அப்போஸ்தலர்கள் 7 : 1 (RCTA)
அப்பொழுது தலைமைக் குரு, "இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்க, முடியப்பர் உரைத்ததாவது: "சகோதரர்களே, பெரியோர்களே, கேளுங்கள்:
அப்போஸ்தலர்கள் 7 : 2 (RCTA)
நம் தந்தை ஆபிரகாம், காரான் ஊரில் குடியேறுமுன் மெசொ பொத்தாமியாவில் வாழ்ந்தபோது, மாட்சிமை மிக்க கடவுள் அவருக்குத் தோன்றி,
அப்போஸ்தலர்கள் 7 : 3 (RCTA)
'உன் நாட்டையும் உறவினரையும் விட்டு நான் உனக்குக் காட்டும் நாட்டிற்குப் போ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 7 : 4 (RCTA)
அப்படியே, அவர் கல்தேயருடைய நாட்டினின்று வெளியேறி காரானில் தங்கினார். அவர் தந்தை இறந்தபிறகு, நீங்கள் இப்போது இருக்கும் நாட்டில் கடவுள் அவரைக் குடியேற்றினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 5 (RCTA)
இந்நாட்டில் கடவுள் அவருக்கு ஓரடி நிலம்கூட உடைமையாகக் கொடுக்கவில்லை. மக்கட்பேறு இல்லாதிருந்தும், அவருக்கும் அவர் வழித்தோன்றியவர்களுக்கும் இந்நாட்டை உரிமையாய்த் தருவதாக வாக்களித்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 6 (RCTA)
'அவர் வழித்தோன்றுபவர் வெளிநாட்டில் குடியிருப்பர். அந்நாட்டினர் அவர்களை நானூறு ஆண்டுகள் அடிமையாக்கிக் கொடுமைப் படுத்துவர்' என்று கடவுள் கூறினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 7 (RCTA)
'ஆனால் அவர்களை அடிமைப்படுத்திய நாட்டினர்மீது தீர்ப்புக் கூறுவேன். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி, இவ்விடத்தில் என்னை வழிபடுவர்' என்று கடவுள் உரைத்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 8 (RCTA)
விருத்தசேதன உடன்படிக்கையை அவருக்கு அருளினார். அதன் படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்று, எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரு குலத் தந்தையரையும் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 9 (RCTA)
"இக்குலத் தந்தையர்கள் சூசைமேல் பொறாமைகொண்டு எகிப்தில் அடிமையாகும் படி அவரை விற்றனர். ஆனால், கடவுள் அவருக்குத் துணைநின்று, இன்னல்கள் அனைத்தினின்றும் அவரை விடுவித்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 10 (RCTA)
ஞானத்தை அவருக்கு அளித்து, எகிப்து நாட்டு மன்னன் பார்வோனின் அன்பைப் பெறச்செய்தார். மன்னன் அவரை எகிப்து நாட்டிற்கும், தன் உடைமை அனைத்திற்கும் அதிகாரியாக்கினான்.
அப்போஸ்தலர்கள் 7 : 11 (RCTA)
அப்பொழுது, எகிப்து, கானான் நாடுகளில் எங்கும் பஞ்சம் ஏற்பட, மக்கள் மிக வேதனையுற்றனர். நம் முன்னோர்களுக்கும் உணவு கிடைக்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 7 : 12 (RCTA)
எகிப்து நாட்டில் உணவுப் பொருள்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்ட யாக்கோபு நம் முன்னோர்களை அங்கு அனுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 13 (RCTA)
அவர்களை இரண்டாம் முறை அனுப்பியபோது, சூசை தாம் யாரென அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் அவருடைய குடும்பத்தைப்பற்றித் தெரியவந்தது.
அப்போஸ்தலர்கள் 7 : 14 (RCTA)
சூசை, தம் தந்தை யாக்கோபையும், தம் சுற்றத்தாரையும் அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினார். இப்படி வந்தவர்கள் மொத்தம் எழுபத்தைந்துபேர்.
