அப்போஸ்தலர்கள் 15 : 1 (RCTA)
யூதேயாவிலிருந்து வந்த சிலர், "மோயீசனின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் நீங்கள் மீட்படைய முடியாது" என்று சகோதரர்களுக்குப் போதிக்கத் தொடங்கினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 2 (RCTA)
சின்னப்பரும் பர்னபாவும் அவர்களை எதிர்த்தெழவே, கடும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆகையால் சின்னப்பரும் பர்னபாவும் வேறு சிலரும் இச்சிக்கலைத் தீர்க்க யெருசலேமிலுள்ள அப்போஸ்தலர், மூப்பர்களிடம் செல்லத் தீர்மானித்தனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 3 (RCTA)
அதன்படி, சபையினரால் வழியனுப்பப்பட்டு, புறவினத்தார் மனந்திரும்பிய செய்தியை அறிவித்துக்கொண்டு, பெனிக்கியா, சமாரியா வழியாகப் பிரயாணம் செய்தனர். இச்செய்தி சகோதரர் எல்லாருக்கும் பெரிதும் மகிழ்ச்சியளித்தது.
அப்போஸ்தலர்கள் 15 : 4 (RCTA)
அவர்கள் யெருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது சபையாரும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவர்களை வரவேற்றனர். அப்போது, கடவுள் தங்களுக்காகச் செய்த அரிய பெரிய செயல்களை எடுத்துரைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 5 (RCTA)
ஆனால் விசுவாசிகளான பரிசேயக் கட்சியினர் சிலர் கிளம்பி, "புறவினத்தார் விருத்தசேதனம் பெறவேண்டும், மோயீசனுடைய சட்டத்தைப் பின்பற்ற அவர்களுக்குக் கட்டளையிடவும் வேண்டும்" என வாதாடினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 6 (RCTA)
இதை ஆய்ந்து பார்க்க அப்போஸ்தலரும் மூப்பர்களும் கூடினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 7 (RCTA)
நெடுநேரம் வாதாடிய பின் இராயப்பர் எழுந்து, "சகோதரரே, புறவினத்தார் என் வாய்மொழியால் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசம் கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலிருந்தே உங்களிடையில் என்னைத் தேர்ந்துகொண்டார். இது உங்களுக்குத் தெரிந்ததே.
அப்போஸ்தலர்கள் 15 : 8 (RCTA)
உள்ளங்களை அறியும் கடவுள் நமக்கு அளித்ததுபோல், அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து, அவர்கள் சார்பில் சாட்சியம் தந்தார்.
அப்போஸ்தலர்கள் 15 : 9 (RCTA)
விசுவாசத்தினால் அவர்களுடைய உள்ளங்களை அவர் தூய்மையாக்கியதில் நமக்கும் அவர்களுக்குமிடையே எந்த வேறுபாடும் காட்டவில்லை.
அப்போஸ்தலர்கள் 15 : 10 (RCTA)
எனவே, நம் முன்னோரோ, நாமோ சுமக்க முடியாத நுகத்தை இச்சீடர்கள் தோளின் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்? இப்படி ஏன் கடவுளைச் சோதிக்கிறீர்கள்?
அப்போஸ்தலர்கள் 15 : 11 (RCTA)
புறவினத்தாரும் சரி, நாமும் சரி, மீட்புப்பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளால்தான். இதுவே நம் விசுவாசம்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 15 : 12 (RCTA)
இதைக் கேட்டு அனைவரும் அமைதியாகி, பர்னபா, சின்னப்பர் இவர்கள் வழியாக, கடவுள் புறவினத்தாரிடையே செய்த அருங்குறிகள், அற்புதங்களையெல்லாம் அவர்களே எடுத்துரைக்கக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 13 (RCTA)
அவர்கள் பேசி முடித்தபின் யாகப்பர் கூறியதாவது:
அப்போஸ்தலர்கள் 15 : 14 (RCTA)
"சகோதரரே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். புறவினத்தாரிடையே தமக்கென மக்களைத் தேர்ந்து கொள்ளக் கடவுள் முதன் முறையாக அவர்களை நாடி வந்த செய்தியை அவர்களுக்குச் சிமெயோன் எடுத்துக்கூறினார்.
அப்போஸ்தலர்கள் 15 : 15 (RCTA)
இதற்கொப்ப இறைவாக்கினர்கள் எழுதியுள்ளதாவது:
அப்போஸ்தலர்கள் 15 : 16 (RCTA)
'அதன்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவேன், அதில் பாழடைந்து போனதை மீண்டும் கட்டி எழுப்புவேன்.
அப்போஸ்தலர்கள் 15 : 17 (RCTA)
அதைப் பார்த்து மற்ற மனிதர்களும், எனக்கு அர்ச்சிக்கப்பட்ட புறவினத்தார் எல்லாரும் ஆண்டவரைத் தேடுவர்,
அப்போஸ்தலர்கள் 15 : 18 (RCTA)
என்று தொன்று தொட்டு இவற்றை வெளிப்படுத்தும் ஆண்டவர் கூறுகிறார்.
அப்போஸ்தலர்கள் 15 : 19 (RCTA)
ஆதலால், கடவுள்பக்கம் மனந்திரும்புகிற புறவினத்தாருக்குத் தொல்லை கொடுத்தலாகாது.
அப்போஸ்தலர்கள் 15 : 20 (RCTA)
என் முடிவு இதுவே. அவர்கள் சிலைகளால் தீட்டுப்பட்டதைத் தொடாமல் கெட்ட நடத்தையை விலக்கி, மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி, மிருக இரத்தம் இவற்றை உண்ணாமல் இருக்குமாறு அவர்களுக்கு எழுதுங்கள்.
