2 தீமோத்தேயு 2 : 1 (RCTA)
எனவே, என் மகனே, நீர் கிறிஸ்து இயேசுவிலுள்ள அருளினால் உறுதிகொள்வீராக.
2 தீமோத்தேயு 2 : 2 (RCTA)
சாட்சிகள் பலர் முன்னிலையில் நீர் என்னிடமிருந்து கேட்டறிந்த போதனையை மற்றவர்களுக்குப் போதிக்கக் கூடியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களுமான ஆட்களிடம் ஒப்படையும்.
2 தீமோத்தேயு 2 : 3 (RCTA)
கிறிஸ்து இயேசுவின் நல்ல வீரனைப்போல் நீரும் துன்பத்தில் பங்குக் கொள்ளும்.
2 தீமோத்தேயு 2 : 4 (RCTA)
படையில் சேர்ந்துகொண்ட எவனும் அன்றாட வாழ்க்கை அலுவல்களில் ஈடுபடுவதில்லை தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்கு உகந்தவனாய் இருக்கவேண்டுமென்றோ?
2 தீமோத்தேயு 2 : 5 (RCTA)
மேலும், பந்தய விளையாட்டுகளில் கலந்துகொள்பவன் ஒழுங்குகளைப் பின்பற்றினாலன்றி வெற்றி வாகையைச் சூட மாட்டான்.
2 தீமோத்தேயு 2 : 6 (RCTA)
விளைச்சலின் பலனை முதன்முதல் பெற வேண்டியவன் பாடுபட்டு உழைக்கும் குடியானவனே.
2 தீமோத்தேயு 2 : 7 (RCTA)
நான் சொல்லுகிறதை எண்ணிப்பாரும். இதையெல்லாம் நீர் நன்றாயுணர ஆண்டவர் உமக்கு அருள் செய்வார்.
2 தீமோத்தேயு 2 : 8 (RCTA)
இயேசு கிறிஸ்துவை நினைவில் வையும். அவர் தாவீதின் மரபில் தோன்றி, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
2 தீமோத்தேயு 2 : 9 (RCTA)
இதுவே நான் கூறும் நற்செய்தி. இந்த நற்செய்தியின் பொருட்டே நான் குற்றவாளியைப் போல விலங்கிடப்படும் அளவுக்குத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கெதுவுமில்லை.
2 தீமோத்தேயு 2 : 10 (RCTA)
தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பையும் முடிவில்லா மகிமையையும் பெறவேண்டுமென்று அவர்களுக்காக நான் இவையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.
2 தீமோத்தேயு 2 : 11 (RCTA)
உண்மையான வார்த்தை இது. 'அவரோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
2 தீமோத்தேயு 2 : 12 (RCTA)
நிலைத்து நின்றால், அவரோடு அரசாள்வோம். நாம் அவரை மறுதலித்தால். அவரும் நம்மை மறுதலிப்பார்.
2 தீமோத்தேயு 2 : 13 (RCTA)
நாம் அவருக்கு உண்மையாயில்லாவிடினும், அவரது வாக்குறுதி பொய்க்காது; அவர் தம்மையே மறுதலிக்க முடியாது.'
2 தீமோத்தேயு 2 : 14 (RCTA)
இவற்றை அவர்களுக்கு நினைவூட்டும், வெறும் சொற்களைப்பற்றிச் சண்டையிடுவதை நிறுத்தும்படி கடவுள் முன்னிலையிலும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளும். அப்படிச் சண்டையிடுவது பயனற்றது. அதைக் கேட்போருக்கும் அது கேட்டையே விளைவிக்கும்.
2 தீமோத்தேயு 2 : 15 (RCTA)
கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்கவும். நாணித் தலைகுணியவேண்டிய செயலில் ஈடுபடாத வேலையாளாய் இருக்கவும், நெறிபிறழாது உண்மையின் வார்த்தையைப் போதிப்பவராய் இருக்கவும் முயற்சி செய்யும்.
