2 சாமுவேல் 3 : 1 (RCTA)
அப்படியிருக்க, சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் இடையே நெடு நாள் போர் நடந்தது. தாவீது முன்னேறி மேன்மேலும் வலிமை வாய்ந்தவனானான்; சவுலின் குடும்பமோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போயிற்று.
2 சாமுவேல் 3 : 2 (RCTA)
எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாள் வயிற்றில் பிறந்த அம்னோன் அவன் தலைமகன்.
2 சாமுவேல் 3 : 3 (RCTA)
அவனுக்குப் பிறகு கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலிடம் கெலேயாப் பிறந்தான். மூன்றாவதாக எசூரி அரசனான தொல்மாயியின் மகளாகிய மாக்காளின் வயிற்றில் அப்சலோம் பிறந்தான்.
2 சாமுவேல் 3 : 4 (RCTA)
நான்காவதாக ஆகீத்துடைய வயிற்றில் அதோனியாசும், ஐந்தாவதாக அபித்தாளுடைய வயிற்றில் சாப்பாத்தியாவும் அவனுக்குப் பிறந்தனர்.
2 சாமுவேல் 3 : 5 (RCTA)
அன்றியும் ஆறாவதாக தன் சொந்த மனைவி ஏகிலாளின் வயிற்றில் தாவீதுக்கு ஜெத்திராம் பிறந்தான். இவர்களே தாவீதுக்கு எபிரோனில் பிறந்தவர்கள்.
2 சாமுவேல் 3 : 6 (RCTA)
நிற்க, சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த போது, நேரின் மகனான அப்நேர் சவுலின் குடும்ப காரியங்களைக் கவனித்து வந்தான்.
2 சாமுவேல் 3 : 7 (RCTA)
ஆயாவின் மகளாகிய ரெஸ்பா ஏற்கெனவே சவுலின் வைப்பாட்டியாய் இருந்தாள். ஒரு நாள் இசுபோசேத் அப்நேரை நோக்கி,
2 சாமுவேல் 3 : 8 (RCTA)
நீ என் தந்தையின் வைப்பாட்டியோடு படுத்தது ஏன்? என்றான். அவன் இசுபோசேத்துடைய வார்த்தையின் பொருட்டு மிகவும் கோபம் கொண்டு, "நான் உம் தந்தை சவுலின் குடும்பத்தின் மேலும், அவருடைய உடன்பிறந்தார், உற்றார் மேலும் இரக்கம் கொண்டு உம்மைத் தாவீதுடைய கையில் ஒப்படைக்காமலிருந்தேன். நான் என்ன நாய்த் தலையனா? இன்று நீரோ என் எதிரியாகிய யூதாவுக்கு முன்பாக அப்பெண் காரியமாய் என்னை விசாரித்துக் குற்றம் கண்டு பிடிக்க வந்துள்ளீரே!
2 சாமுவேல் 3 : 9 (RCTA)
ஆண்டவர் தாவீதுக்கு ஆணையிட்டவாறு நான் அவனுக்குச் செய்யாமல் போவேனாகில், கடவுள் அப்நேருக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக! சவுலின் குடும்பத்தை விட்டு அரசாட்சி பெயர்க்கப்பட்டு,
2 சாமுவேல் 3 : 10 (RCTA)
தான் துவக்கி பெர்சபே வரையுள்ள இஸ்ராயேலின் மேலும் யூதாவின் மேலும் தாவீதின் அரியணை எழும்பும்படி செய்வேன்" என்று சபதம் கூறினான்.
2 சாமுவேல் 3 : 11 (RCTA)
இசுபோசேத் அப்நேருக்கு அஞ்சியதால் மறுமொழி ஒன்றும் சொல்லக் கூடாதவனாய் இருந்தான்.
2 சாமுவேல் 3 : 12 (RCTA)
பின்பு அப்நேர் தன் பெயரால் தாவீதிடம் தூதர்களை அனுப்பி, "நாடு யாருடையது? நீர் என்னோடு நட்புக் கொண்டால் நீர் இஸ்ராயேல் முழுவதையும் வாகை சூடுமாறு நான் உமக்குத் துணை நிற்பேன்" என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 3 : 13 (RCTA)
அதற்குத் தாவீது, "மிக்க நல்லது; நான் உன்னோடு நட்புக் கொள்வேன். ஆயினும் உன்னை ஒன்று கேட்பேன்; அதாவது, சவுலின் மகள் மிக்கோலை நீ என்னிடம் அழைத்து வருமுன் நீ என் கண்ணில் விழிக்கக்கூடாது. நீ இவ்வாறு செய்த பின்னரே நீ என்னை காண வரலாம்" என்று பதில் அனுப்பினான்.
