2 சாமுவேல் 12 : 1 (RCTA)
ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். அவர் அரசரிடம் வந்து அவரை நோக்கி, "ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர். ஒருவன் செல்வந்தன்; மற்றவன் ஏழை.
2 சாமுவேல் 12 : 2 (RCTA)
செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன.
2 சாமுவேல் 12 : 3 (RCTA)
ஏழை மனிதனுக்கோ விலைக்கு வாங்கி வளர்த்த ஓர் ஆட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவனோடு அவன் பிள்ளைகளோடும் வீட்டில் வளர்ந்து, அவன் அப்பத்தைத் தின்று அவனது கிண்ணத்தில் குடித்து அவன் மடியில் தூங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே இருந்து வந்தது.
2 சாமுவேல் 12 : 4 (RCTA)
ஆனால் செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்த போது, அவன் தன்னிடம் வந்த அவனுக்கு விருந்து செய்யத் தன் சொந்த ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமின்றி, அந்த ஏழை மனிதனுடைய ஆட்டைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்காகச் சமையல் செய்தான்" என்றார்.
2 சாமுவேல் 12 : 5 (RCTA)
இதைக் கேட்ட தாவீது அம்மனிதன் மேல் மிகவும் சினந்து நாத்தானை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் சாக வேண்டும்.
2 சாமுவேல் 12 : 6 (RCTA)
இரக்கமின்றி அவன் இதைச் செய்த படியால் அந்த ஆட்டுக்குப் பதிலாக நான்கு மடங்கு திருப்பிச் கொடுக்க வேண்டும்" என்றார்.
2 சாமுவேல் 12 : 7 (RCTA)
அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, "நீரே அந்த மனிதன்; இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் சொல்வதைக் கேளும்: 'இஸராயேலுக்கு அரசனாக உன்னை அபிஷுகம் செய்தவரும் நாமே; சவுலின் கைக்கு உன்னைத் தப்புவித்தவரும் நாமே.
2 சாமுவேல் 12 : 8 (RCTA)
உன் தலைவனுடைய வீட்டையும் உனக்குக் கொடுத்தோம். உன் தலைவனின் மனைவியரையும் உன் கையில் அளித்தோம். இஸ்ராயேல் வம்சத்தையும் யூதா வம்சத்தையும் உனக்குத் தந்தோம். இவை எல்லாம் போதாது என்றால் இதை விட அதிகமாகவும் உனக்குத் தந்திருப்போம்.
2 சாமுவேல் 12 : 9 (RCTA)
அப்படியிருக்க, ஆண்டவருடைய வார்த்தையைப் புறக்கணித்து நீ என் முன்னிலையில் பாவம் செய்தது ஏன்? ஏத்தையனான உரியாசை நீ வாளால் தாக்கி, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டு, அம்மோனியரின் வாளால் அவனைக் கொன்று போட்டாய்.
2 சாமுவேல் 12 : 10 (RCTA)
நீ நன்மைப் புறக்கணித்து ஏத்தையனாகிய உரியாசின் மனைவியை உனக்கு மனைவியாகக் கொண்டபடியால், வாளானது என்றும் உன் வீட்டை விட்டு அகலாது'.
2 சாமுவேல் 12 : 11 (RCTA)
ஆகையால் ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'இதோ உன் வீட்டின் தீமை உன்மேல் வரச் செய்வோம்; உன் பார்வையிலேயே நாம் உன் மனைவியரை எடுத்துப் பிறனுக்குக் கையளிப்போம். அவன் இச்சூரிய வெளிச்சத்தில் உன் மனைவிகளோடு படுப்பான்.
2 சாமுவேல் 12 : 12 (RCTA)
நீயோ மறைவில் செய்தாய்; நாமோ இஸ்ராயேலர் எல்லாருக்கும் முன்பாகவும் சூரியனுக்கு முன்பாகவும் அதைச் செய்வோம்" என்று கூறினார்.
2 சாமுவேல் 12 : 13 (RCTA)
அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்" என்றார். நாத்தான் தாவீதை நோக்கி, "ஆண்டவர் உமது பாவத்தை மன்னிப்பார். நீர் சாகப் போகிறதில்லை.
2 சாமுவேல் 12 : 14 (RCTA)
ஆயினும் ஆண்டவருடைய எதிரிகள் அவரைப் பழிக்க நீர் காரணமாயிருந்தீரே; அதன் பொருட்டு உமக்குப் பிறந்திருக்கும் பிள்ளை சாகவே சாவான்" என்று சொல்லி, நாத்தான் தம் வீடு திரும்பினார்.
2 சாமுவேல் 12 : 15 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் உரியாசின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை அடித்து வீழ்த்தினார். அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.
2 சாமுவேல் 12 : 16 (RCTA)
அதைக் கண்ட தாவீது பிள்ளைக்காக ஆண்டவரிடம் மன்றாடி நோன்பு காத்துத் தம் அறைக்குள் சென்று தரையில் விழுந்து கிடந்தார்.
2 சாமுவேல் 12 : 17 (RCTA)
அவரது வீட்டிலுள்ள பெரியோர்கள் வந்து அவரை எழுந்திருக்கச் சொல்லி எவ்வளவோ முயன்றும் அவர் மறுத்து விட்டதுமன்றி, அவர்களோடு சாப்பிடவுமில்லை.