2 தீமோத்தேயு 2 : 16 (RCTA)
இலௌகீக வீண் பேச்சை விலக்கும். அப்படிப் பேசுபவர்கள் அவபக்தியில் மேன்மேலும் ஆழ்ந்து போவார்கள்.
2 தீமோத்தேயு 2 : 17 (RCTA)
அவர்களுடைய பேச்சு புற்று நோயெனப் புரையோடிப் பரவும். இமெனேயுவும் பிலேத்தும் இத்தகையவர்கள்.
2 தீமோத்தேயு 2 : 18 (RCTA)
உயிர்த்தெழுதல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் உண்மையை விட்டுவிலகி, சிலருடைய விசுவாசத்தையே தகர்த்துவிடுகிறார்கள்.
2 தீமோத்தேயு 2 : 19 (RCTA)
ஆயினும், கடவுளிட்ட உறுதியான அடித்தளம் நிலையாய் நிற்கிறது. அதன்மேல் 'ஆண்டவர் தம்மவரை அறிவார்' என்றும், 'ஆண்டவருடைய பெயரை உச்சரிப்பவன் எவனும் அநீதியினின்று விலகி நிற்பானாக' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
2 தீமோத்தேயு 2 : 20 (RCTA)
ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்கள் வெள்ளிப்பாத்திரங்கள் மட்டுமா உள்ளன? மரப்பாத்திரங்களும் மட் பாத்திரங்களும் உள்ளன அல்லவா? சிலவற்றை மதிப்புயர்ந்தவையாகவும், சிலவற்றை மதிப்பற்றவையாகவும், கருதுகிறோம்.
2 தீமோத்தேயு 2 : 21 (RCTA)
மேற்சொன்ன குற்றங்களை நீக்கி, ஒருவன் தன்னை மாசில்லாமல் காத்துக்கொண்டால் மதிப்புயர்ந்த பரிசுத்த பாத்திரம் ஆவான். தன் தலைவனுக்குப் பயனுள்ளவனும் எத்தகைய நற்பணியும் புரியத் தக்கவனுமாயிருப்பான்.
2 தீமோத்தேயு 2 : 22 (RCTA)
இளமைக்குரிய இச்சைகளைத் தவிர்த்து விடும். நீதி, விசுவாசம், அன்பு இவற்றைத் தேடும். தூய உள்ளத்தோடு ஆண்டவரைத் தொழுவாருடன் சமாதானத்தை நாடும், அறிவில்லா மூட ஆராய்ச்சிகளைத் தள்ளி விடும்.
2 தீமோத்தேயு 2 : 23 (RCTA)
இவை பூசல்களைத் தான் விளைவிக்குமென நீர் அறிவீரன்றோ?
2 தீமோத்தேயு 2 : 24 (RCTA)
ஆண்டவருடைய ஊழியன் பூசல் விளைவிப்பவனாய் இருத்தல் ஆகாது. எல்லாருக்கும் இனியவனாகவும், போதிக்க வல்லவனாகவும், துன்பத்தில் பொறுமையுள்ளவனாகவும் இருக்கவேண்டும்.
2 தீமோத்தேயு 2 : 25 (RCTA)
தன்னை எதிர்ப்பவர்களைச் சாந்தத்தோடு கடிந்து கொள்ளவேண்டும், ஏனெனில், கடவுள் அவர்களுக்கு மனந்திரும்பும் அருளைத் தந்து அவர்கள் உண்மையைக் காணச் செய்யக் கூடும்.
2 தீமோத்தேயு 2 : 26 (RCTA)
பேயின் வலையில் சிக்குண்டு அதன் விருப்பத்திற்கு அடிமைகளாயிருந்த அவர்கள் இவ்வாறு தெளிவடைந்து அவ்வலையினின்று விடுதலை பெறக்கூடும்.
❮
❯