2 சாமுவேல் 3 : 14 (RCTA)
பிறகு தாவீது சவுலின் மகன் இசுபோசேத்திடம் தூதரை அனுப்பி, "நான் பிலிஸ்தியருடைய நூறு நுனித் தோல்களைப் பரிசமாகக் கொடுத்து மணந்த என் மனைவி மிக்கோலை நீர் என்னிடம் அனுப்பி விடும்" என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 3 : 15 (RCTA)
அப்பொழுது இசுபோசேத் ஆள் அனுப்பி அவளை லாயிஸ் மகன் பால்தியேல் என்ற அவளுடைய கணவனிடமிருந்து கொணரச் செய்தான்.
2 சாமுவேல் 3 : 16 (RCTA)
அவளுடைய கணவன் அழுது கொண்டு பகுரிம் வரை அவள் பிறகே வந்தான். அப்பொழுது அப்நேர் அவனை நோக்கி, "நீ திரும்பிப் போ" என்றான். அவனும் திரும்பிப் போய்விட்டான்.
2 சாமுவேல் 3 : 17 (RCTA)
மீண்டும் அப்நேர் இஸ்ராயேல் மூப்பர்களைப் பார்த்து, "தாவீதை உங்கள் அரசனாக்க வேண்டும் என்று வந்தீர்களே;
2 சாமுவேல் 3 : 18 (RCTA)
இப்போழுது அதைச் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் தாவீதை நோக்கி, 'என் ஊழியன் தாவீதின் கையினால் இஸ்ராயேலைப் பிலிஸ்தியருடைய கையினின்றும் பகைவர் அனைவரின் கையினின்றும் மீட்பேன்' என்று சொல்லியிருக்கிறார்" என்றான்.
2 சாமுவேல் 3 : 19 (RCTA)
பிறகு அப்நேர் பெஞ்சமீனரோடும் அவ்வாறே பேசினான். பிறகு இஸ்ராயேலரும் பெஞ்சமீனின் எல்லாக் குடும்பத்தினரும் விரும்பியவற்றை எல்லாம் எபிரோனில் இருந்த தாவீதிடம் சொல்லச் சென்றான்.
2 சாமுவேல் 3 : 20 (RCTA)
அப்நேரும் அவனோடு இருபது பேரும் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த போது, தாவீது அப்நேருக்கும் அவனோடு வந்திருந்த மனிதர்களுக்கும் விருந்து செய்தான்.
2 சாமுவேல் 3 : 21 (RCTA)
பின்பு அப்நேர் தாவீதை நோக்கி, "நான் எழுந்து சென்று என் தலைவராகிய அரசரிடம் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு வருகிறேன். அப்பொழுது நான் உம்மோடு உடன்படிக்கை செய்ய, நீர் விரும்பினபடியே யாவரையும் நீர் அரசாள்வீர்" என்றான். அப்படியே தாவீது அப்நேரை அனுப்பிவிட அவன் சமாதானத்தோடு புறப்பட்டுப் போனான்.
2 சாமுவேல் 3 : 22 (RCTA)
அப்பொழுது திருடரை வெட்டிக் கொன்று குவித்த தாவீதின் சேவகரும் யோவாபும் மிகுந்த கொள்ளைப் பொருட்களுடன் வந்தனர். அப்பொழுது அப்நேர் எபிரோனில் தாவீதோடு இல்லை. ஏற்கெனவே தாவீது அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்ததால் அவன் சமாதனத்தோடு போய்விட்டான்.
2 சாமுவேல் 3 : 23 (RCTA)
யோவாபும் அவனோடு இருந்த எல்லாப் படை வீரரும் அதன் பிறகுதான் வந்தனர். அப்போது நேரின் மகன் அப்நேர் அரசரிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய் அனுப்பிவிட்டார் என்றும் யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2 சாமுவேல் 3 : 24 (RCTA)
அதைக் கேட்டு யோவாப் அரசரிடம் சென்று, "என்ன செய்தீர்? உம்மிடம் வந்த அப்நேருக்கு நீர் விடை கொடுத்து அனுப்பிவிட்டது ஏன்?
2 சாமுவேல் 3 : 25 (RCTA)
நேரின் மகன் அப்நேர் உம்மை ஏமாற்றவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதை எல்லாம் ஆராயவும் தான் உம்மிடம் வந்தான் என்று அறியீரோ?" என்றான்.
2 சாமுவேல் 3 : 26 (RCTA)
ஆகையால் யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டு, தாவீதுக்குத் தெரியாமல் அப்நேருக்குத் தூதரை உடனே அனுப்பி அவனை நீரா என்ற ஏரியிலிருந்து திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்தான்.
