2 தெசலோனிக்கேயர் 1 : 1 (RCTA)
நம் தந்தையாகிய கடவுளுக்குள்ளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் வாழுகின்ற தெசலோனிக்கேய மக்களின் சபைக்கு, சின்னப்பனும் சில்வானும் தீமோத்தேயுவும் எழுதுவது:
2 தெசலோனிக்கேயர் 1 : 2 (RCTA)
பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
2 தெசலோனிக்கேயர் 1 : 3 (RCTA)
சகோதரர்களே, உங்களை நினைத்துக் கடவுளுக்கு நாங்கள் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில், உங்கள் விசுவாசம் வளர்ந்து ஓங்குகிறது; நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் பெருகி வருகிறது.
2 தெசலோனிக்கேயர் 1 : 4 (RCTA)
உள்ள படியே. நீங்கள் வேதனைக்குள்ளாகித் துன்புறுத்தப்பட்ட போதெல்லாம் காட்டிய மன உறுதியையும் விசுவாசத்தையும் கண்டு, நாங்களும் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 1 : 5 (RCTA)
நீங்கள் படும் பாடெல்லாம் கடவுளின் அரசுக்காகவே, இத்துன்பங்கள் நீங்கள் கடவுளின் அரசுக்குத் தகுதியுள்ளவர்கள் என்பதை விளங்கச் செய்து, துன்பங்களில் நீங்கள் காட்டும் மன உறுதியும் விசுவாசமும் கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அத்தாட்சி.
2 தெசலோனிக்கேயர் 1 : 6 (RCTA)
எவ்வாறெனில், உங்களை வேதனைப்படுத்துவோருக்குத் தண்டனையாக வேதனையையும், 'வேதனையுறும் உங்களுக்குக் கைம்மாறாக எங்களோடு இளைப்பாற்றியையும் அளிப்பது கடவுளுடைய நீதிக்கு ஏற்றதேயன்றோ?
2 தெசலோனிக்கேயர் 1 : 7 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு வெளிப்படும் நாளில் இப்படி நிகழும்.
2 தெசலோனிக்கேயர் 1 : 8 (RCTA)
அந்நாளில், கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவே, இயேசு வல்லமை மிக்க தம் தூதர்களோடு வானினின்று இறங்கி வருவார்; வந்து, கடவுளை அறியாதவர்களையும், நம் ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பழி வாங்குவார்.
2 தெசலோனிக்கேயர் 1 : 9 (RCTA)
இவர்கள் ஆண்டவருடைய வல்லமை விளங்கும் மாட்சிமையைக் காண முடியாமல் அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லாத அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
2 தெசலோனிக்கேயர் 1 : 10 (RCTA)
தம்முடைய பரிசுத்தர்கள் நடுவே மகிமை பெறவும், விசுவசித்தோர் அனைவர் நடுவிலும் வியந்து போற்றப்படவும் அவர் வரும் அந்நாளில் இவையெல்லாம் நடைபெறும். நாங்கள் உங்களுக்கு அளித்த சாட்சியத்தை விசுவசித்ததால் நீங்களும் அதில் கலந்துகொள்வீர்கள்.
2 தெசலோனிக்கேயர் 1 : 11 (RCTA)
இதற்கென உங்களுக்காக என்றும் செபிக்கிறோம்; நம் கடவுள் தாம் விடுத்த அழைப்பிற்கு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக. உங்கள் நற்கருத்து ஒவ்வொன்றையும், விசுவாசத்தால் ஏவப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக.
2 தெசலோனிக்கேயர் 1 : 12 (RCTA)
இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்கள் வழியாக நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவருள் உங்களுக்கும் மகிமை உண்டாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12