அப்போஸ்தலர்கள் 7 : 15 (RCTA)
இவ்வாறு யாக்கோபு எகிப்து நாட்டிற்குப் போனார். அவரும் நம் முன்னோரும் அங்கே இறந்தனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 16 (RCTA)
அவர்களுடைய உடலைச் சீக்கேம் ஊருக்குக் கொண்டுவந்து, ஏமோர் என்பவரின் மக்களிடமிருந்து ஆபிரகாம் விலை கொடுத்து அவ்வூரில் வாங்கியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 17 (RCTA)
"கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுங்காலம் நெருங்கியது. நம் மக்களும் எகிப்தில் பலுகிப்பெருகி வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 18 (RCTA)
நாளடைவில் சூசையை அறியாத அரசன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
அப்போஸ்தலர்கள் 7 : 19 (RCTA)
அவன் நம் குலத்தினரை வஞ்சகமாகத் துன்புறுத்தி, நம் முன்னோர் தம் குழந்தைகளை உயிர் பிழைக்க வொட்டாமல் வெளியே போட்டுவிடும்படி செய்தான்.
அப்போஸ்தலர்கள் 7 : 20 (RCTA)
மோயீசன் பிறந்தது அக்காலத்தில்தான். அவர் கடவுளுக்கு உகந்தவராயிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 21 (RCTA)
மூன்று மாதம் தந்தை வீட்டிலே வளர்க்கப்பட்டார். பின்பு குழந்தையை வெளியே போட்டுவிடவே, பார்வோனின் மகள் அதை எடுத்து, சொந்த மகனாக வளர்த்தாள்.
அப்போஸ்தலர்கள் 7 : 22 (RCTA)
மோயீசன் எகிப்து நாட்டுக் கல்வி கேள்விகள் அனைத்தையும் கற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 23 (RCTA)
"அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களான இஸ்ராயேல் மக்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
அப்போஸ்தலர்கள் 7 : 24 (RCTA)
அப்பொழுது அவர்களில் ஒருவனை எகிப்தியன் கொடுமைப் படுத்துவதை அவர் கண்டு, சகோதரனுக்குத் துணை நின்று, துன்பப்பட்டவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்று பழிதீர்த்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 25 (RCTA)
தம் வழியாய்த் தம் சகோதரர்களுக்குக் கடவுள் மீட்பு அளிக்க விரும்புவதை அவர்கள் உணர்ந்துகொள்வர் என்று நினைத்தார். அவர்களோ உணர்ந்துகொள்ளவில்லை.
அப்போஸ்தலர்கள் 7 : 26 (RCTA)
மறுநாள் அவர்களில் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அவர் எதிர்ப்பட்டு, ' நண்பர்களே, நீங்கள் சகோதரர்கள் தானே! ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறீர்கள்? ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போஸ்தலர்கள் 7 : 27 (RCTA)
அயலானுக்குத் தீங்கு செய்தவன், ' உன்னை எங்களுக்குத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?
அப்போஸ்தலர்கள் 7 : 28 (RCTA)
நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?' என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.
அப்போஸ்தலர்கள் 7 : 29 (RCTA)
அவன் சொன்னதைக் கேட்டு மோயீசன் அங்கிருந்து ஓடிப்போய், மாதியாம் நாட்டில் தங்கினார். அங்கே அவருக்கு இரு புதல்வர் பிறந்தனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 30 (RCTA)
" நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாய் மலையருகிலுள்ள பாலை நிலத்தில், எரியும் முட்புதரின் தழலில், வானதூதர் அவருக்குத் தோன்றினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 31 (RCTA)
அக்காட்சியைக் கண்டு மோயீசன் வியப்புற்றார். அதைக் கூர்ந்து நோக்கநெருங்கிய போது,
அப்போஸ்தலர்கள் 7 : 32 (RCTA)
' நானே உங்கள் முன்னோரின் கடவுள். ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள் நானே ' என ஆண்டவரின் குரலொலி கேட்டது. மோயீசன் நடுநடுங்கி அக்காட்சியை நோக்கத் துணியவில்லை.
