2 தீமோத்தேயு 4 : 1 (RCTA)
கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;
2 தீமோத்தேயு 4 : 2 (RCTA)
கண்டித்துப் பேசும்; கடிந்துகொள்ளும்; அறிவுரை கூறும் மிகுந்த பொறுமையோடு போதித்துக்கொண்டே இரும்.
2 தீமோத்தேயு 4 : 3 (RCTA)
ஒருகாலம் வரும், அப்போது மக்கள் நலமிக்க போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களைத் திரட்டிக்கொள்வர்.
2 தீமோத்தேயு 4 : 4 (RCTA)
உண்மைக்குச் செவி கொடுக்க மறுத்து, கட்டுக் கதைகளுக்குத்தான் செவி சாய்ப்பர்.
2 தீமோத்தேயு 4 : 5 (RCTA)
நீரோ எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையாயிரும். துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். நற்செய்தித் தொண்டனுக்குரிய வேலையைச் செய்யும். உம் திருப்பணியைச் செவ்வனே செய்யும்.
2 தீமோத்தேயு 4 : 6 (RCTA)
எனக்கோ, பிரியவேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ என் வாழ்க்கை, பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது.
2 தீமோத்தேயு 4 : 7 (RCTA)
சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன், ஓட்டத்தை முடித்து விட்டேன்; விசுவாசத்தைப் பாதுகாத்தேன்.
2 தீமோத்தேயு 4 : 8 (RCTA)
இனி எனக்கு இருப்பது ஒன்றே; நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராம் ஆண்டவர் அந்த இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அருள்வார். எனக்கு மட்டுமன்று, அவரது பிரசன்னத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் அருள்வார்.
2 தீமோத்தேயு 4 : 9 (RCTA)
காலம் தாழ்த்தாது விரைவில் வந்து சேரும். ஏனெனில், உலகப்பற்று மேற்கொண்டதால்,
2 தீமோத்தேயு 4 : 10 (RCTA)
தேமா என்னைக் கைவிட்டுத் தெசலோனிக்கேவுக்குப் போய் விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்.
2 தீமோத்தேயு 4 : 11 (RCTA)
லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறார். உம்மோடு மாற்குவையும் கூட்டிக்கொண்டு வாரும். அவர் எனக்குத் திருப்பணியில் ஏற்ற துணை.
2 தீமோத்தேயு 4 : 12 (RCTA)
தீக்கிக்குவை எபேசுவுக்கு அனுப்பிவிட்டேன்.
2 தீமோத்தேயு 4 : 13 (RCTA)
நீர் வரும்போது துரோவாவூரில் கார்ப்புவிடம் நான் விட்டுவந்த போர்வையை எடுத்துக் கொண்டுவாரும். நூல்களையும், சிறப்பாகத் தோல் சுருள்களையும் கொண்டு வாரும்.
2 தீமோத்தேயு 4 : 14 (RCTA)
கன்னானாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகத் தீங்கிழைத்தான். அவனுடைய செயல்களுக்குத்தக்கபடி ஆண்டவர் அவனுக்குக் கூலி கொடுப்பார்.
2 தீமோத்தேயு 4 : 15 (RCTA)
நீரும் அவனைப்பற்றி எச்சரிக்கையாயிரும். அவன் நம் போதனையை மிகவும் எதிர்த்து நின்றான்.
2 தீமோத்தேயு 4 : 16 (RCTA)
நான் முதல் விசாரணையில் என் வழக்கை எடுத்துச் சொன்னபோது, எனக்குத் துணை நிற்க யாரும் முன்வரவில்லை. எல்லாரும் என்னைக் கை விட்டனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.
2 தீமோத்தேயு 4 : 17 (RCTA)
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார், என் வழியாய் நற்செய்தியின் அறிவிப்பு முற்றுப் பெறும்படியும், புறவினத்தார் அனைவரும் அதைக் கேட்டறியும்படியும் என்னை உறுதிப்படுத்தினார். சிங்கத்தின் வாயினின்று நான் விடுவிக்கப்பட்டேன்.
2 தீமோத்தேயு 4 : 18 (RCTA)
ஆண்டவர் எனக்கு உண்டாகும் எல்லாத் தீங்குகளினின்றும் என்னை விடுவித்து மீட்பளித்துத் தம்முடைய வானக அரசினுள் என்னைச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.
2 தீமோத்தேயு 4 : 19 (RCTA)
பிரிஸ்காள், ஆக்கிலா, ஒனேசிப்போருவின் வீட்டார் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.
2 தீமோத்தேயு 4 : 20 (RCTA)
எரஸ்து கொரிந்துவில் தங்கி விட்டான். துரேப்பீமு பிணியுற்றிருந்ததால் மிலேத்துவில் அவனை விட்டு வந்தேன்.
2 தீமோத்தேயு 4 : 21 (RCTA)
குளிர்காலம் தொடங்குமுன் காலம் தாழ்த்தாமல் வந்து விடும். ஐபூலு, பூதே, லீனு, கிலவுதியாள், மற்றுமுள்ள சகோதரர் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
2 தீமோத்தேயு 4 : 22 (RCTA)
(21b) ஆண்டவர் உம்மோடிருப்பாராக. இறை அருள் உங்களோடிருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: