2 பேதுரு 3 : 1 (RCTA)
அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இது இரண்டாம் முறை. உங்கள் உள்ளத்தில் புனித கருத்துகள் எழச்செய்யும்படி, இவ்விரு கடிதங்ளிலும் இவையெல்லாம் நினைவுறுத்துகிறேன்.
2 பேதுரு 3 : 2 (RCTA)
பரிசுத்த இறைவாக்கினர் முன்னறிவித்த சொற்களையும், ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் அப்போஸ்தலர் வழியாகத் தந்த கட்டளையையும், நீங்கள் நினைவிற்கொள்ளுங்கள்.
2 பேதுரு 3 : 3 (RCTA)
முதன்முதல் நீங்கள் மனத்தில் வைக்க வேண்டியது: இறுதி நாட்களில், ஏளனம் செய்பவர்கள் தோன்றுவார்கள்.
2 பேதுரு 3 : 4 (RCTA)
தங்கள் இச்சைகளின்படி நடக்கும் இவர்கள், "அவர் வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையர் இறந்துபோயினார்; ஆயினும் படைப்பின் தொடக்கத்திலிருந்தது போல எல்லாம் அப்படியே இருக்கின்றதே!" என ஏளனமாய்ப் பேசுவர்.
2 பேதுரு 3 : 5 (RCTA)
ஆனால் ஒன்றை இவர்கள் வேண்டுமென்றே மறந்து போகிறார்கள். அதாவது: கடவுளுடைய வார்த்தையால்தான் தொடக்கத்திலிருந்தே வானமும் நிலமும் உள்ளன; நிலம் நீரினின்றும் நீராலும் தோன்றி நிலைபெற்றுள்ளது.
2 பேதுரு 3 : 6 (RCTA)
அந்த நீராலே அன்றைய உலகம் வெள்ளப்பெருக்கில் அழிவுற்றது.
2 பேதுரு 3 : 7 (RCTA)
இதை அவர்கள் மறந்துபோகின்றனர். ஆனால் இப்போதுள்ள விண்ணும் மண்ணும் நெருப்பினால் அழிக்கப்பட அதே வார்த்தையால்தான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன; இறைப்பற்றில்லாதவர்கள் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாளுக்கென்று அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.
2 பேதுரு 3 : 8 (RCTA)
அன்பிற்குரியவர்களே, இன்னொன்றையும் மறக்கவேண்டாம்: ஆண்டவருக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள்போல்! ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள்போல்!
2 பேதுரு 3 : 9 (RCTA)
ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.
2 பேதுரு 3 : 10 (RCTA)
ஆனால் ஆண்டவரது நாள் வந்தே தீரும்: அது திருடனைப்போல் வரும்; வானம் பேரிடி முழகத்துடன் மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் நெருப்பால் வெத்துருகிப்போகும்; மண்ணுலகும், அதில் வாழ்த்தோரின் செயல்களும் வெளியாக்கப்படும்.
2 பேதுரு 3 : 11 (RCTA)
இவை அனைத்தும் இவ்வாறு மறைந்தொழிந்து போகுமாதலின் கடவுளுடைய நாளுக்காகக் காத்திருந்து, அது விரைவில் வர உழைக்கும் நீங்கள், பரிசுத்த நடத்தையிலும் இறைப்பற்றிலும் எவ்வளவோ சிறந்து விளங்கவேண்டும்.
2 பேதுரு 3 : 12 (RCTA)
அந்நாள் வரும்போது வானங்கள் நெருப்புக்கிரையாகி மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் வெந்துருகிப்போகும்.
2 பேதுரு 3 : 13 (RCTA)
நாமோ, நீதி குடிகொள்ளும் புதிய வானமும் புதிய வையமும் அவர் வாக்களித்தபடியே வருமென்று காத்திருக்கிறோம்.
2 பேதுரு 3 : 14 (RCTA)
ஆகவே, அன்புக்குரியவர்களே, இவற்றிற்காகக் காத்திருக்கும் உங்களை அவர் மாசு மறுவற்றவர்களாய், அமைதியான நிலையில் காணும்படி உழைத்து வாருங்கள்.
2 பேதுரு 3 : 15 (RCTA)
நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு என எண்ணுங்கள். நமது அன்புக்குரிய சகோதரர் சின்னப்பரும் தமக்கு அளிக்கப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறே உங்களுக்கு எழுதியிருக்கிறார்.
2 பேதுரு 3 : 16 (RCTA)
தம் கடிதங்களில் இதைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அதையே அவர் சொல்லுகிறார். புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில அவருடைய கடிதங்களில் உள்ளன. அறியாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல, இவற்றிற்கும் கூறுகின்றனர். இதனால் தங்கள் மீதே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.
2 பேதுரு 3 : 17 (RCTA)
அன்புக்குரியவர்களே, நீங்களோ இவையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். தீயவர்களின் தவறான கொள்கைகளால் இழுபட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
2 பேதுரு 3 : 18 (RCTA)
நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும், அவரை அறியச்செய்யும் அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இன்றும் என்றும் மகிமை உண்டாகுக, ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18