2 சாமுவேல் 12 : 18 (RCTA)
ஆனால் ஏழாம் நாளில் குழந்தை இறந்து போயிற்று. அது இறந்து போயிற்று என்று தாவீதின் ஊழியர்கள் அவரிடம் சொல்லத் துணியவில்லை; ஏனென்றால் அவர்கள், "பிள்ளை உயிரோடு இருக்கையில் நாங்கள் அரசரோடு பேசினபோது அவர் எங்கள் வார்த்தையைக் கேட்கவில்லையே. இப்போது நாங்கள் போய்: 'பிள்ளை இறந்து போயிற்று' என்று எப்படிச் சொல்வோம்? பெரிதும் மனமுடைந்து போவாரே" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
2 சாமுவேல் 12 : 19 (RCTA)
தாவீதோ தம் ஊழியர் தங்களுக்குள்ளே இரகசியமாய்ப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, குழந்தை செத்துப் போயிற்று என்று அறிந்து கொண்டார். எனவே தம் ஊழியரை நோக்கி, "பிள்ளை செத்துப் போயிற்றோ?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'செத்துப் போயிற்று' என்றார்கள்.
2 சாமுவேல் 12 : 20 (RCTA)
எனவே தாவீது தரையினின்று எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தம் ஆடைகளை மாற்றி ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைந்து ஆண்டவரைத் தொழுதார். பிறகு தம் வீட்டிற்கு வந்து அப்பம் கொண்டு வரச் சொல்லி அதைச் சாப்பிட்டார்.
2 சாமுவேல் 12 : 21 (RCTA)
அதைக் கண்டு அவர் ஊழியர் அவரை நோக்கி, "நீர் என்ன செய்தீர்? பிள்ளை உயிரோடு இருக்கையில் நோன்பு காத்து அழுதீர்; பிள்ளை இறந்த பின்போ நீர் எழுந்து சாப்பிடுகிறீரே?" என்றனர்.
2 சாமுவேல் 12 : 22 (RCTA)
அதற்குத் தாவீது, "ஆம்; குழந்தை உயிரோடு இருக்கையில் ஒரு வேளை பிள்ளையை ஆண்டவர் எனக்குக் கொடுக்க அது பிழைக்கலாம் என்று எண்ணி நோன்பு காத்திருந்து அழுதேன்.
2 சாமுவேல் 12 : 23 (RCTA)
இப்பொழுது அது இறந்து விட்டது. இனி நான் நோன்பு காக்க வேண்டியது ஏன்? அதைத் திரும்பி வரச் செய்ய என்னால் கூடுமா? நான் அதனிடம் போவேனேயன்றி, அது என்னிடம் கட்டாயம் வரப்போகிறதில்லை" என்று பதில் கூறினார்.
2 சாமுவேல் 12 : 24 (RCTA)
தாவீது தம் மனைவியாகிய பெத்சாபேக்கு ஆறுதல் சொல்லி அவளோடு படுத்தார். அவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்குச் சாலமோன் என்று பெயரிட்டாள். ஆண்டவர் அப்பிள்ளையிடம் அன்பாயிருந்தார்.
2 சாமுவேல் 12 : 25 (RCTA)
இறைவாக்கினரான நாத்தானை ஆண்டவர் அனுப்பினார். அவர் வந்து, ஆண்டவருடைய அன்பின் பொருட்டு 'ஆண்டவரின் அன்பன்' என்று பிள்ளைக்குப் பெயரிட்டார்.
2 சாமுவேல் 12 : 26 (RCTA)
அதற்குள் யோவாப் அம்மோனியருடைய இராப்பாத் நகரை எதிர்த்துப் போராடி அதன் தலைநகரைப் பிடிக்கப்போகிற வேளையிலே,
2 சாமுவேல் 12 : 27 (RCTA)
தாவீதிடம் தூதரை அனுப்பி, "நான் இராப்பாத்தின் மேல் போர் தொடுத்துள்ளேன். தண்ணீர் சூழ்ந்த அந்நகர் விரைவில் பிடிபடவிருக்கிறது.
2 சாமுவேல் 12 : 28 (RCTA)
ஆகையால் எஞ்சிய மக்களைத் திரட்டி, நகரை முற்றுகையிட்டுப் பிடியும். நகரை நானே பாழாக்கி விட்டால் வெற்றி உம்மைச் சேராமல் என்னை அன்றோ சாரும்?" என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 12 : 29 (RCTA)
எனவே, மக்களை எல்லாம் தாவீது ஒன்று திரட்டி இராப்பாத் நகருக்கு வந்து போரிட்டு அதைப் பிடித்தார்.
2 சாமுவேல் 12 : 30 (RCTA)
மேலும் அவர்களுடைய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்து வந்து தம் தலையில் சூடி கொண்டார். அது ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னாலும் மிகவிலையுயர்ந்த இரத்தினங்களாலும் ஆனது. அத்தோடு நகரிலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் தாவீது கொண்டு சொன்றார்.
2 சாமுவேல் 12 : 31 (RCTA)
பிறகு தாவீது நகர மக்களை வெளியே கொண்டு வரச் சொல்லி, அவர்களை வாளால் குத்தவும், இருப்பாயுதங்களைக் கொண்ட வண்டிச் சக்கரங்களால் நசுக்கவும், கோடரியால் வெட்டவும், செங்கற் சூளையில் சுட்டெரிக்கவும் செய்தார். இவ்வாறு அம்மோனியரின் நகரங்களுக்கெல்லாம் செய்த பின், தாவீது தம் சேனைகள் அனைத்தோடும் யெருசலேமுக்குத் திரும்பினார்.
❮
❯