2 சாமுவேல் 2 : 1 (RCTA)
இதன்பின் தாவீது, "நான் யூதாவின் நகர்களில் ஒன்றிற்குப் போகலாமா?" என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு ஆண்டவர், "போ" என்றார். "எங்குப் போகலாம்?" என்று தாவீது கேட்டதற்கு அவர், "எபிரோனுக்கு" என்று கூறினார்.
2 சாமுவேல் 2 : 2 (RCTA)
அப்படியே தாவீது தன் இரண்டு மனைவியராகிய ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாளோடும், கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலோடும் புறப்பட்டுப் போனான்.
2 சாமுவேல் 2 : 3 (RCTA)
மேலும் தாவீது தன்னோடு இருந்த ஆண்களையும், அவரவர் குடும்பத்தாரையும் கூட்டிக் கொண்டு போனான். அவர்கள் எபிரோனைச் சேர்ந்த நகர்களில் குடியேறினார்கள்.
2 சாமுவேல் 2 : 4 (RCTA)
அப்போது யூதாவின் ஆடவர் வந்து அங்குத் தாவீதை யூதா வம்சத்தின் அரசராக அபிஷுகம் செய்தார்கள். காலாத் நாட்டு ஜாபேசு மனிதர் சவுலை அடக்கம் செய்து விட்டனர் என்று பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப் பட்டது.
2 சாமுவேல் 2 : 5 (RCTA)
தாவீது காலாத் நாட்டு ஜாபேசு மனிதரிடம் தூதர்களை அனுப்பி, "உங்கள் அரசரான சவுலின்மீது நீங்கள் இவ்வளவு இரக்கம் வைத்து அவரை அடக்கம் செய்ததினால் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்!
2 சாமுவேல் 2 : 6 (RCTA)
இப்பொழுதே ஆண்டவர் உங்களுக்கு இரக்கத்தையும் உண்மையையும் வெகுமதியாகத் தந்தருள்வார் என்பது திண்ணம். அன்றியும் நீங்கள் இக்காரியத்தைச் செய்ததால் நானும் இந்நன்மையைப்பற்றி நன்றி செலுத்துகின்றேன்.
2 சாமுவேல் 2 : 7 (RCTA)
உங்கள் கைகள் வலுப்பெற்று, நீங்கள் வீரப் புதல்வராய் இருக்கவும் கடவீர்களாக. ஏனெனில் உங்கள் அரசரான சவுல் இறந்துவிட்டாலும் யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று சொல்லச் சொன்னார்.
2 சாமுவேல் 2 : 8 (RCTA)
ஆனால் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்நேர் சவுலின் மகனான இசுபோசேத் என்பவனைப் பாசறையைச் சுற்றிலும் அழைத்துக்கொண்டு போய்,
2 சாமுவேல் 2 : 9 (RCTA)
அவனைக் காலாத், கெசூரி, ஜெஸ்ராயேல், எபிராயீம், பெஞ்சமின் மேலும், இஸ்ராயேல் அனைத்தின் மீதும் அரசனாக ஏற்படுத்தினான்.
2 சாமுவேல் 2 : 10 (RCTA)
சவுலின் மகன் இசுபோசேத் இஸ்ராயேலை அரசாளத் துவக்கின போது அவனுக்கு நாற்பது வயது. அவன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். யூதா கோத்திரத்தார் மட்டும் தாவீதைப் பின்பற்றினர்.
2 சாமுவேல் 2 : 11 (RCTA)
தாவீது எபிரோனில் யூதா கோத்திரத்தாரை ஆண்டு வந்த காலம் ஏழு ஆண்டும் ஆறுமாதமும் ஆகும்.
2 சாமுவேல் 2 : 12 (RCTA)
நேரின் மகன் அப்நேரும், சவுலின் மகன் இசுபோசேத்துடைய சேவகர்களும் பாசறையினின்று காபாவோனுக்குப் புறப்பட்டனர்.
2 சாமுவேல் 2 : 13 (RCTA)
அப்பொழுது சார்வியாவின் மகன் யோவாபும் தாவீதின் சேவகர்களும் புறப்பட்டுப் போய், காபாவோனின் குளத்தருகில் அவர்களைச் சந்தித்தனர். இருதிறத்தாரும் ஒன்றாய்க்கூடிக் குளத்தின் இருமருங்கிலும் சிறிது தங்கியிருந்தனர்.
2 சாமுவேல் 2 : 14 (RCTA)
அப்பொழுது அப்நேர் யோவாபை நோக்கி, "இளைஞர் எழுந்து நமக்கு முன்பாக விளையாடினால் நலமாயிருக்கும் அன்றோ?" என்றான். அதற்கு யோவாப், "சரி" என்று சம்மதித்தான்.
2 சாமுவேல் 2 : 15 (RCTA)
எனவே சவுலின் மகன் இசுபோசேத்துடைய பக்கத்தினின்று பெஞ்சமின் கோத்திரத்தார் பன்னிருவரும், தாவீதுடைய வாலிபரில் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
2 சாமுவேல் 2 : 16 (RCTA)
அவர்கள் ஒருவருக்கொருவர் தலையைப் பிடித்து, விலாவில் வாளால் குத்த அனைவரும் ஒருங்கே இறந்தனர். எனவே, அவ்விடம் வலியோர் இடம் என்று அழைக்கப்பட்டது. அது காபாவோனில் உளது.
2 சாமுவேல் 2 : 17 (RCTA)
அன்று கடும்போர் மூளவே, அப்நேரும் இஸ்ராயேல் மனிதரும் தாவீதுடைய சேவகர்களால் முறியடிக்கப்பட்டனர்.
