அப்போஸ்தலர்கள் 26 : 1 (RCTA)
அகிரிப்பா சின்னப்பரிடம், "இப்போது நீ உன் வழக்கை எடுத்துரைக்கலாம்" என்று சொல்ல, சின்னப்பர் கையுயர்த்தி, தன் நியாயத்தை எடுத்துச்சொல்லத் தொடங்கிக் கூறியதாவது:
அப்போஸ்தலர்கள் 26 : 2 (RCTA)
"அகிரிப்பா மன்னர் அவர்களே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களைக் குறித்து, தங்கள் முன்னிலையில் இன்று நான் மறுப்புக் கூறுவது எனக்குக் கிடைத்ததோர் அரிய வாய்ப்பெனக் கருதுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 3 (RCTA)
ஏனெனில், யூதரின் ஒழுக்க முறைமைகளையும் சிக்கல்களையும் நீர் நன்கு அறிந்தவர். எனவே, நான் சொல்லுவதைப் பொறுமையோடு கேட்கும்படி வேண்டுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 4 (RCTA)
"என் இளமை முதல் என் இனத்தாரிடை யெருசலேமிலே நான் எங்ஙனம் வாழ்ந்து வந்தேன் என்பது யூதர்கள் அனைவரும் அறிந்ததே.
அப்போஸ்தலர்கள் 26 : 5 (RCTA)
நீண்ட காலமாகவே என்னை அவர்கள் அறிவார்கள். நம் மதத்திலுள்ள மிகக் கண்டிப்பான பிரிவினரின் முறைப்படி நான் ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனமிருந்தால், இதற்கு அவர்களே சான்று கூறலாம்.
அப்போஸ்தலர்கள் 26 : 6 (RCTA)
நம் முன்னோருக்குக் கடவுள் அருளிய வாக்குறுதியில் நான் நம்பிக்கை வைப்பதால் தான் இப்போது தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 7 (RCTA)
நம்முடைய பன்னிரு குலத்தினரும் அல்லும் பகலும் இடைவிடாது, இறைவனை வழிபட்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமென்று நம்பியிருக்கின்றனர். அரசே, இந்த நம்பிக்கையின் பொருட்டு தான் யூதர்கள் என்மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்போஸ்தலர்கள் 26 : 8 (RCTA)
இறந்தோரைக் கடவுள் எழுப்புவது நம்பக்கூடாததொன்றென நீங்கள் எண்ணுவதேன்?
அப்போஸ்தலர்கள் 26 : 9 (RCTA)
"நானோவெனில் நாசரேத்தூர் இயேசுவின் பெயரை மும்முரமாக எதிர்ப்பது என் கடமையெனக் கருதியிருந்தேன். அவ்வாறே யெருசலேமில் எதிர்க்கவும் செய்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 10 (RCTA)
தலைமைக் குருவிடம் அதிகாரம் பெற்று இறை மக்கள் பலரை நானே சிறையிலடைத்தேன். அவர்களைக் கொல்லுவதற்கு நான் என் வாக்குரிமை அளித்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 11 (RCTA)
செபக்கூடந்தோறும் சென்று பன்முறை அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். அவர்கள் தேவதூஷணம் சொல்லும்படி வலுவந்தம் செய்தேன். எனது கோபவெறியில் வெளியூர்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 12 (RCTA)
"இப்படியிருக்க, தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் ஆணையும் பெற்று, ஒருநாள் தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 13 (RCTA)
அப்போது, அரசே, வழியில் நண்பகலில் கதிரோனைவிட மிகுதியாய்ச் சுடர்வீசிய ஓர் ஒளியைக் கண்டேன். வானிலிருந்து தோன்றிய அது என்னையும் என்னோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டது.
அப்போஸ்தலர்கள் 26 : 14 (RCTA)
எல்லோரும் தரையில் விழுந்தோம். அப்போது, ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குத்தான் துன்பம் ' என ஒரு குரல் எபிரேய மொழியில் சொல்லக் கேட்டேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 15 (RCTA)
நானோ, ' ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். அதற்கு ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் இயேசு தான் நான். எழுந்து நிமிர்ந்து நில்.
அப்போஸ்தலர்கள் 26 : 16 (RCTA)
என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே உனக்குத் தோன்றினேன். நீ இப்பொழுது என்னைக் கண்ட இக்காட்சியைக் குறித்தும், இனி உனக்குத் தோன்றி காண்பிக்கப்போகும் காட்சிகளைக் குறித்தும் நீ சாட்சியம் பகர வேண்டும்.
