அப்போஸ்தலர்கள் 24 : 1 (RCTA)
ஐந்து நாளைக்குப்பின், தலைமைக் குரு அனனியா மூப்பர் சிலரோடும், தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞனோடும் செசரியாவுக்கு வந்தார். அவர்கள் ஆளுநனிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 24 : 2 (RCTA)
சின்னப்பரை அங்குக் கொண்டுவந்து நிறுத்தியதும், தெர்த்துல்லு அவர்மேல் இவ்வாறு குற்றம் சாட்டத் தொடங்கினான்: "மாட்சிமை மிக்க பெலிக்ஸ் அவர்களே, நாடெங்கும் பேரமைதி நிலவுவது உம்மாலே, எங்கும் எத்துறையிலும் இந்நாடு சீரடைந்து ஓங்குவது உமது பராமரிப்பினாலே, இதைமிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 24 : 3 (RCTA)
இனியும், தங்கள் நேரத்தைப் போக்காமல்,
அப்போஸ்தலர்கள் 24 : 4 (RCTA)
நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை உமக்கே உரித்தான கருணையோடு கேட்கக் கோருகின்றோம்..
அப்போஸ்தலர்கள் 24 : 5 (RCTA)
இவன் ஒரு பெரும் தொல்லை. யூதர்களிடையே உலகெங்கும் கலகம் மூட்டுகிறவன்.
அப்போஸ்தலர்கள் 24 : 6 (RCTA)
நசரேயருடைய கட்சியில் ஒரு தலைவன் எனக் கண்டோம்.
அப்போஸ்தலர்கள் 24 : 7 (RCTA)
கோயிலைக்கூட இவன் மாசுபடுத்த முயன்றான்.
அப்போஸ்தலர்கள் 24 : 8 (RCTA)
ஆகவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். இவனை விசாரித்தால் நாங்கள் சாட்டுகிற எல்லாக் குற்றங்களையும் நீரே திட்டமாய் அறியக்கூடும்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 24 : 9 (RCTA)
யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, ' இவை யாவும் உண்மைதான் ' என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 24 : 10 (RCTA)
அப்போது, சின்னப்பர் பேசும்படி ஆளுநன் சைகை காட்டவே, அவர் கூறியது: "நீர் பல்லாண்டுகளாக இந்நாட்டில் நடுவராயிருக்கின்றீரென அறிவேன். ஆதலால், துணிவோடு என் வழக்கைக் கூறுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 11 (RCTA)
நான் இறைவனை வழிபடுவதற்கு யெருசலேம்சென்று இன்னும் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் ஆகவில்லை. நீர் இதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
அப்போஸ்தலர்கள் 24 : 12 (RCTA)
கோயிலிலாவது செபக்கூடங்களிலாவது, நகரத்தின் எந்த மூலையிலாவது நான் யாரோடாவது வாதாடியதையோ, மக்களிடையே கலகமூட்டியதையோ, யாருமே கண்டதில்லை.
அப்போஸ்தலர்கள் 24 : 13 (RCTA)
இப்போது என்மேல் இவர்கள் சாட்டுகிற குற்றங்களை எண்பிக்க முடியாது.
அப்போஸ்தலர்கள் 24 : 14 (RCTA)
"ஆயினும், ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் மதக் கட்சி என்று அழைக்கும் புது நெறியைப் பின்பற்றி, நான் எங்கள் முன்னோர்களின் கடவுளை வழிபட்டு வருகிறேன். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் உள்ள யாவற்றையும் விசுவசிக்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 15 (RCTA)
நீதிமான்களும் அநீதரும் உயிர்த்தெழுவர் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போலவே, நானும் கடவுளின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 16 (RCTA)
இங்ஙனம், நான் கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியோடு நடக்க முயன்று வருகிறேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 17 (RCTA)
"பல ஆண்டுகளுக்குப்பின், நான் என் இனத்தாருக்குப் பணஉதவி செய்யவும், கோயிலில் காணிக்கை செலுத்தவும் வந்தேன்.
அப்போஸ்தலர்கள் 24 : 18 (RCTA)
காணிக்கை செலுத்தும் போதுதான் என்னைக் கோயிலில் கண்டார்கள். அப்போது நான் தூய்மையாக்கப்பட்ட நிலையில் இருந்தேன். எந்தக் கூட்டத்திலும் எந்தக் கலகத்திலும் நான் சேரவில்லை.
அப்போஸ்தலர்கள் 24 : 19 (RCTA)
ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் சிலர் அங்கு இருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்களல்லவா உம்மிடம் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
அப்போஸ்தலர்கள் 24 : 20 (RCTA)
அல்லது இங்கு இருப்பவர்களாவது, நான் தலைமைச் சங்கத்தார் முன் நின்றபோது என்னிடம் கண்ட குற்றத்தைக் கூறட்டும்.
அப்போஸ்தலர்கள் 24 : 21 (RCTA)
அவர்கள் நடுவில் நின்று ' இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உங்கள்முன் நான் இன்று தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன் ' என்று வெளிப்படையாகச் சொன்னது தவிர, வேறு என்ன குற்றம் கண்டார்கள்?"
அப்போஸ்தலர்கள் 24 : 22 (RCTA)
ஆனால், கிறிஸ்துவ நெறியைப்பற்றி நன்கறிந்திருந்த பெலிக்ஸ், "படைத்தலைவர் லீசியா வந்தபின் உங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வேன்" என விசாரணையை ஒத்திவைத்தான்.
அப்போஸ்தலர்கள் 24 : 23 (RCTA)
சின்னப்பரைக் காவலில் வைக்க நுற்றுவர் தலைவனுக்குக் கட்டளையிட்டான். ஆனால், கடுங்காவல் வேண்டாமென்றும், அவரைச் சார்ந்தவர்கள் பணிவிடை புரிவதைத் தடுக்க வேண்டாமென்றும் கூறினான்.
அப்போஸ்தலர்கள் 24 : 24 (RCTA)
சில நாட்களுக்குப்பின் பெலிக்ஸ், யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளோடு சிறைக்கு வந்து சின்னப்பரை அழைப்பித்தான். கிறிஸ்து இயேசுவின்மேல் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தைக் குறித்து அவர் பேச, அவன் கேட்கலானான்.
அப்போஸ்தலர்கள் 24 : 25 (RCTA)
ஆனால் நீதி, கற்பு, வரவிருக்கும் தீர்வை முதலியவை பற்றி அவர் எடுத்துரைத்தபோது பெலிக்ஸ் அச்சமுற்று, "இன்றைக்குப் பேசியதுபோதும், நீ போகலாம், சமயம் வாய்க்கும்போது மீண்டும் உன்னை அழைப்பேன்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 24 : 26 (RCTA)
ஆனால் சின்னப்பர் தனக்குப் பணம் கொடுப்பார் என பெலிக்ஸ் எதிர்பார்த்ததால், அவரை அடிக்கடி அழைப்பித்து அவரோடு உரையாடி வந்தான்.
அப்போஸ்தலர்கள் 24 : 27 (RCTA)
ஈராண்டுகள் கழித்து, பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநன் பதவியேற்றான். பெலிக்ஸ் யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பி, சின்னப்பரைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.
❮
❯