2 சாமுவேல் 2 : 18 (RCTA)
ஆனால் அங்கே யோவாப், அபிசாயி, அசாயேல் என்னும் சார்வியாவின் மக்கள் மூவரும் இருந்தனர். அசாயேலோ காட்டு மான் போல் மிக வேகமாய் ஓடக்கூடியவன்.
2 சாமுவேல் 2 : 19 (RCTA)
அவன் அப்நேரைப் பின் தொடர்ந்து, வலமோ இடமோ விலகாமல் துரத்திக் கொண்டு போனான்.
2 சாமுவேல் 2 : 20 (RCTA)
அப்நேர் திரும்பிப் பார்த்து, "நீ அசாயேல்தானா?" என அவன், "நான் தான்" என்றான்.
2 சாமுவேல் 2 : 21 (RCTA)
அப்நேர் அவனை நோக்கி, "நீ வலப்பக்கமாவது இடப்பக்கமாவது விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்துக் கொள்ளையிடு" என்றான். அசாயேலோ அவனை விட்டு விட மனதின்றி அவனை விடாது துரத்தினான்.
2 சாமுவேல் 2 : 22 (RCTA)
அப்நேர் மீண்டும் அசாயேலைப் பார்த்து, "என்னைப் பின் தொடராதே, விலகு; இல்லாவிடில் நான் உன்னைத் தரையோடு குத்திப் போடுவேன்; பின் நான் உன் சகோதரனாகிய யோவாபின் முகத்தில் விழிப்பது எப்படி?" என்றான்.
2 சாமுவேல் 2 : 23 (RCTA)
அவன் அவ்வார்த்தையை அசட்டை செய்து விலகாதிருந்ததைக் கண்டு, அப்நேர் தன் ஈட்டியைத் திருப்பி அவனை அடிவயிற்றில் குத்தினான். ஈட்டி (உடலில் பாய்ந்து) முதுகு வழியே வெளியே வந்தது. அவன் அங்கேயே விழுந்து இறந்தான். அசாயேல் விழுந்து இறந்த இடத்தின் வழியாய் வருபவர்கள் எல்லாரும் அசையாது நிற்பது வழக்கம்.
2 சாமுவேல் 2 : 24 (RCTA)
மேலும் யோவாபும் அபிசாயும், தப்பி ஓடிய அப்நேரைத் துரத்திக் கொண்டிருக்கையில் சூரியன் மறைந்த படியால் அவர்கள் காபாவோன் என்ற பாலைவன வழிக்கு எதிரேயுள்ள நீரோடைக் குன்று வரை வந்தார்கள்.
2 சாமுவேல் 2 : 25 (RCTA)
அப்போது பெஞ்சமின் புதல்வர் அப்நேரிடம் ஒன்று திரண்டு வந்து ஒரு மேட்டின் உச்சியில் நின்று கொண்டனர்.
2 சாமுவேல் 2 : 26 (RCTA)
அப்போது அப்நேர் யோவபைப் பார்த்துக் கூப்பிட்டு, "உம்முடைய வாளுக்கு ஓய்வில்லையா? இது அழிவில் முடியும் என்று நீர் அறியீரோ? தங்கள் சகோதரர்களைப் பின்தொடர்வதை விட்டு விட்டுப் பின்வாங்க வேண்டும் என்று நீர் மக்களுக்கு எத்தனை காலம் சொல்லாது இருப்பீர்?" என்றான்.
2 சாமுவேல் 2 : 27 (RCTA)
அதற்கு யோவாப், "ஆண்டவர் மேல் ஆணை! நீர் இவ்விதமாய்ப் பேசியிருந்தீரானால் இன்று காலையிலேயே மக்கள் தங்கள் சகோதரரைப் பின் தொடராது திரும்பியிருப்பார்கள் அன்றோ?" என்று மறுமொழியாகச் சொல்லி,
2 சாமுவேல் 2 : 28 (RCTA)
எக்காளம் ஊதினான்; உடனே சேனை அனைத்தும் அப்பால் இஸ்ராயேலைப் பின் தொடராமலும் போர் புரியாமலும் நின்று விட்டது.
2 சாமுவேல் 2 : 29 (RCTA)
ஆனால் அப்நேரும் அவன் வீரரும் அன்று இரவு முழுவதும் காட்டு வழியாய்ச் சென்று யோர்தானையும் கடந்து, பெத்தாரோனையும் முழுதும் தாண்டிப் பாசறைக்கு வந்தார்கள்.
2 சாமுவேல் 2 : 30 (RCTA)
யோவாபோ அப்நேரைவிட்டுத் திரும்பி வந்து மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டினான். அசாயேலைத் தவிரத் தாவீதின் சேவகரில் பத்தொன்பது பேர் அங்கு வரவில்லை.
2 சாமுவேல் 2 : 31 (RCTA)
தாவீதின் சேவகரோ பெஞ்சமின் கோத்திரத்தாரிலும் அப்நேரோடு இருந்த மனிதரிலும் முந்நூற்றறுபது பேரைக் கொன்றிருந்தனர்.
2 சாமுவேல் 2 : 32 (RCTA)
பின்பு அசாயேலின் உடலை எடுத்து வந்து பெத்லகேமில் உள்ள அவன் தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்; யோவாபும் அவனுடன் இருந்த மனிதரும் இரவு முழுவதும் நடந்து விடியும்போது எபிரோனை வந்தடைந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32