அப்போஸ்தலர்கள் 7 : 33 (RCTA)
அப்பொழுது ஆண்டவர், ' உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு. ஏனெனில், நீ நிற்பது புனிதமான நிலம்.
அப்போஸ்தலர்கள் 7 : 34 (RCTA)
எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணுற்றேன். அவர்களின் அழுகுரலைக் கேட்டேன். அவர்களை மீட்க இறங்கிவந்தேன். இதோ, உன்னை எகிப்துக்கு அனுப்புகிறேன், வா ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 7 : 35 (RCTA)
"உன்னைத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?' என்று முன்பு மறுத்து விட்டார்களே, அந்த மோயீசனையே, தலைவராகவும் மீட்பராகவும் கடவுள் முட்புதரில் தோன்றிய வானதூதரின் வழியாக அனுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 36 (RCTA)
எகிப்து நாட்டிலும் செங்கடலிலும், நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்திலும், அற்புதங்களையும் அருங்குறிகளையும் ஆற்றி, அவர்களை வெளியே அழைத்து வந்தவர் இவரே.
அப்போஸ்தலர்கள் 7 : 37 (RCTA)
' என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைக் கடவுள் உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழுப்புவார் ' என்று இஸ்ராயேல் மக்களுக்குச் சொன்னவரும் இந்த மோயீசனே.
அப்போஸ்தலர்கள் 7 : 38 (RCTA)
அவர்களது திருக்கூட்டம் பாலை நிலத்தில் கூடியபோது, சீனாய் மலையில் தம்முடன் பேசிய வான்தூதருக்கும், நம் முன்னோர்க்கும் இடை நின்றவர் இவரே. அங்கே அவர், உயிருள்ள திருமொழிகளை நமக்கு அளிப்பதற்காக, அவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 7 : 39 (RCTA)
ஆனால், நம் முன்னோர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரைப் புறக்கணித்தனர். அவர்களது உள்ளம் எகிப்தை நினைத்து ஏங்கி நிற்க,
அப்போஸ்தலர்கள் 7 : 40 (RCTA)
' எங்களுக்கு முன்செல்லத் தெய்வங்களைச் செய்து, கொடும். ஏனெனில், எங்களை எகிப்து நாட்டினின்று வெளியேற்றிய அந்த மோயீசனுக்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை ' என்று ஆரோனிடம் சொன்னார்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 41 (RCTA)
கன்றுக்குட்டியைச் செய்தது அச்சமயத்தில்தான். அச்சிலைக்குப் பலி செலுத்தினர். தம் கையாலே செய்த உருவத்திற்கு விழாக் கொண்டாடினர்.
அப்போஸ்தலர்கள் 7 : 42 (RCTA)
இதனால் கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்படையை வணங்கும்படி அவர்களைக் கைவிட்டுவிட்டார். இதைப்பற்றி இறைவாக்கினர்கள் நூலில்: இஸ்ராயேல் குலத்தவரே, பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் நீங்கள் எனக்குப் பலிகளும் காணிக்கைகளும் செலுத்தினீர்களா?
அப்போஸ்தலர்கள் 7 : 43 (RCTA)
இல்லை, மோளோக்கின் கூடாரத்தையும், ரெப்பா தெய்வத்தின் விண் மீனையும் சுமந்துகொண்டு போனீர்கள் அன்றோ! இச்சிலைகளை நீங்கள் வணங்குவதற்கெனச் செய்துகொண்டீர்கள்; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் கடத்துவேன்' என்று எழுதியுள்ளது.
