் தனியளாய்க் கிடக்கின்றாள், அவளைத் தூக்கி விடுவார் யாருமில்லை."
ஆமோஸ் 5 : 3 (RCTA)
ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் இவ்வாறு கூறுகிறார்: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரத்தில் நூறு பேரே எஞ்சியிருப்பர், நூறு பேரை அனுப்பிய பட்டணத்தில், பத்தே பேர் எஞ்சியிருப்பர்; இஸ்ராயேல் வீட்டார் கதி இதுவே."
ஆமோஸ் 5 : 4 (RCTA)
இஸ்ராயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
ஆமோஸ் 5 : 5 (RCTA)
ஆனால் பேத்தேலைத் தேடாதீர்கள், கல்கலாவில் நுழையாதீர்கள்; பெயேர்ஷுபாவுக்குக் கடந்துபோக வேண்டா, ஏனெனில் கல்கலா சிறைகொண்டு போகப்படும், பேத்தேல் வெறுமையாக்கப்படும்."
ஆமோஸ் 5 : 6 (RCTA)
ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள், இன்றேல், தீயைப்போல் அவர் யோசப் வீட்டின் மேல் இறங்குவார்; அந்நெருப்பு சுட்டெரித்து விடும், பேத்தேலில் அதை அணைக்கக் கூடியவர் எவருமிரார்.
ஆமோஸ் 5 : 7 (RCTA)
நீங்கள் நீதியை எட்டிக்கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள்.
ஆமோஸ் 5 : 8 (RCTA)
அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன் குழுக்களை உண்டாக்கியவர்; அவரே காரிருளைக் காலைப் பொழுதாய் மாற்றுகிறவர், பகற்பொழுதை இரவு வேளையாய் ஆக்குகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து மாநிலத்தின் மேல் பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
ஆமோஸ் 5 : 9 (RCTA)
திடீரெனக் கோட்டை மேல் அழிவை அனுப்புகிறார், அழிவும் அரண் மேல் வருகிறது.
ஆமோஸ் 5 : 10 (RCTA)
பொதுவிடத்தில் நின்று கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள், உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள்;
ஆமோஸ் 5 : 11 (RCTA)
ஆதலால், நீங்கள் ஏழைகளை நசுக்கி அவர்களிடம் தானிய வரி வாங்கி, அதைக் கொண்டு செதுக்கிய கற்களால் வீடுகள் கட்டினீர்கள், அந்த வீடுகளில் நீங்கள் வாழப்போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை நாட்டினீர்கள், அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கப்போவதில்லை.
ஆமோஸ் 5 : 12 (RCTA)
உங்கள் பழிச்செயல்கள் பலவென்றும், உங்கள் பாவங்கள் கொடியவை என்றும் நாம் அறிவோம்; நீதிமான்களைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், ஊர்ச்சபையில் ஏழையின் வழக்கை ஏற்க மறுக்கிறீர்கள்.
ஆமோஸ் 5 : 13 (RCTA)
ஆகையால், விவேகமுள்ளவன் அப்போதெல்லாம் மவுனமாயிருப்பான், ஏனெனில் காலம் கெட்டுப் போயிற்று.
ஆமோஸ் 5 : 14 (RCTA)
தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.
ஆமோஸ் 5 : 15 (RCTA)
தீமையைப் பகையுங்கள், நன்மையை விரும்புங்கள், ஊர்ச்சபையில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்போது ஒருவேளை சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசப் வீட்டாரில் எஞ்சினோர்க்கு இரக்கம் காட்டுவார்.
ஆமோஸ் 5 : 16 (RCTA)
ஆதலால் ஆண்டவர் - சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: " பொதுவிடங்களில் எல்லாம் அழுகுரல் கேட்கும், தெருக்களில் எங்கும், 'ஐயோ! ஐயோ! 'என்று புலம்பல் கேட்கும், உழவுத் தொழில் செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர், ஒப்பாரி தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பார்கள்.
ஆமோஸ் 5 : 17 (RCTA)
திராட்சைத் தோட்டங்கள் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும், ஏனெனில் உங்கள் நடுவே நாம் கடந்து போவோம்" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 5 : 18 (RCTA)
ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புகிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவதேன்? அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாள் தான்.
ஆமோஸ் 5 : 19 (RCTA)
அந்த நாள், சிங்கத்தினிடம் தப்பி ஓடிய ஒருவனைக் கரடியொன்று சந்தித்தாற் போலும், தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கை வைத்துச் சாயும் போது பாம்பொன்று கடித்தாற் போலும் இருக்கும்!
ஆமோஸ் 5 : 20 (RCTA)
ஆண்டவரின் நாள் இருள் கவிந்தது அல்லவா? அது ஒளியின் நாளில்லையே! வெளிச்சமில்லாத காரிருள் அல்லவோ?
ஆமோஸ் 5 : 21 (RCTA)
உங்கள் திருவிழாக்களை அருவருக்கிறோம், வெறுக்கிறோம்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை.
ஆமோஸ் 5 : 22 (RCTA)
தகனப்பலிகளும் உணவுப்பலிகளும் நமக்கு நீங்கள் கொடுத்தாலும் நாம் ஏற்கமாட்டோம்; சமாதானப் பலிகளான உங்கள் கொழுத்த மிருகங்களையும் நாம் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டோம்.
ஆமோஸ் 5 : 23 (RCTA)
உங்கள் பாடல்களின் பண்ணை நம்மிடமிருந்து அகற்றுங்கள், உங்கள் வீணைகளின் இசையை நாம் கேட்க மாட்டோம்.
ஆமோஸ் 5 : 24 (RCTA)
அதற்கு மாறாக, நீதி தண்ணீரைப் போல வழிந்தோடட்டும், நேர்மை நீரோடை போலப் பாயட்டும்.
ஆமோஸ் 5 : 25 (RCTA)
இஸ்ராயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பதாண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் நமக்குக் கொடுத்தீர்களோ?
ஆமோஸ் 5 : 26 (RCTA)
உங்கள் அரசனாகிய சக்கூத்தையும், உங்கள் விண்மீன் தெய்வமான காய்வானையும், உங்களுக்கென நீங்கள் செய்துகொண்ட அந்தச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போவீர்கள்.
ஆமோஸ் 5 : 27 (RCTA)
ஆகையால், தமஸ்குவுக்கும் அப்பால் உங்களை நாம் நாடு கடத்துவோம்" என்கிறார் ஆண்டவர்; சேனைகளின் கடவுள் என்பது அவரது பெயர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27