2 சாமுவேல் 4 : 1 (RCTA)
அப்நேர் எபிரோனில் மடிந்தான் என்று சவுலின் மகன் இசுபோசேத் கேள்வியுற்ற போது, அவன் கைகள் தளர்ந்து போயின. மேலும் இஸ்ராயேலர் அனைவரும் கலங்கினர்.
2 சாமுவேல் 4 : 2 (RCTA)
சவுலின் மகனுக்குக் கள்வர் தலைவரான இரண்டு மனிதர் இருந்தனர். இவர்களில் ஒருவனின் பெயர் பாவானா; மற்றொருவனின் பெயர் இரேக்காப். அவர்கள் பெஞ்சமின் புதல்வரில் பெரோத்தியனான ரெம்மோனின் புதல்வர். உண்மையில் பெரோத் பெஞ்சமீனைச் சேர்ந்ததாய்க் கருதப்பட்டு வந்தது.
2 சாமுவேல் 4 : 3 (RCTA)
பெரோத்தியரோ கெத்தாயீமுக்கு ஓடிப்போய் அந்நாள் வரை அங்கே அகதிகளாய் இருந்தார்கள்.
2 சாமுவேல் 4 : 4 (RCTA)
சவுலின் மகன் யோனத்தாசுக்கு முடமான கால்களை உடைய ஒரு மகன் இருந்தான். சவுலும் யோனத்தாசும் இறந்த செய்தி ஜெஸ்ராயேலிலிருந்து வந்த போது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித்தாய் அவனை எடுத்து கொண்டு விரைந்தாள். ஓடி வந்த வேகத்தில் அவன் விழவே முடவன் ஆனான். அவனுக்கு மிபிபோசேத் என்று பெயரிடப்பட்டது.
2 சாமுவேல் 4 : 5 (RCTA)
இரேக்காப், பாவனா என்னும் பெரோத்தியரான ரெம்மோனின் மக்கள் புறப்பட்டு உச்சி வெயிலில் இசுபோசேத்தின் வீட்டில் நுழைந்தனர். அவனோ தன் படுக்கையின் மீது நண்பகல் தூக்கத்தில் இருந்தான். வீட்டு வாயிற்காரியும் கோதுமையைப் புடைத்து விட்டுத் தூங்கி விட்டாள்.
2 சாமுவேல் 4 : 6 (RCTA)
அப்போது இரேக்காப்பும் பாவானா என்ற அவன் சகோதரனும் கோதுமை வாங்க வருகிறவர்களைப் போல் நடுவீடு வரை இரகசியமாக வந்து அவனை அடிவயிற்றில் குத்திவிட்டு ஓடிப்போனார்கள்.
2 சாமுவேல் 4 : 7 (RCTA)
அவர்கள் வீட்டில் நுழைந்தபோது அவன் படுக்கை அறையில் தன் கட்டிலின் மேல் படுத்திருந்ததைக் கண்டு அவ்விருவரும் அருகில் சென்று அவனைக் கொன்று போட்டனர். பின் அவன் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் பாலைவனம் வழியாக நடந்து,
2 சாமுவேல் 4 : 8 (RCTA)
இசுபோசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொணர்ந்தனர்; அரசரை நோக்கி, "உம்முடைய உயிரை வாங்கத் தேடிய உம் மாற்றானாகிய சவுலின் மகன் இசுபோசேத்தின் தலை இதோ! ஆண்டவர் என் தலைவராகிய அரசருக்காகச் சவுலின் மேலும், அவன் குடும்பத்தாரின் மேலும் பழிவாங்கினார்!" என்றனர்.
2 சாமுவேல் 4 : 9 (RCTA)
தாவீதோ பெரோத்தியனான ரெம்மோனின் புதல்வர்களாகிய இரேக்காபுக்கும் அவன் சகோதரனான பாவனாவுக்கும் மறுமொழியாக, "என் ஆன்மாவை எல்லா இக்கட்டுகளினின்றும் விடுவித்த ஆண்டவர் மேல் ஆணை!
2 சாமுவேல் 4 : 10 (RCTA)
முன்பு ஒருவன் வந்து என்னை நோக்கி, 'சவுல் இறந்து பட்டான்' என்று எனக்கு அறிவித்துத் தான் கொண்டு வந்தது எனக்கு நற்செய்தி என்று எண்ணிக் கொண்டிருக்கையில், நான் அவனைப் பிடித்து அவன் கொண்டு வந்த செய்திக்குப் பரிசாக, சிசெலேக் ஊரில் அவனைக் கொன்று போட்டேன்.
2 சாமுவேல் 4 : 11 (RCTA)
அதைவிட, தனது வீட்டுக்குள் படுக்கையின்மேல் உறங்கிக் கொண்டிருந்த குற்றமற்ற மனிதனைக் கொலை செய்த கொடியவருக்கு எவ்வளவு அதிகமாய்த் தண்டனை கொடுக்க வேண்டும்? இப்பொழுது நான் உங்களைப் பூமியினின்று அழித்து அவனுடைய இரத்தப் பழியைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பேனா?" என்று சொல்லி,
2 சாமுவேல் 4 : 12 (RCTA)
தன் சேவகர்களுக்குக் கட்டளையிடவே, அவர்களும் அவர்களைக் கொன்றனர். பின்னர் இருவருடைய கைகால்களையும் வெட்டி எபிரோனில் குளத்தருகில் அவர்களைத் தொங்கவிட்டனர். பிறகு அவர்கள் இசுபோசேத்துடைய தலையை எடுத்துச் சென்று எபிரோனில் இருந்த அப்நேரின் கல்லறையிலேயே அடக்கம் செய்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12