அப்போஸ்தலர்கள் 25 : 1 (RCTA)
பெஸ்து பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பின் செசரியாவிலிருந்து யெருசலேம் சென்றான்.
அப்போஸ்தலர்கள் 25 : 2 (RCTA)
தலைமைக் குருக்களும் யூத முதல்வர்களும் பெஸ்துவிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 25 : 3 (RCTA)
சின்னப்பருக்கு விரோதமான முறையில் தங்களுக்குத் தயவுகாட்டி அவரை யெருசலேமுக்கு அனுப்பி வைக்க மன்றாடினர். ஏனெனில், அவரை வழியில் கொன்றுபோடச் சூழ்ச்சி செய்திருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 25 : 4 (RCTA)
அதற்கு பெஸ்து, "சின்னப்பன் செசரியாவிலேயே காவலில் இருக்கட்டும். நாம் விரைவில் அங்குப் போவோம்.
அப்போஸ்தலர்கள் 25 : 5 (RCTA)
அவன்மேல் தவறு ஏதாவது இருப்பின், உங்கள் தலைவர்கள் என்னோடு வந்து குற்றம் சாட்டட்டும்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 25 : 6 (RCTA)
அவன் யெருசலேமில் எட்டு அல்லது பத்து நாட்களுக்குமேல் தங்கவில்லை, அதன்பின் செசரியா திரும்பினான். மறுநாள் நீதி இருக்கைமீது அமர்ந்து சின்னப்பரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அப்போஸ்தலர்கள் 25 : 7 (RCTA)
அவர் வந்தவுடன் யெருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தங்களால் எண்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மேல் சாட்டத் தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர்கள் 25 : 8 (RCTA)
அக்குற்றங்களை மறுத்துச் சின்னப்பர், "நான் யூதருடைய சட்டத்திற்கோ கோயிலுக்கோ செசாருக்கோ எதிராக ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று மறுத்துக் கூறினார்.
அப்போஸ்தலர்கள் 25 : 9 (RCTA)
பெஸ்து யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பிச் சின்னப்பரிடம், "நீ யெருசலேமுக்குப் போய் அங்கே என் முன் இவைபற்றி விசாரிக்கப்பட இசைவாயா?" என்று கேட்டான்.
அப்போஸ்தலர்கள் 25 : 10 (RCTA)
சின்னப்பர் மறுமொழியாக, "செசாருடைய நீதி இருக்கையின்முன் நிற்கிறேன். இங்கேயே எனக்குத் தீர்ப்புக் கிடைக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எத்தீங்கும் செய்யவில்லை. உமக்கும் இது நன்றாகத் தெரியும்.
அப்போஸ்தலர்கள் 25 : 11 (RCTA)
நான் குற்றவாளியாயிருந்து சாவுத் தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் சாவதற்குப் பின் வாங்கமாட்டேன். ஆனால், இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களில் எதுவும் உண்மையன்றெனில், என்னை இவர்களுக்குத் தானமாக அளித்துவிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வழக்கு செசாரின் மன்றத்திற்கே செல்லவேண்டும்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 25 : 12 (RCTA)
அப்போது பெஸ்து தன் மன்றத்தாரோடு கலந்து பேசி, "இவ்வழக்கு செசாருடைய மன்றத்திற்குச் செல்லவேண்டுமென்றா சொன்னாய்? செசாரிடமே செல்க" என்றான்.
அப்போஸ்தலர்கள் 25 : 13 (RCTA)
சிலநாள் சென்ற பிறகு அகிரிப்பா அரசனும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டு கொள்ள செசரியாவுக்கு வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 25 : 14 (RCTA)
அவர்கள் அங்குச் சில நாள் தங்கியிருக்கவே, பெஸ்து சின்னப்பரைப் பற்றிய செய்தியெல்லாம் அரசனிடம் சொன்னான். அவன் சொன்னது: "பெலிக்ஸ் காவலில் விட்டுப்போன கைதி ஒருவனிருக்கிறான்.
அப்போஸ்தலர்கள் 25 : 15 (RCTA)
நான் யெருசலேமுக்குப் போயிருந்தபோது, தலைமைக் குருக்களும் யூத மூப்பர்களும் அவனுக்கெதிராகத் தீர்ப்பிட வேண்டினர்.
அப்போஸ்தலர்கள் 25 : 16 (RCTA)
நான் அதற்கு மறுமொழியாக, ' குற்றஞ் சாட்டப்பட்டவன் குற்றஞ் சாட்டியவர்களுக்கு எதிரே நின்று மறுப்புக்கூற வாய்ப்பளிக்காமல், அவனை அவர்களுக்குத் தானம்போல் அளித்துவிடுவது உரோமையருக்கு முறையன்று ' எனக் கூறினேன்.