2 சாமுவேல் 3 : 27 (RCTA)
அப்நேர் எபிரோனுக்குத் திரும்பி வந்ததும் யோவாப் இரகசியமாய் அவனோடு பேசப்போகிறவன் போல் அவனை வாயிலின் நடுவே அழைத்துப் போய் அவனை அடிவயிற்றில் குத்தினான். அவனும் யோவாபின் தம்பி அசாயேலுடைய இரத்தப் பழி தீரும் பொருட்டு உயிர் துறந்தான்.
2 சாமுவேல் 3 : 28 (RCTA)
தாவீது நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, "நேரின் மகன் அப்நேரின் இரத்தத்தின் மட்டில் ஆண்டவர் திருமுன் நான் என்றென்றும் குற்றம் அற்றவன்; எனது அரசும் குற்றம் அற்றதே.
2 சாமுவேல் 3 : 29 (RCTA)
அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தந்தையின் குடும்பத்தின் மேலும் விழட்டும். மேலும், வெட்டை நோயாளியும் தொழுநோயாளனும் பெண் வெறியனும் வாளால் மடிபவனும் உணவுக்கு வகையற்றவனும் யோவாபின் குடும்பத்தில் குறையாது இருக்கக் கடவர்" என்றான்.
2 சாமுவேல் 3 : 30 (RCTA)
அவ்விதமே காபாவோனில் நடந்த போரில் அப்நேர் தங்கள் தம்பி அசாயேலைக் கொன்றதின் பொருட்டு, யோவாபும் அவன் சகோதரன் அபிசாயியும் அவனைக் கொன்று போட்டனர்.
2 சாமுவேல் 3 : 31 (RCTA)
அப்போது தாவீது யோவாபையும் அவனோடு இருந்த எல்லா மக்களையும் நோக்கி, "நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கோணி உடுத்தி அப்நேருடைய சடலத்தின்முன் துக்கம் கொண்டாடுங்கள்" என்று சொன்னார். தாவீது அரசரும் சவப்பெட்டிக்குப் பிறகே நடந்து போனார்.
2 சாமுவேல் 3 : 32 (RCTA)
அவர்கள் அப்நேரை எபிரோனில் அடக்கம் செய்த பிறகு, தாவீது அரசர் அப்நேரின் கல்லறையருகே ஓலமிட்டு அழுதார். எல்லா மக்களும் புலம்பி அழுதனர்.
2 சாமுவேல் 3 : 33 (RCTA)
அரசர் அப்நேரின் பொருட்டு ஒப்பாரியிட்டு அழுது, "கோழைகள் சாகிறது போல் அப்நேர் நிச்சயம் சாகவில்லை.
2 சாமுவேல் 3 : 34 (RCTA)
உன் கைகளில் விலங்கு போடப்பட்டதும் இல்லை; உன் பாதங்களில் தளை பூட்டப்பட்டதும் இல்லை; அக்கிரமிகளின் கையில் அகப்பட்டு இறக்கிறவர்களைப் போல் நீயும் இறந்தாய்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும் அரசர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொல்லிக் கண்ணீர் விட்டனர்.
2 சாமுவேல் 3 : 35 (RCTA)
பொழுது அடையுமுன் மக்கள் எல்லாரும் தாவீதுடன் அப்பம் உண்ண வந்தனர். அப்பொழுது தாவீது, "சூரியன் மறையுமுன் நான் அப்பத்தையாவது வேறெதையாவது சுவை பார்த்தால், கடவுள் எனக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக" என்று ஆணையிட்டுச் சொன்னார்.
2 சாமுவேல் 3 : 36 (RCTA)
மக்கள் எல்லாரும் இதைக் கேட்டார்கள். அரசன் இப்படி வெளிப்படையாய்ச் செய்ததெல்லாம் மக்கள் அனைவரின் கண்களுக்கும் பிடித்திருந்தது.
2 சாமுவேல் 3 : 37 (RCTA)
நேரின் மகன் அப்நேர் கொலையுண்டு இறந்தது அரசரால் அல்ல என்று அன்று எல்லா மக்களும் இஸ்ராயேலர் அனைவரும் அறிந்து கொண்டனர்.
2 சாமுவேல் 3 : 38 (RCTA)
அன்றியும் அரசர் தம் ஊழியர்களை நோக்கி, "இன்று இஸ்ராயேலின் மாபெரும் தலைவன் மடிந்தான் என்று அறியீர்களோ?
2 சாமுவேல் 3 : 39 (RCTA)
நான் அரசனாக அபிஷுகம் பெற்றிருந்தும் வலிமை குன்றியவனாய் இருக்கின்றேன். சார்வியாவின் மக்களாகிய இம்மனிதரோ என்னை விட வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆண்டவர் தீமை செய்தவனுக்கு அவனுடைய தீமைக்கு ஏற்றவாறு பிரதிபலன் அளிப்பாராக" என்றான்.
❮
❯