அப்போஸ்தலர்கள் 15 : 21 (RCTA)
முன்னாள்தொட்டு மோயீசனின் சட்டத்தைப் போதிப்பவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர். இச்சட்டம் ஓய்வு நாள் தோறும் செபக்கூடங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது.
அப்போஸ்தலர்கள் 15 : 22 (RCTA)
அப்பொழுது, அவர்களுள் இருவரைத் தெரிந்தெடுத்து, சின்னப்பர், பர்னபா இவர்களோடு அந்தியோகியாவிற்கு அனுப்புவதென அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் திருச்சபையினர் அனைவரும் தீர்மானித்தனர். அவ்விருவர், சகோதரர்களுள் செல்வாக்குப் பெற்றிருந்த பர்சபா வென்னும் யூதாசும், சீலாவும் ஆவர்.
அப்போஸ்தலர்கள் 15 : 23 (RCTA)
இவர்கள் வழியாகப் பின்வரும் கடிதம் எழுதி அனுப்பினர்: "அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் உள்ள புறவினச் சகோதரர்களுக்கு-உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும் மூப்பரும் வாழ்த்துக்கூறி எழுதுவது:
அப்போஸ்தலர்கள் 15 : 24 (RCTA)
எங்களுள் சிலர் அங்கு வந்து தங்கள் பேச்சினால் உங்களைக் கலக்கமுறச்செய்து மனத்தைக் குழப்பினர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எக்கட்டளையும் தந்ததில்லை.
அப்போஸ்தலர்கள் 15 : 25 (RCTA)
ஆகையால் நம் ஆண்டவர், இயேசு கிறிஸ்துவின் பெயருக்காகத்
அப்போஸ்தலர்கள் 15 : 26 (RCTA)
தங்கள் உயிரையே கையளித்துள்ள, எங்கள் அன்புக்குரிய சின்னப்பர், பர்னபா ஆகியவர்களோடு நாங்கள் தெரிந்தெடுத்தோரை உங்களிடம் தூதுவராக அனுப்ப ஒருமனத்தோடு தீர்மானித்தோம்.
அப்போஸ்தலர்கள் 15 : 27 (RCTA)
எனவே, யூதாசையும் சீலாசையும் உங்களிடம் அனுப்புகிறோம். நாங்கள் எழுதியுள்ளதை இவர்கள் உங்களுக்கு வாய்மொழியாகச் சொல்லுவார்கள்.
அப்போஸ்தலர்கள் 15 : 28 (RCTA)
பரிசுத்த ஆவியும் நாமும் கூறும் தீர்மானம் இதுவே: இன்றியமையாதவை தவிர, எச்சுமையும் உங்கள்மேல் சுமத்தப்படலாகாது.
அப்போஸ்தலர்கள் 15 : 29 (RCTA)
சிலைகளுக்குப் படைத்தது, மிருக இரத்தம், மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி இவற்றை உண்ணாமலிருப்பதோடு, கெட்ட நடத்தையிலிருந்து விலகி நில்லுங்கள். இவற்றைத் தவிர்த்தலே முறை. வணக்கம்."
அப்போஸ்தலர்கள் 15 : 30 (RCTA)
விடை பெற்றபின் தூதுவர் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அங்குச் சபையரைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 31 (RCTA)
அக்கடிதத்தை வாசித்தபின், அதனால் கிடைத்த ஊக்கத்தினால் மகிழ்ச்சி கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 32 (RCTA)
யூதாசும் சீலாவும் இறைவாக்கினர்களாதலின் அறிவுரை பல கூறி, சகோதரர்களைத் திடப்படுத்தினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 33 (RCTA)
சில நாளுக்குப்பின்
அப்போஸ்தலர்கள் 15 : 34 (RCTA)
சகோதரர்களிடம் சமாதான வாழ்த்துப் பெற்றுத் தங்களை அனுப்பியோரிடம் திரும்பினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 35 (RCTA)
சின்னப்பரும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கி வேறு பலருடன் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தும் போதித்தும் வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 15 : 36 (RCTA)
சில நாளுக்குப்பின் சின்னப்பர் பர்னபாவிடம், "நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த நகரங்களுக்கெல்லாம் திரும்பச்சென்று, சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னவாயிற்று என்று பார்த்து வருவோம்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 15 : 37 (RCTA)
மாற்கு என்ற அருளப்பரையும் தங்களோடு அழைத்துச் செல்ல வேண்டுமென்பது பர்னபாவின் விருப்பம்.
அப்போஸ்தலர்கள் 15 : 38 (RCTA)
ஆனால் தங்களோடு பணிபுரிய வராமல் தங்களைப் பம்பிலியா நாட்டில் விட்டு விலகிய அவரை அழைத்துச் செல்ல சின்னப்பர் விரும்பவில்லை.
அப்போஸ்தலர்கள் 15 : 39 (RCTA)
இதனால் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியும் அளவுக்கு அவர்களிடையே கடுமையான விவாதம் உண்டாயிற்று. பர்னபா மாற்கை அழைத்துக் கொண்டு சைப்பிரசுக்குக் கப்பல் ஏறினார்.
அப்போஸ்தலர்கள் 15 : 40 (RCTA)
சின்னப்பரோ சீலாவைத் தம்மோடு வரும்படி அழைத்துக்கொண்டார். சகோதரர்கள் அவரை ஆண்டவர் கையில் ஒப்படைத்து வழியனுப்பினர்.
அப்போஸ்தலர்கள் 15 : 41 (RCTA)
அவர் சீரியா, சிலிசியா நாடெங்கும் சென்று ஆங்காங்குள்ள சபைகளை உறுதிப்படுத்தினார்.
❮
❯