அப்போஸ்தலர்கள் 17 : 1 (RCTA)
அம்பிப்பொலிஸ், அப்பொலொனியா ஊர்களைக் கடந்து தெசலோனிக்கே நகரை அடைந்தனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 2 (RCTA)
சின்னப்பர் தம் வழக்கப்படி யூதர்களிடம் சென்று, தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாட்கள் அவர்களுடன் வாதாடலானார்.
அப்போஸ்தலர்கள் 17 : 3 (RCTA)
மறை நூலை எடுத்துரைத்து, மெசியா பாடுபடவும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவும் வேண்டும் என விளக்கிக்காட்டுவார். "நான் உங்களுக்கு அறிவிக்கும் இந்த இயேசுதான் அந்த மெசியா" என்று கூறி முடிப்பார்.
அப்போஸ்தலர்கள் 17 : 4 (RCTA)
அவர் சொன்னதை யூதர்கள் சிலரும், யூத மறையைத் தழுவிய திரளான கிரேக்கர்களும், பெருங்குடி மகளிர் பலரும் உண்மையென ஒப்புக்கொண்டு சின்னப்பர், சீலா இவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 5 (RCTA)
யூதர்களோ பொறாமைகொண்டு பொல்லாத போக்கிரிகள் சிலரைக் கூட்டமாகத் திரட்டி, நகரிலே அமளி உண்டாக்கினர். சின்னப்பரையும் சீலாவையும் பொது மக்கள் அவைக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று யாசோனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 6 (RCTA)
அவர்களைக் காணாது, யாசோனையும் சகோதரர் சிலரையும், நகராட்சிக் குழுவினரிடம் இழுத்து வந்து, "உலகமெங்கும் குழப்பம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 7 (RCTA)
யாசோன் இவர்களைத் தன் வீட்டில் ஏற்றுள்ளான். இவர்கள் அனைவரும் இயேசு என்ற வேறு ஓர் அரசன் இருப்பதாகச் சொல்லி, செசாரின் கட்டளையை எதிர்த்து நடக்கிறார்கள்" என்று கூச்சலிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 8 (RCTA)
இதைக் கேட்ட மக்களிடையிலும், நகராட்சிக் குழுவினரிடையிலும் அவர்கள் கலக மூட்டினர்.
அப்போஸ்தலர்கள் 17 : 9 (RCTA)
யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணைபெற்றுக் கொண்டு அவர்களை விட்டுவிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 10 (RCTA)
அன்றிரவே, சகோதரர்கள் தாமதமின்றிச் சின்னப்பரையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் அங்குச் சேர்ந்தபின் யூதர்களின் செபக் கூடத்திற்குப் போனார்கள்.
அப்போஸ்தலர்கள் 17 : 11 (RCTA)
அங்குள்ளவர்கள் தெசலோனிக்கே நகர் யூதர்களைவிடப் பெருந்தன்மையுள்ளவர்கள். தேவ வார்த்தையை மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்கள் போதிப்பது மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 12 (RCTA)
யூதர் பலரும் கிரேக்கர்களுள் பெருங்குடி மகளிரும், ஆண்கள் பலரும் விசுவசித்தனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 13 (RCTA)
ஆனால், சின்னப்பர் பெரோயாவிலும் கடவுளின் வார்த்தையை அறிவித்த செய்தி, தெசலோனிக்கே நகரின் யூதர்களுக்கு எட்டவே. அங்கேயும் அவர்கள் வந்து, மக்கட் கூட்டத்தைத் தூண்டிக் கலக மூட்டினர்.
அப்போஸ்தலர்கள் 17 : 14 (RCTA)
உடனே, சகோதரர்கள் சின்னப்பரைக் கடற்கரை வரைக்கும் செல்லுமாறு அனுப்பினர். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் ஊரிலேயே தங்கினர்.
அப்போஸ்தலர்கள் 17 : 15 (RCTA)
சின்னப்பருடன் சென்றவர்கள் அவரை ஏத்தென்ஸ் வரை அழைத்துக் கொண்டு போனார்கள். அதிவிரைவில் தம்மிடம் வந்து சேரவேண்டும் என்று சீலாவுக்கும் தீமோத்தேயுக்கும் அவர் கொடுத்த கட்டளையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பினர்.
அப்போஸ்தலர்கள் 17 : 16 (RCTA)
ஏத்தென்ஸ் நகரில் அவர்களைச் சின்னப்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்நகரில் சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது.
