அப்போஸ்தலர்கள் 16 : 1 (RCTA)
அவர் தெர்பேவுக்குச் சென்று, அங்கிருந்து லீஸ்திராவுக்கு வந்து சேர்ந்தார். அங்கே தீமோத்தேயு என்ற சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் யூத இனத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண். தந்தையோ கிரேக்க இனத்தினன்.
அப்போஸ்தலர்கள் 16 : 2 (RCTA)
இந்தத் தீமோத்தேயு லீஸ்திரா, இக்கோனியா நகரங்களிலுள்ள சகோதரர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்,
அப்போஸ்தலர்கள் 16 : 3 (RCTA)
சின்னப்பர் அவரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பினார். அவருடைய தந்தை கிரேக்க இனத்தினன் என அனைவரும் அறிந்திருந்ததால் அவ்விடங்களிலிருந்த யூதர்களின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 4 (RCTA)
அவர்கள் ஊர்தோறும் செல்லுகையில், யெருசலேமிலிருந்த அப்போஸ்தலரும், மூப்பரும் தீர்மானித்த கட்டளைகளை அங்குள்ளோரிடம் ஒப்படைத்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 5 (RCTA)
ஆகவே சபைகள் விசுவாசத்தில் வேரூன்றி நாடோறும் தொகையிற் பெருகிவந்தன.
அப்போஸ்தலர்கள் 16 : 6 (RCTA)
பிறகு, தேவ வார்த்தையை ஆசியாவில் போதிக்காதபடி பரிசுத்த ஆவி அவர்களைத் தடுக்கவே, அவர்கள் பிரிகியா, கலாத்தியா பகுதிகளைக் கடந்து சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 7 (RCTA)
அவர்கள் மீசியாவின் எல்லைக்கு வந்தபொழுது பித்தினியாவுக்குச் செல்லப் பார்த்தனர். ஆனால் இயேசுவின் ஆவி அவர்களைப் போகவிடவில்லை.
அப்போஸ்தலர்கள் 16 : 8 (RCTA)
எனவே, மீசியாவைக் கடந்து துரோவா நகரை அடைந்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 9 (RCTA)
அங்கே சின்னப்பர், இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மகெதோனியா நாட்டினன் ஒருவன் தோன்றி, "நீர் மகெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று தம்மை வேண்டுவதாகக் கண்டார்.
அப்போஸ்தலர்கள் 16 : 10 (RCTA)
காட்சி முடிந்ததும் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கக் கடவுள் எங்களை அழைத்துள்ளார் என்று முடிவு செய்து உடனே மகெதோனியா செல்ல வழி தேடினோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 11 (RCTA)
துரோவாவில் கப்பலேறி சமெத்ராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலிக்கும் நேராகப் போனோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 12 (RCTA)
அங்கிருந்து பிலிப்பி நகருக்கு வந்து சேர்ந்து, அங்கே சில நாட்கள் தங்கியிருந்தோம். அது மகெதோனியா நாட்டில் உள்ள ஒரு மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று, உரோமையர்களின் குடியேற்ற நகரம்.
அப்போஸ்தலர்கள் 16 : 13 (RCTA)
ஓய்வுநாளில் நகர வாயிலைக் கடந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே யூதர்கள் செபிக்கும் இடம் இருக்குமெனக் கருதினோம். அப்படியே பெண்கள் சிலர் அங்குக் கூடியிருந்தனர். அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 14 (RCTA)
தியத்தைரா நகரைச் சார்ந்த பெண்ணொருத்தி அங்கிருந்தாள். அவள் பெயர் லீதியா; இரத்தாம்பரம் விற்பவள், யூதமறையைத் தழுவியவள். சின்னப்பருடைய போதனையை அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் கூறியதை மனத்தில் இருத்தும்படி ஆண்டவர் அவளது இருதயத்தில் அருளொளி வீசினார்.
அப்போஸ்தலர்கள் 16 : 15 (RCTA)
அவளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றதும், "ஆண்டவரிடம் நான் விசுவாசமுள்ளவள் என்று நீங்கள் கருதினால், என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்" என்று எங்களை இறைஞ்சி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள்.
அப்போஸ்தலர்கள் 16 : 16 (RCTA)
ஒருநாள் நாங்கள் செபம் செய்யும் இடத்திற்குச் செல்லும்போது குறி சொல்ல ஏவும் ஆவியால் பீடிக்கப்பட்டிருந்த பணிப்பெண் ஒருத்தி எங்களுக்கு எதிரே வந்தாள்.
அப்போஸ்தலர்கள் 16 : 17 (RCTA)
அவள் தன் மாந்திரகத்தால் தன்னுடைய எசமானர்களுக்கு ஏராளமான வருவாய் சம்பாதித்துக் கொடுப்பாள். "இவர்கள் உன்னத கடவுளின் ஊழியர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறார்கள்" என்று கத்திக்கொண்டே அவள் சின்னப்பரையும் எங்களையும் பின் தொடர்ந்தாள்.
அப்போஸ்தலர்கள் 16 : 18 (RCTA)
இவ்வாறு அவன் பலநாள் செய்துவந்தாள். சின்னப்பர் எரிச்சல் கொண்டு அவள் பக்கம் திரும்பி, "இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இவளை விட்டுப் போ" என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது வெளியேறியது.