அப்போஸ்தலர்கள் 25 : 17 (RCTA)
ஆகவே, அவர்கள் என்னோடு இங்கு வந்தபோது காலந்தாழ்த்தாது, மறுநாளே நான் நீதி இருக்கையில் அமர்ந்து அந்த ஆளை அழைத்துவரச் சொன்னேன்.
அப்போஸ்தலர்கள் 25 : 18 (RCTA)
ஆனால், குற்றம் சாட்டினவர்கள் அவனுக்கு எதிராகப் பேச எழுந்த போது நான் எதிர்பார்த்த குற்றங்களில் எதையும் அவன்மேல் சுமத்தவில்லை.
அப்போஸ்தலர்கள் 25 : 19 (RCTA)
அவன்மேல் சொன்னதெல்லாம் ஏதோ தங்கள் மதத்தைப்பற்றிய பூசலாகத்தான் இருந்தது. இயேசு என்னும் ஒருவனைப் பற்றிக்கூட தர்க்கம் நடந்தது. இறந்துபோயிருந்த அந்த இயேசு உயிரோடிருப்பதாகச் சின்னப்பன் சாதித்துக்கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 25 : 20 (RCTA)
நான் இதெல்லாம் எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தயங்கியவனாய், ' நீ யெருசலேமுக்குச் சென்று அங்கு இதைப்பற்றி விசாரிப்பதற்கு இசைவாயா ? ' என்று அவனைக் கேட்டேன்.
அப்போஸ்தலர்கள் 25 : 21 (RCTA)
அதற்குச் சின்னப்பன், மாட்சிமை மிக்க மன்னரது தீர்ப்புக்கெனத் தன் வழக்கை ஒதுக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆகவே, செசாரிடம் அனுப்பும்வரை அவனைக் காவலில் வைக்க நான் கட்டளையிட்டேன்."
அப்போஸ்தலர்கள் 25 : 22 (RCTA)
அப்போது அகிரிப்பா, "அவன் பேசுவதை நானும் கேட்க விரும்புகிறேன்" என்று பெஸ்துவிடம் சொன்னான். அதற்கு அவன், "நாளைக்கு நீர் கேட்கலாம்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 25 : 23 (RCTA)
மறுநாள் அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்தோடு வந்து, படைத்தலைவர்களோடும் நகரத்துப் பெருங்குடி மக்களோடும் அவைக்கூடத்தினுள் நுழைந்தனர். பெஸ்துவின் கட்டளைப்படி சின்னப்பர் அழைத்து வரப்பட்டார்.
அப்போஸ்தலர்கள் 25 : 24 (RCTA)
அப்பொழுது பெஸ்து, "அகிரிப்பா மன்னர் அவர்களே, எம்மோடு ஈண்டு குழுமியிருக்கும் பெருமக்களே, இதோ! உங்கள் முன்நிற்கும் இவனுக்கு எதிராக யெருசலேமிலும் இங்கும் யூதமக்கள் என்னிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். இவனை இனி உயிரோடு விட்டுவைக்கக் கூடாதெனக் கூக்குரலிடுகின்றனர்.
அப்போஸ்தலர்கள் 25 : 25 (RCTA)
சாவுத் தண்டனைக்குரியதெதுவும் இவன் செய்யவில்லையெனக் கண்டேன். இவனோ, இவ்வழக்கு ' மாட்சிமிக்க மன்னருடைய மன்றத்திற்கே செல்லவேண்டும் ' என்றான். ஆகவே இவனை அங்கே அனுப்பத் தீர்மானித்தேன்.
அப்போஸ்தலர்கள் 25 : 26 (RCTA)
ஆனால், மன்னர் பெருமானுக்கு இவனைப்பற்றித் திட்டவட்டமாக எழுத ஒன்றுமில்லை. ஆகவே, உங்கள் அனைவர் முன்னிலையிலும், சிறப்பாக அகிரிப்பா மன்னர் அவர்களே, உம் முன்னிலையிலும் இவனை விசாரித்த பின்பு, எழுத ஏதாகிலும் கிடைக்கலாமென எதிர்பார்த்து, அவனை இங்கே அழைத்துவரச் செய்தேன்.
அப்போஸ்தலர்கள் 25 : 27 (RCTA)
ஏனெனில், ஒருவன் மேல் சாட்டப்பட்ட குற்றங்களைக் குறிப்பிடாமல் கைதி ஒருவனை அனுப்புவது அறிவீனம் என எனக்குத் தோன்றுகிறது" என்றான்.
❮
❯