அப்போஸ்தலர்கள் 17 : 17 (RCTA)
எனவே, அவர் செபக்கூடத்தில் யூதரோடும், யூதமறை தழுவியவரோடும், பொதுவிடத்தில் எதிர்ப்பட்டவர்களோடும் ஒவ்வொரு நாளும் வாதாடி வந்தார்.
அப்போஸ்தலர்கள் 17 : 18 (RCTA)
எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்ந்நூல் அறிஞர் சிலர், அவருடன் கலந்து உரையாடினர். சிலர், "இவன் என்ன பிதற்றுகிறான் ? என்னதான் சொல்லுகிறான்?" என்றனர். இயேசுவையும் உத்தானத்தையும் பற்றி அவர் அறிவித்து வந்ததால் வேறு சிலர், "இவன் அன்னிய தெய்வங்களுக்காகப் பிரச்சாரம் செய்பவன் போலும்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 19 (RCTA)
பிறகு அவரை அரையொபாகு என்னும் மன்றத்திற்கு அழைத்துச் சென்று, "நீர் கூறும் இப்புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா?
அப்போஸ்தலர்கள் 17 : 20 (RCTA)
நீர் எங்களுக்குச் சொல்லுவது நூதனமாயுள்ளதே; அதன் பொருள் என்னவென அறிய விரும்புகிறோம்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 21 (RCTA)
ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 22 (RCTA)
சின்னப்பர் அரையொபாகு மன்ற நடுவில் எழுந்து நின்று, "ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது.
அப்போஸ்தலர்கள் 17 : 23 (RCTA)
நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில் ' நாம் அறியாத தெய்வத்திற்கு ' என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன். சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்.
அப்போஸ்தலர்கள் 17 : 24 (RCTA)
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராம் அவர், மனிதனின் கையால் உருவான கோயில்களில் வாழ்வதில்லை.
அப்போஸ்தலர்கள் 17 : 25 (RCTA)
அனைத்திற்கும் மூச்சு, உயிர் எல்லாமே அளிக்கும் அவர், மக்களின் கையால் பணிவிடை பெறுவது தமக்கு ஏதோ தேவைப்படுவதாலன்று.
அப்போஸ்தலர்கள் 17 : 26 (RCTA)
ஒரே மூலத்திலிருந்து மனுக்குலம் முழுவதையும் உண்டுபண்ணி, அதை மாநிலத்தில் வாழச் செய்தார். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலப் பகுதிகளையும், அவர்கள் குடியிருக்கவேண்டிய எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்துக் கொடுத்தார்.
அப்போஸ்தலர்கள் 17 : 27 (RCTA)
அவர்கள் தம்மைத் தேடவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார். இருட்டில் தடவித்தேடுவது போலாவது ஒருவேளை அவர்கள் தம்மைத் தேடிக் கண்பிடிக்கக் கூடுமென்றே இங்ஙனம் கடவுள் செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.
அப்போஸ்தலர்கள் 17 : 28 (RCTA)
' நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். ' உங்கள் புலவர்களில் ஒருவர் கூறுவதுபோல், நாமும் அவரினமே.
அப்போஸ்தலர்கள் 17 : 29 (RCTA)
நாம் கடவுளின் இனத்தவராதலால், பொன், வெள்ளி, கல் இவற்றைக் கொண்டு மனிதனின் கலைத்திறனும் அறிவும் அமைத்த வேலைப்பாட்டிற்குத் தெய்வீகம் ஒப்பானதென்று எண்ணலாகாது.
அப்போஸ்தலர்கள் 17 : 30 (RCTA)
மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
அப்போஸ்தலர்கள் 17 : 31 (RCTA)
ஏனெனில், அவர் ஒரு நாளைக் குறித்துள்ளார். அந்நாளில் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு ' உலகை நீதியோடு தீர்ப்பிடுவார். இதை அனைவருக்கும் எண்பிக்க, இறந்தோரிடமிருந்து அவரை உயிர்ப்பித்தார்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 17 : 32 (RCTA)
இறந்தோரின் உயிர்ப்பு என்று கேட்டதும் சிலர் ஏளனம் செய்தனர். வேறு சிலரோ, இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம் என்றனர்.
அப்போஸ்தலர்கள் 17 : 33 (RCTA)
இத்துடன் சின்னப்பர் மன்றத்தை விட்டு வெளியே சென்றார்.
அப்போஸ்தலர்கள் 17 : 34 (RCTA)
ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர். மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்.
❮
❯