ஆமோஸ் 1 : 1 (RCTA)
தேகுவே ஊரைச் சார்ந்த இடையர்களுள் ஒருவரான ஆமோஸ் என்பவர், யூதாவின் அரசனாகிய ஓசியா காலத்திலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாசின் மகன் யெரோபோவாமின் காலத்திலும், நில நடுக்கம் உண்டாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் இஸ்ராயேலைக் குறித்துக் கண்ட காட்சியின் வார்த்தைகளாவன.
ஆமோஸ் 1 : 2 (RCTA)
அவர் கூறினார்: "சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமிலிருந்து தம் குரலை எழுப்புகிறார்; இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் புலம்புகின்றன, கர்மேலின் கொடுமுடி உலர்கின்றது. "
ஆமோஸ் 1 : 3 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: "தமஸ்கு நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் கலகாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டினார்கள்.
ஆமோஸ் 1 : 4 (RCTA)
ஆதலால் அசாயேல் வீட்டின் மேல் தீயனுப்புவோம், அது பெனாதாத்தின் அரண்மனைகளை அழித்து விடும்.
ஆமோஸ் 1 : 5 (RCTA)
தமஸ்கின் தாழ்ப்பாளை முறித்திடுவோம்; பிக்காத்- ஆவேனில் அரியணை வீற்றிருப்பவனையும், பேத்தேதேனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; சீரியா நாட்டினர் கீருக்கு நாடுகடத்தப் படுவர்" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 1 : 6 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கூட்டிப் போனார்கள்.
ஆமோஸ் 1 : 7 (RCTA)
ஆதலால் காசாவின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்;
ஆமோஸ் 1 : 8 (RCTA)
ஆசோத்தில் வாழும் குடிமக்களையும், அஸ்கலோனில் செங்கோல் தாங்கியிருப்பவனையும் ஒழிப்போம்; அக்காரோன் மீது நம் கரத்தைத் திருப்புவோம், பிலிஸ்தியருள் எஞ்சினோரும் அழிந்திடுவர்" என்கிறார் ஆண்டவர்.
ஆமோஸ் 1 : 9 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: "தீர் நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்றமாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள், சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைக்கவே இல்லை.
ஆமோஸ் 1 : 10 (RCTA)
ஆதலால் தீரின் கோட்டை மதில் மேல் தீயனுப்புவோம்; அது அதனுடைய அரண்மனைகளை அழித்துவிடும்."
ஆமோஸ் 1 : 11 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்றமாட்டோம்; இரக்கம் கொஞ்சமும் காட்டாமல் தன் சகோதரனையே வாளால் துன்புறுத்தினான்; தன் ஆத்திரத்தை அவன் அடக்கி வையாமல் என்றென்றும் தன் கோபத்தைக் காட்டி வந்தான்.
ஆமோஸ் 1 : 12 (RCTA)
ஆதலால் தேமான் மேல் நாம் தீயனுப்புவோம், அது போஸ்ராவின் அரண்மனைகளை அழித்துவிடும்."
ஆமோஸ் 1 : 13 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, கலகாத்தின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தனர்;
ஆமோஸ் 1 : 14 (RCTA)
ஆதலால் ராபாவின் கோட்டை மதிலில் தீ மூட்டுவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்; போர் தொடுக்கும் நாளிலே பேரிரைச்சலும், சூறாவளி நாளிலே கடும்புயலும் இருக்கும்!
ஆமோஸ் 1 : 15 (RCTA)
அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான், தலைவர்களும் அவனோடு கொண்டு போகப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
❮
❯