அப்போஸ்தலர்கள் 16 : 19 (RCTA)
அவளுடைய எசமானர்கள் தங்கள் வருவாய்க்குரிய வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று சின்னப்பரையும் சீலாவையும் பிடித்து நகரத் தலைவர்கள்முன் நிறுத்தப் பொதுவிடத்திற்கு இழுத்துச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 20 (RCTA)
அவர்களை நடுவர்கள் முன் கொண்டுபோய், ' இவர்கள் நம் நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 21 (RCTA)
யூதர்களாகிய இவர்கள் இங்கே வந்து உரோமையர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ பின்பற்றவோ தகாத ஒழுக்க முறைமைகளைப் பரப்புகிறார்கள்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 22 (RCTA)
மக்கட் கூட்டம் அவர்களை எதிர்த்தெழுந்தது; நடுவர்கள் அவர்களுடைய மேலாடைகளைக் கிழித்தெறிந்து, அவர்களைச் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 23 (RCTA)
அவர்களை நையப் புடைத்தபின் சிறையில் தள்ளி, பத்திரமாகக் காவல் செய்யுமாறு சிறைக் காவலனுக்குக் கட்டளையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 24 (RCTA)
இக்கட்டளையின்படி அவன் அவர்களை உட்சிறையில் தள்ளி, கால்களைத் தொழு மரத்தில் சேர்த்துப் பிணித்துவிட்டான்.
அப்போஸ்தலர்கள் 16 : 25 (RCTA)
நள்ளிரவு வந்தது. சின்னப்பரும் சீலாவும் கடவுளைப் புகழ்ந்து பாடிச் செபித்துக்கொண்டு இருந்தனர். மற்றக் கைதிகளோ கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 26 (RCTA)
அப்பொழுது திடீரெனச் சிறைக்கூடத்தின் அடித்தளமே ஆடும் அளவுக்கு, பெரியதொரு நில நடுக்கம் ஏற்பட்டது. உடனே, கதவுகளெல்லாம் திறந்தன; அனைவரின் விலங்குகளும் தகர்ந்து விழுந்தன.
அப்போஸ்தலர்கள் 16 : 27 (RCTA)
சிறைக் காவலன் விழித்துக் கொண்டான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கைதிகள் தப்பி ஓடியிருப்பர் என்று எண்ணி, வாளை உருவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளப்போனான்.
அப்போஸ்தலர்கள் 16 : 28 (RCTA)
ஆனால், சின்னப்பர் உரத்த குரலில், "தீங்கு எதுவும் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குத்தான் இருக்கிறோம்" என்று கத்தினார்.
அப்போஸ்தலர்கள் 16 : 29 (RCTA)
சிறைக்காவலன் விளக்கைக் கொண்டு வரச்சொல்லி உள்ளே ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டே சின்னப்பர், சீலா இவர்களின் காலில் விழுந்தான்.
அப்போஸ்தலர்கள் 16 : 30 (RCTA)
அவர்களை வெளியே அழைத்து வந்து, "ஐயன்மீர், மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.
அப்போஸ்தலர்கள் 16 : 31 (RCTA)
அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 32 (RCTA)
பிறகு அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனைவருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 33 (RCTA)
அவ்விரவு நேரத்திலேயே அவர்களை அழைத்துச்சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 34 (RCTA)
அப்போது அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, விருந்து வைத்தான். கடவுளை விசுவசிக்கும் பேறு கிடைத்தது பற்றி தன் வீட்டார் அனைவரோடும் கூடிக் களிகூர்ந்தான்.
அப்போஸ்தலர்கள் 16 : 35 (RCTA)
விடிந்தபின், நடுவர்கள் அம்மனிதர்களை விடுதலை செய்யச் சொல்லி, நகர்க் காவலர்களை அனுப்பினர்.
அப்போஸ்தலர்கள் 16 : 36 (RCTA)
சிறைக்காவலன் இச்செய்தியைச் சின்னப்பருக்கு அறிவித்து, "உங்களை விடுதலை செய்ய வேண்டுமென நடுவர்கள் சொல்லி அனுப்பியுள்ளனர். எனவே நீங்கள் சமாதானமாகப் போய் விடலாம்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 16 : 37 (RCTA)
ஆனால், சின்னப்பர் அவர்களிடம் "உரோமைக் குடிமக்களாகிய எங்களை அவர்கள் தண்டனைத் தீர்ப்பிடாமலே பொது மக்கள் முன்னிலையில் சாட்டையால் அடித்துச் சிறையில் தள்ளினார்கள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் அனுப்பிவிடுகிறார்களா? முடியாது; அவர்களே வந்து எங்களை விடுதலை செய்யட்டும்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 16 : 38 (RCTA)
நகர்க் காவலர்கள் இச்செய்தியை நடுவர்களுக்கு அறிவித்தார்கள். கைதிகள் உரோமைக் குடிமக்கள் எனக் கேட்டு நடுவர் அஞ்சி,
அப்போஸ்தலர்கள் 16 : 39 (RCTA)
அவர்களிடம் வந்து, அவர்களுடன் நயந்து பேசி, நகரை விட்டு அகலுமாறு கேட்டுக் கொண்டே, அவர்களை வெளியே அழைத்துச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 40 (RCTA)
அவர்களும் சிறையினின்று வெளியேறி லீதியாவின் வீட்டிற்குச் சென்றனர். சகோதரர்களைக் கண்டு ஆறுதல் கூறியபின், அங்கிருந்து பயணமாயினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40