2 தெசலோனிக்கேயர் 2 : 1 (RCTA)
சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைப்பற்றியும், அவரோடு நாம் ஒன்று கூடுதல் பற்றியும் உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது
2 தெசலோனிக்கேயர் 2 : 2 (RCTA)
ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என யாராவது தேவ ஆவியின் வாக்காகவோ, திருவுரையாகவோ, நாங்கள் எழுதிய கடிதத்தின் செய்தியாகவோ சொன்னால், நீங்கள் உடனே நிலைகுலைந்து மனங்கலங்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
2 தெசலோனிக்கேயர் 2 : 3 (RCTA)
எவனும் உங்களை எவ்வாறேனும் ஏமாற்ற விடாதீர்கள். அந்த நாள் வருமுன் இறைவனை எதிர்க்கும் கிளர்ச்சி நிகழ வேண்டும். அக்கிரமமே உருவான மனிதன், அழிவுற வேண்டியவன் வெளிப்பட வேண்டும்.
2 தெசலோனிக்கேயர் 2 : 4 (RCTA)
இவன் இறைவனுக்கு எதிரி. தெய்வம் எனப்படுவது, வழிபாடு பெறுவது அனைத்திற்கும் மேலாகத் தன்னையே உயர்த்திக்கொள்வான். கடவுளுடைய ஆலயத்தில் அமர்ந்து, தன்னைக் கடவுளெனக் காட்டிக்கொள்ளும் அளவுக்குத் துணிவான்.
2 தெசலோனிக்கேயர் 2 : 5 (RCTA)
உங்களோடிருந்தபொழுது இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறிவந்தேன்; உங்களுக்கு நினைவு இல்லையா?
2 தெசலோனிக்கேயர் 2 : 6 (RCTA)
குறித்த காலம் வருமுன், அவன் வெளிப்படாதபடி இப்பொழுது தடையாயிருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமே.
2 தெசலோனிக்கேயர் 2 : 7 (RCTA)
அக்கிரமத்தின் மறைவான ஆற்றல் ஏற்கனவே செயல்படுகிறது. ஆனால், தற்போது தடையாயிருப்பவன் நீக்கப்படும்வரையில் தடைசெய்வான்.
2 தெசலோனிக்கேயர் 2 : 8 (RCTA)
பின்னரே அந்த அக்கிரமி வெளிப்படுவான். ஆண்டவர் தம் வாயின் ஆவியினால் அவனை அழித்து விடுவார். அவர் விரும்பியபோது தம் பிரசன்னத்தால் அவனைத் தொலைந்துவிடுவார்.
2 தெசலோனிக்கேயர் 2 : 9 (RCTA)
சாத்தானின் வல்லமையோடு அவன் வருவான். எல்லா வகையான போலி அருங்குறிகளையும் அற்புதங்களையும், வல்லமை மிக்க செயல்களையும் செய்து காட்டுவான்.
2 தெசலோனிக்கேயர் 2 : 10 (RCTA)
அழிவுறுபவர்களுக்குக் கேடாக அநீதி ஏமாற்றச் செயல்களெல்லாம் நடக்கும். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு மீட்பைத் தரவல்ல உண்மையின் மீது அன்பு கொள்ள மறுத்தனர்.
2 தெசலோனிக்கேயர் 2 : 11 (RCTA)
இதனால், பொய்மையை நம்பச் செய்யும் வஞ்சக ஆற்றலுக்குக் கடவுள் அவர்களை உட்படுத்தினார்.
2 தெசலோனிக்கேயர் 2 : 12 (RCTA)
அவ்வாறு உண்மையை விசுவசியாது அநீதத்தில் பற்றுக்கொள்ளும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
2 தெசலோனிக்கேயர் 2 : 13 (RCTA)
ஆண்டவரால் அன்பு செய்யப்படும் சகோதரர்களே, நாங்கள் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், பரிசுத்தமாக்கும் தேவ ஆவியாலும், உண்மை மீதுள்ள விசுவாசத்தாலும் நீங்கள் மீட்பு அடைவதற்கென்று கடவுள் உங்களைத் தொடக்கமுதல் தேர்ந்துகொண்டுள்ளார்.
2 தெசலோனிக்கேயர் 2 : 14 (RCTA)
இதற்காகவே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக, இறைவன் உங்களை அழைத்தார்.
2 தெசலோனிக்கேயர் 2 : 15 (RCTA)
எனவே, சகோதரர்களே, எங்களிடமிருந்து வாய் மொழியாகவோ, கடிதத்தின் வழியாகவோ நீங்கள் கற்றறிந்த பரம்பரைப் படிப்பினைகளைப் பற்றிக்கொண்டு நிலையாயிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 2 : 16 (RCTA)
நம்மேல் அன்பு கூர்ந்து, தம் அருளால் முடிவில்லாத ஆறுதலும், நல்ல நம்பிக்கையும் அளித்த நம் தந்தையாகிய கடவுளும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்
2 தெசலோனிக்கேயர் 2 : 17 (RCTA)
உங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்து எல்லா வகையான நற்செயலிலும் நற்சொல்லிலும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக.
❮
❯