2 சாமுவேல் 13 : 1 (RCTA)
பின்னர் நிகழ்ந்ததாவது: தாவீதின் மகனான அம்னோன் என்பவன் தாவீதின் மற்றொரு மகனான அப்சலோமின் சகோதரியின் மேல் காதல் கொண்டான். தாமார் என்ற பெயர் கொண்ட இவள் ஒரு பேரழகி.
2 சாமுவேல் 13 : 2 (RCTA)
அவன் தாமாரை எவ்வளவு காதலித்தான் என்றால், அவள் மீது கொண்டிருந்த ஏக்கத்தினால் நோயுற்றான். அவள் கன்னிப் பெண்ணானபடியால் அவளுடன் தகாத உறவு கொள்வது கடினம் என அவனுக்குத் தோன்றிற்று.
2 சாமுவேல் 13 : 3 (RCTA)
அப்படியிருக்க அம்னோனுக்கு யோனதாப் என்ற நண்பன் இருந்தான். இவன் தாவீதின் சகோதரனான செம்மாவின் மகன்; பெரும் தந்திரசாலி.
2 சாமுவேல் 13 : 4 (RCTA)
இவன் அம்னோனைப் பார்த்து, "இளவரசே, நீ நாளுக்கு நாள் இவ்வாறு மெலிந்துபோகக் காரணம் என்ன? எனக்குச் சொல்லமாட்டாயா?" என்றான். அதற்கு அம்னோன், "என் சகோதரனான அப்சலோமின் சகோதரி தாமாரின் மேல் நான் காதல் கொண்டுள்ளேன்" என்றான்.
2 சாமுவேல் 13 : 5 (RCTA)
யோனதாப் அவனை நோக்கி, "நீ உன் படுக்கையில் படுத்துக்கொண்டு, நோயுற்றவனைப் போல் பாசாங்கு செய். உன் தந்தை உன்னைப் பார்க்க வரும் போது நீ அவரைப் பார்த்து: 'என் சகோதரி தாமார் எனக்கு உணவு கொடுத்து அவள் கையால் நான் சாப்பிடத்தக்க உணவு சமைத்துத் தரும்படி தாங்கள் தயவுசெய்து அவளை அனுப்பவேண்டும்' என்று சொல்" என்றான்.
2 சாமுவேல் 13 : 6 (RCTA)
அதன்படி அம்னோன் நோயாளி போன்று பாசாங்கு செய்தான். அரசர் அவனைப் பார்க்க வந்தார். அம்னோன் அவரை நோக்கி, "என் சகோதரி தாமார் கையினால் நான் சாப்பிடும்படி என் கண்முன் இரண்டு பணியாரங்களைச் செய்து கொடுக்க அவளை அனுப்பும்படி வேண்டுகிறேன்" என்றான்.
2 சாமுவேல் 13 : 7 (RCTA)
எனவே, தாவீது தாமாருக்கு ஆள் அனுப்பி, "நீ உன் சகோதரன் அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு" என்று சொல்லச் சொன்னார்.
2 சாமுவேல் 13 : 8 (RCTA)
தாமார் தன் சகோதரன் அம்னோன் வீட்டுக்கு வந்தாள். அவன் படுத்திருந்தான். அவள் மாவு எடுத்துப் பிசைந்து கூழாக்கி அவன் கண்முன் பணியாரங்களைச் சுட்டாள்.
2 சாமுவேல் 13 : 9 (RCTA)
பின்னர் அவற்றை எடுத்து அவனுக்குப் படைத்தாள். அம்னோன் "எல்லோரும் வெளியே போனாலன்றி நான் சாப்பிட மாட்டேன்" என்றான். அவ்விதமே அனைவரும் வெளியேறினர்.
2 சாமுவேல் 13 : 10 (RCTA)
பின்னர், அம்னோன் தாமாரை நோக்கி, "நான் உன் கையால் சாப்பிடும்படி படுக்கை அறைக்குப் பணியாரங்களைக் கொண்டுவா" என்றான். தாமார் தான் செய்த பணியாரங்களைப் படுக்கை அறையில் இருந்த தன் சகோதரன் அம்னோனிடம் கொண்டு வந்து, அவனுக்குக் கொடுக்கையில்,
2 சாமுவேல் 13 : 11 (RCTA)
அவன் அவள் கையைப் பிடித்து, "தங்காய், வா; வந்து என்னோடு படு" என்றான்.
2 சாமுவேல் 13 : 12 (RCTA)
அதற்கு அவள், "அண்ணா, வேண்டாம், என்னைக் கற்பழிக்காதே. இஸ்ராயேல் மனிதர் இவ்வாறு செய்வதில்லை. இப்படிப்பட்ட மதிகெட்ட செயலை நீ செய்யலாமா?
