2 பேதுரு 2 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்களிடையே போலித் தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள். அதுபோலவே உங்களிடையேயும் பொய்ப் போதகர்கள் தோன்றுவார்கள். அழிவை விளைவிக்கும் தவறான கொள்கைகளைப் புகுத்தி, தங்களை மீட்ட ஆண்டவரையும் மறுத்து, அழிவைத் தம்மீதே விரைவாக வருவித்துக்கொள்வார்கள்.
2 பேதுரு 2 : 2 (RCTA)
அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவர். அவர்களால் உண்மை நெறி பலருடைய பழிப்புக்குள்ளாகும்.
2 பேதுரு 2 : 3 (RCTA)
பேராசையால் ஏவப்பட்டு, பசப்பு மொழி பேசி, உங்களிடம் பணம் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்து அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிட்டவர் இன்று அயரவில்லை; அவர்களை அழிவுக்குள்ளாக்குபவர் உறங்கவில்லை.
2 பேதுரு 2 : 4 (RCTA)
பாவம் புரிந்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; இருள் நரகின் படுகுழிகளில் தள்ளி, அவர்களை அங்கே தீர்ப்புக்காக அடைத்து வைத்திருக்கிறார்.
2 பேதுரு 2 : 5 (RCTA)
பண்டைய உலகையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை. நீதியைப் போதித்த நோவாவை வேறு ஏழு பேருடன் காப்பாற்றி, இறைப்பற்றில்லாத மக்கள் நிறைந்த உலகின் மீது வெள்ளப் பெருக்கை வருவித்தார்.
2 பேதுரு 2 : 6 (RCTA)
சோதோம் கொமோரா நகரங்களையும் தண்டித்தார். இறைப்பற்றில்லாதவர் கதி என்ன வாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்நகரங்களைச் சாம்பலாக்கிவிட்டார்.
2 பேதுரு 2 : 7 (RCTA)
காமவெறியில் உழன்ற தீயவர்களின் நடத்தையைக் கண்டு மனவேதனை கொண்ட நீதிமானாகிய லோத்தை விடுவித்தார்.
2 பேதுரு 2 : 8 (RCTA)
இந்நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது அவர் கண்ட நிகழ்ச்சிகளும் கேட்ட பேச்சுகளும் தீயனவாகவே இருந்தன. இந்தத் தீய நடத்தை அவருடைய நேர்மையான மனத்தை நாள்தோளும் வாட்டி வதைத்தது.
2 பேதுரு 2 : 9 (RCTA)
இறைப் பற்றுள்ளவர்களைத் துன்பச் சோதனையிலிருந்து விடுவிக்கவும், அநீதர்களைத் தண்டனைக்குட்பட்டவர்களாய்த் தீர்ப்பு நாளுக்கென்று வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.
2 பேதுரு 2 : 10 (RCTA)
குறிப்பாக, அசுத்த இச்சைகள் கொண்ட ஊனியல்பின்படி நடப்பவர்களையும் ஆண்டவரது மாட்சியைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், அகந்தையுள்ளவர்கள்; வானவர்களைப் பழிக்க இவர்கள் அஞ்சுவதில்லை.
2 பேதுரு 2 : 11 (RCTA)
வானதூதர்களோ மிக்க ஆற்றலும் வலிமையும் பெற்றிருப்பினும், ஆண்டவர் முன் அவர்களைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.
2 பேதுரு 2 : 12 (RCTA)
பிடிபடவும் சாகடிக்கப்படவுமே பிறந்த பகுத்தறிவற்ற விலங்குகளைப்போல் வெறும் இயல்புணர்ச்சிகளின்படி இவர்கள் வாழ்கிறார்கள்; தாங்கள் அறியாததையும் பழிக்கிறார்கள்; அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவுறுவர்.
2 பேதுரு 2 : 13 (RCTA)
தாங்கள் இழைத்த தீமைக்குக் கைம்மாறாகத் தீமையே பெறுவர். பட்டப்பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதையே இவர்கள் இன்பம் எனக் கருதுகின்றனர். சிற்றின்பத்தில் மூழ்கிக்கிடக்கும் இவர்கள், உங்கள் அன்பு விருந்தில் கலந்து கொள்வது உங்களையே மாசுபடுத்தும் மானக்கேடுதான்.
2 பேதுரு 2 : 14 (RCTA)
இவர்கள் கண்கள் ஒழுக்கம் கெட்ட பெண்களையே நாடுகின்றன; பாவத்தைவிட்டு ஓய்வதேயில்லை; இவர்கள் மனவுறுதியற்றவர்களைச் சூழ்ச்சியால் வசப்படுத்துகின்றனர்; பொருளாசையைப் பொறுத்த மட்டில் கைதேர்ந்தவர்கள்; இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.
2 பேதுரு 2 : 15 (RCTA)
நேர்மையான வழியினின்று விலகித் தவறிப்போய், பொசொரின் மகனான பாலாம் சென்ற வழியை இவர்கள் பின்பற்றினர். இந்தப் பாலாம் தீமை செய்து ஆதாயம் பெற ஆசைப்பட்டான்.
2 பேதுரு 2 : 16 (RCTA)
ஆனால் தான் செய்த குற்றத்திற்காகக் கண்டிக்கப்பட்டான். பேச்சில்லாத கழுதை மனிதப் பேச்சுப் பேசி அந்தத் தீர்க்கதரிசியின் மதியீனத்தைத் தடுத்தது.
2 பேதுரு 2 : 17 (RCTA)
இவர்கள் நீரற்ற சுனைகள்; சுழற் காற்றால் அடித்துச் செல்லப்படும் மூடுபனி போன்றவர்கள். இருளுலகம் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பேதுரு 2 : 18 (RCTA)
தவறான வழி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் பகட்டான வீண் பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும் காமவெறியாலும் சூழ்ச்சியாய் வசப்படுத்துகின்றனர்.
2 பேதுரு 2 : 19 (RCTA)
விடுதலை அளிப்பதாக இவர்கள் வாக்களிக்கின்றனர்; ஆனால் தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஒருவன் எதனால் வெல்லப்படுகிறானோ அதற்கே அவன் அடிமையாகிறான்.
2 பேதுரு 2 : 20 (RCTA)
ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவினால் உலகத் தீட்டிலிருந்து தப்பிய பின் இவர்கள் மீண்டும் அதிலே சிக்கி, அதனால் வெல்லப்பட்டால், இவர்களது பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமானதாகும்.
2 பேதுரு 2 : 21 (RCTA)
நீதி நெறியை அறிந்தபின், தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையை விட்டு விலகுவதைவிட, அதை அறியாதிருப்பதே இவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும்.
2 பேதுரு 2 : 22 (RCTA)
"தான் கக்கினதைத் தின்ன நாய் திரும்பி வரும்" என்னும் பழமொழி இவர்களிடம் உண்மையாயிற்று. மேலும் "கழுவியபின், பன்றி மீண்டும் சேற்றிலே புரளும்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22