அப்போஸ்தலர்கள் 7 : 44 (RCTA)
மோயீசனிடம் பேசிய இறைவன் கட்டளையிட்டபடி பாலை நிலத்தில் நம் முன்னோருக்குச் சாட்சியக் கூடாரம் இருந்தது. தாம் காட்டிய படிவத்திற்கேற்ப அதை மோயீசன் அமைக்க வேண்டுமென்று இறைவன் சொல்லியிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 45 (RCTA)
அந்தக் கூடாரம் அடுத்த தலைமுறையில் வந்த நம் முன்னோர் கைக்கு வந்தது. தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த புறவினத்தாரின் நாட்டை நம் மக்கள் யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தனர். தாவீதின் நாள்வரை அது அங்கேயே இருந்தது.
அப்போஸ்தலர்கள் 7 : 46 (RCTA)
கடவுளுக்கு உகந்தவரான தாவீது, யாக்கோபின் கடவுளுக்கு உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக்கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 7 : 47 (RCTA)
ஆனால் இறைவனுக்கு இல்லம் அமைத்தவர் சாலொமோனே.
அப்போஸ்தலர்கள் 7 : 48 (RCTA)
உன்னதமானவரோ, மனிதர் அமைக்கும் இல்லங்களில் உறைவதில்லை. இறைவாக்கினர் சொல்லியிருப்பது போல:
அப்போஸ்தலர்கள் 7 : 49 (RCTA)
'வானமே என் அரியணை, வையமே என் கால் மணை. என்ன இல்லம் எனக்குக் கட்டுவீர்கள்? நான் தங்க இடம் ஏது?
அப்போஸ்தலர்கள் 7 : 50 (RCTA)
இவையெல்லாம் அமைத்தது எனது கைத்திறனன்றோ? என்கிறார் ஆண்டவர் '
அப்போஸ்தலர்கள் 7 : 51 (RCTA)
"திமிர் பிடித்தவர்களே, விருத்தசேதனமில்லாத உள்ளமும் செவியும் படைத்தவர்களே, பரிசுத்த ஆவியை நீங்கள் எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். முன்னோருக்கேற்ற மக்கள் நீங்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 52 (RCTA)
இறைவாக்கினர்களுள் யாரைத்தான் உங்கள் முன்னோர் துன்புறுத்தவில்லை? அதுமட்டுமன்று, அவர்கள் நீதிமானுடைய வருகையை முன்னறிவித்தவர்களைக் கொலையும் செய்தனர். இப்போது நீங்கள் அந்த நீதிமானையே காட்டிக்கொடுத்து, கொலை செய்தீர்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 53 (RCTA)
வானதூதர்களின் வழியாக நீங்கள் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும் அதைப் பின்பற்றவில்லை."
அப்போஸ்தலர்கள் 7 : 54 (RCTA)
இதைக் கேட்டவர்கள், உள்ளத்தில் கோபம் பொங்க, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 55 (RCTA)
முடியப்பரோ பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் வானத்தை உற்று நோக்கினார். அப்போது, கடவுளின் மாட்சிமையையும், அவரது வலப் பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
அப்போஸ்தலர்கள் 7 : 56 (RCTA)
"இதோ! வானம் திறந்துள்ளதையும், மனுமகன் கடவுளின் வலப்பக்கம் நிற்பதையும் காண்கிறேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 7 : 57 (RCTA)
அதைக் கேட்டு அவர்கள் எல்லாரும் பெருங் கூக்குரலுடன் காதை மூடிக்கொண்டனர். ஒருமிக்க அவர்மேல் பாய்ந்து,
அப்போஸ்தலர்கள் 7 : 58 (RCTA)
அவரை நகருக்கு வெளியே தள்ளி, அவரைக் கல்லால் எறியத் தொடங்கினர். சாட்சிகள் தங்கள் மேலாடைகளைச் சவுல் என்னும் ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 59 (RCTA)
அவர்கள் கல் எறிகையில் முடியப்பர், "ஆண்டவராகிய யேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக்கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 7 : 60 (RCTA)
பிறகு முழங்காலிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்!" என்று சொல்லி உயிர் துறந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60