2 சாமுவேல் 13 : 13 (RCTA)
இதனால் வரும் அவமானத்தை என்னால் தாங்க முடியாது. நீயும் இஸ்ராயேலில் மதிகெட்டவர்களுள் ஒருவனாய் இருப்பாய். மாறாக அரசரிடம் நீ கேள். அவர் என்னை உனக்கு மனைவியாகத் தர மறுக்க மாட்டார்" என்றாள்.
2 சாமுவேல் 13 : 14 (RCTA)
அவள் எவ்வளவு தான் கெஞ்சியும் அம்னோன் ஒன்றுக்கும் செவிகொடாமல் வலுவந்தமாய் அவளைப் பிடித்து அவளோடு படுத்தான்.
2 சாமுவேல் 13 : 15 (RCTA)
அதன் பின் அம்னோன் அவளை மிகவும் வெறுக்கத் தொடங்கினான். முன்பு அவளை எவ்வளவு விரும்பியிருந்தானோ, அதற்கும் அதிகமாக இப்போது அவளை வெறுத்தான். அவளை பார்த்து, "நீ எழுந்து போ" என்றான்.
2 சாமுவேல் 13 : 16 (RCTA)
அப்போது அவள், "நீ முன்பு செய்த அநியாத்தை விட, இப்போது நீ என்னைத் துரத்தி விடுகிறது பெரிய அநியாயம்" என்று சொன்னாள். அவனோ அவளுடைய சொல்லைக் கேட்க மனதின்றி,
2 சாமுவேல் 13 : 17 (RCTA)
தனக்குப் பணிவிடை செய்து வந்த வேலைக்காரனை அழைத்து, "இவளை இங்கிருந்து வெளியேற்றிக் கதவைத் தாழிடு" என்றான்.
2 சாமுவேல் 13 : 18 (RCTA)
அரசருடைய மணமாகாப் புதல்வியர் உடுத்திக் கொள்ளும் நீண்டதொரு மேலங்கியைத் தாமார் அணிந்திருந்தாள். அம்னோனின் வேலைக்காரன் அவளை வெளியே தள்ளிக் கதவை பூட்டினான்.
2 சாமுவேல் 13 : 19 (RCTA)
அவள் தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு, தன் ஆடையைக் கிழித்து, இரு கைகளையும் தன் தலை மேல் வைத்தவளாய் அழுது கொண்டே போனாள்.
2 சாமுவேல் 13 : 20 (RCTA)
அப்போது அவளுடைய சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, "என்ன, உன் சகோதரன் அம்னோன் உன்னோடு படுத்தானோ? தங்காய், நீ இப்போது ஒன்றும் சொல்லாதே. அவன் உன் சகோதரன் அல்லனோ ? இதன் பொருட்டு நீ மனம் வருந்தாதே" என்றான். அப்படியே துயருற்றிருந்த தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் தங்கினாள்.
2 சாமுவேல் 13 : 21 (RCTA)
தாவீது அரசர் இதைக் கேள்வியுற்ற போது மிகவும் வருந்தினார். ஆனால் அம்னோனை அவர் வருத்தப்படுத்த விரும்பவில்லை; ஏனெனில், அவன் தம் மூத்த மகனானபடியால் அவனுக்கு அன்பு செய்து வந்தார்.
2 சாமுவேல் 13 : 22 (RCTA)
அப்சலோமோ அம்னோனோடு நல்லதோ கெட்டதோ ஒன்றும் பேசவில்லை. ஆனால் அம்னோன் தன் சகோதரி தாமாரை கற்பழித்தது பற்றி அப்சலோம் அவனைப் பகைத்தான்.
2 சாமுவேல் 13 : 23 (RCTA)
ஈராண்டுகட்குபின் எபிராயீமுக்கு அருகிலுள்ள பால்- ஆசோரில் அப்சலோமுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் வந்தது. அப்சலோம் அரச புதல்வர் எல்லாரையும் அழைத்தான்.
2 சாமுவேல் 13 : 24 (RCTA)
அவன் அரசரிடம் போய் அவரை நோக்கி, "அடியேனுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கபடுகிறது. அரசரும் அவர் ஊழியர்களும் உம் அடியான் வீட்டுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்றான்.
2 சாமுவேல் 13 : 25 (RCTA)
அப்போது அரசர் அப்சலோமைப் பார்த்து, "வேண்டாம், மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிகச் செலவாகுமே" என்றார். ஆனால் அவன் அவரை வருந்திக் கேட்டுக் கொண்ட படியால் அரசர்வரச் சம்மதிக்காவிடினும் அவனை ஆசீர்வதித்தார்.