அப்போஸ்தலர்கள் 26 : 17 (RCTA)
உன் மக்களினின்றும் புறவினத்தாரினின்றும் உன்னை விடுவிப்பேன். இப்புறவினத்தாரிடமே உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களுடைய கண்களைத் திறப்பாய்.
அப்போஸ்தலர்கள் 26 : 18 (RCTA)
அவர்கள் இருளை விட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய். இவ்வாறு அவர்கள் என்னில் கொள்ளும் விசுவாசத்தால் பாவமன்னிப்புப் பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களோடு பங்கு அடைவார்கள் ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 19 (RCTA)
ஆகையால் அகிரிப்பா மன்னர் அவர்களே, நான் அந்த வானகக் காட்சிக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லை.
அப்போஸ்தலர்கள் 26 : 20 (RCTA)
"முதலில் தமஸ்கு மக்களிடமும், அடுத்து யெருசலேமிலும், யூதேயா நாடெங்கும் உள்ளவர்களிடமும், பின் புறவினத்தாரிடமும் போய் அவர்கள் மனம்மாறிக் கடவுளிடம் திரும்பவும், மனந்திரும்பியவர்களுக்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென அறிவித்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 21 (RCTA)
இதற்காகத்தான் கோயிலில் யூதர்கள் என்னைப் பிடித்துக் கொல்ல முயன்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 26 : 22 (RCTA)
ஆனால், நானோ கடவுளின் உதவி பெற்று, சிறியோர், பெரியோர் யாவர்க்கும் இன்றுவரை சாட்சியம் கூறுபவனாயுள்ளேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 23 (RCTA)
இதன்படி மெசியா பாடுபடுவாரென்றும், இறந்தோரினின்று முதலானவராய் உயிர்த்தெழுந்து, தம்மினத்தாருக்கும் புறவினத்தாருக்கும் ஒளியை அளிப்பாரென்றும், இறைவாக்கினர்களும், மோயீசனும் முன்னறிவித்ததையன்றி வேறொன்றையும் நான் கூறுவதில்லை."
அப்போஸ்தலர்கள் 26 : 24 (RCTA)
இவ்வாறாகச் சின்னப்பர் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லுகையில் பெஸ்து உரத்த குரலில்: "சின்னப்பா, என்ன உளறுகிறாய்! உன்னுடைய மிகுந்த படிப்பு உன் மூளையைக் குழப்பிவிட்டது போலும்!" என்றான்.
அப்போஸ்தலர்கள் 26 : 25 (RCTA)
அதற்குச் சின்னப்பர், "மாட்சிமை மிக்க பெஸ்து அவர்களே, நான் உளறவில்லை; தெளிந்த அறிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்லுவதெல்லாம் உண்மையே.
அப்போஸ்தலர்கள் 26 : 26 (RCTA)
மேற்சொன்னதை அரசரும் அறிவார். எனவே, அவருக்கு முன்பாகத் துணிவுடன் பேசுகிறேன். இதில் எதையாவது அவர் அறியாமல் இருப்பாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் ஒரு மூலையில் நடந்ததன்று.
அப்போஸ்தலர்கள் 26 : 27 (RCTA)
அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்குகளை நம்புகிறீரா? நம்புகிறீரென்று அறிவேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 28 (RCTA)
அதைக்கேட்ட அகிரிப்பா சின்னப்பரிடம், "நீ சொல்வதை நம்பச் செய்து, சிறிது நேரத்திற்குள்ளே என்னைக் கிறிஸ்தவனாக்கி விடுவாய்போலிருக்கிறதே" என்றான்.
அப்போஸ்தலர்கள் 26 : 29 (RCTA)
அதற்குச் சின்னப்பர், "சிறிது நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லாரும் என்னைப்போல் ஆகும்படி கடவுள் அருள் புரிவாராக. ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 30 (RCTA)
பின்பு அரசனும் ஆளுநனும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தனர்.
அப்போஸ்தலர்கள் 26 : 31 (RCTA)
தனியே சென்று, இவன் சாவுக்கோ சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 26 : 32 (RCTA)
அகிரிப்பா பெஸ்துவிடம் "இவ்வழக்கு செசாரிடம் செல்ல வேண்டுமன்று இவன் சொல்லாதிருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாமே" என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32