2 சாமுவேல் 13 : 26 (RCTA)
அப்சலோம் மறுபடியும் தந்தையை நோக்கி, "நீர் வராவிடினும் என் சகோதரன் அம்னோனையாவது எங்களுடன் அனுப்பி வையும்" என்றான். அதற்கு அரசர், "அவன் உன்னுடன் வரவேண்டியதில்லை" என்றார்.
2 சாமுவேல் 13 : 27 (RCTA)
அப்சலோம் அவரை வற்புறுத்தியதால் இறுதியில் அரசர் அம்னோனையும் அரச புதல்வர் அனைவரையும் அவனுடன் அனுப்பி வைத்தார். அப்சலோம் அரச விருந்துக்கு ஒப்பான ஒரு விருந்தைத் தயாரித்திருந்தான்.
2 சாமுவேல் 13 : 28 (RCTA)
அப்சலோம் தன் ஊழியர்களை நோக்கி, "அம்னோன் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதையில் இருக்கும் நேரத்தை நன்றாகப் பார்த்திருங்கள். அந்நேரத்தில் நான், 'அம்னோனை அடியுங்கள்' என்று சொல்லுவேன். உடனே அவனை நீங்கள் கொன்று போடுங்கள். அஞ்ச வேண்டாம்; ஏனெனில் உங்களுக்குக் கட்டளை இடுவது நானே. நீங்கள் திடம் கொண்டு தைரியமாய் இருங்கள்" என்று சொல்லிக் கட்டளை இட்டிருந்தான்.
2 சாமுவேல் 13 : 29 (RCTA)
ஆகையால் அப்சலோம் கட்டளையிட்டிருந்தபடியே அவன் ஊழியர் அம்னோனுக்குச் செய்தனர், அரச புதல்வர் அனைவரும் எழுந்து, தத்தம் கோவேறு கழுதைகளின் மேல் ஏறி ஓடினர்.
2 சாமுவேல் 13 : 30 (RCTA)
அவர்கள் இன்னும் வழியில் இருக்கிற போதே, "அப்சலோம் அரச புதல்வர் அனைவரையும் கொன்று போட்டான். அவர்களில் ஒருவராவது தப்பவில்லை" என்ற வதந்தி தாவீதின் காதுக்கு எட்டியது.
2 சாமுவேல் 13 : 31 (RCTA)
அப்போது அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் விழுந்தார். அவருக்கு ஏவல் புரிந்து வந்த அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
2 சாமுவேல் 13 : 32 (RCTA)
ஆனால் தாவீதின் சகோதரனான செம்மாவின் மகன் யோனதாப் வந்து, "அரச புதல்வரான இளைஞர் எல்லாரும் கொல்லப்பட்டார்கள் என்று என் தலைவராகிய அரசர் நினக்க வேண்டாம். அம்னோன் மட்டுமே இறந்தான். ஏனெனில் அவன் அப்சலோமின் சகோதரி தாமாரைக் கற்பழித்த நாள் முதல் அப்சலோம் அவனைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
2 சாமுவேல் 13 : 33 (RCTA)
ஆதலால் அரச புதல்வர் எல்லாரும் இறந்து விட்டனர் என்ற பேச்சை அரசராகிய என் தலைவர் நம்ப வேண்டாம். அம்னோன் ஒருவனே இறந்தான்" என்றான்.
2 சாமுவேல் 13 : 34 (RCTA)
அப்சலோமோ ஓடிப்போய் விட்டான். அந்நேரத்தில் காவற் சேவகன் தன் கண்களை உயர்த்திப் பார்க்கையில், அதோ திரளான மக்கள் மலையின் ஓரமாயுள்ள வேற்று வழியாய் வந்து கொண்டிருந்தார்கள்.
2 சாமுவேல் 13 : 35 (RCTA)
அப்பொழுது யோனதாப் அரசரை நோக்கி, "இதோ அரச புதல்வர் வருகின்றனர். அடியேன் சொன்னபடியே ஆயிற்று" என்றான்.
2 சாமுவேல் 13 : 36 (RCTA)
அவன் பேசி முடியவே, அரச புதல்வர் உள்ளே வந்து ஓலமிட்டு அழுதனர். அரசரும் அவர் ஊழியர்களும் புலம்பி அழுதனர்.
2 சாமுவேல் 13 : 37 (RCTA)
அப்சலோமோ ஓடிப்போய் ஜெஸ்சூர் அரசனான அம்மியூதின் மகன் தொலொமாயிடம் சென்றான். தாவீதோ நாளும் தம் மகனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.
2 சாமுவேல் 13 : 38 (RCTA)
அப்சலோம் ஜெஸ்சூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று ஆண்டுகள் இருந்தான்.
2 சாமுவேல் 13 : 39 (RCTA)
தாவீது அரசர் அம்னோன் இறந்ததை மறந்தார்; அப்சலோமைப் பின்தொடர்வதையும் கைவிட்டார்.
❮
❯