2 பேதுரு 1 : 1 (RCTA)
நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் நீதிக்கேற்ப, நாங்கள் பெற்ற விசுவாசத்தைப் போலவே மதிப்புள்ள விசுவாசத்தைப் பெற்றுள்ளவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனும் அப்போஸ்தலனுமான சீமோன் இராயப்பன் எழுதுவது:
2 பேதுரு 1 : 2 (RCTA)
கடவுளையும் நம் ஆண்டவராகிய இயேசுவையும் அறியச் செய்யும் அறிவினால், உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!
2 பேதுரு 1 : 3 (RCTA)
தமக்கேயுரிய மாட்சிமையாலும், ஆற்றலாலும் நம்மை அழைத்த இறைவனை அறியச் செய்யும் அறிவின் வாயிலாக, இறைப்பற்றுடன் கூடிய வாழ்வை வளர்க்கும் அனைத்தையும் அவரது தெய்வீக வல்லமை நமக்கு வழங்கியுள்ளது.
2 பேதுரு 1 : 4 (RCTA)
இறைவன் வாக்களித்த கொடைகள் அந்த மாட்சிமையாலும் ஆற்றலாலும் நமக்கு வழங்கப்பட்டன. மதிப்பும் மாண்பும் மிக்க இக்கொடைகளால் நீங்கள், இச்சையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அழிவுக்குத் தப்பி, இறை இயல்பில் பங்குபெறக்கூடும்.
2 பேதுரு 1 : 5 (RCTA)
இதை மனத்தில் வைத்து, முழு ஊக்கங்காட்டி, உங்களிடம் விசுவாசத்தோடு நற்பண்பும்,
2 பேதுரு 1 : 6 (RCTA)
நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மனவுறுதியும்,
2 பேதுரு 1 : 7 (RCTA)
மனவுறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேசமும், சகோதர நேசத்தோடு அன்பும் இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
2 பேதுரு 1 : 8 (RCTA)
இப்பண்புகள் உங்களிடம் நிறைந்து செழிக்குமானால், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவைப் பொறுத்தமட்டில், இவை உங்களைச் சோம்பேறிகளாயும் பயணற்றவர்களாயும் இருக்கவிடா.
2 பேதுரு 1 : 9 (RCTA)
இவை யாரிடம் இல்லையோ அவன் குருடன், மங்கிய பார்வையுடையவன்: முன் செய்த பாவங்களினின்று தூயவனாக்கப்பட்டதை அவன் மறந்து விட்டான்.
2 பேதுரு 1 : 10 (RCTA)
சகோதரர்களே, நீங்களோ அழைக்கப்பட்டீர்கள், தேர்ந்து கொள்ளப்பட்டீர்கள்; அவ்வரத்தில் உறுதியாய் நிற்க ஊக்கங்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு பொழுதும் தடுமாறமாட்டீர்கள்.
2 பேதுரு 1 : 11 (RCTA)
இங்ஙனம் நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்வின் முடிவில்லாத அரசில் நுழையும் பேறும் உங்களுக்குத் தாராளமாக அருளப்படும்.
2 பேதுரு 1 : 12 (RCTA)
இக்கருத்துக்களையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏற்றுக்கொண்ட உண்மையில் நிலைபெற்று இருக்கிறீர்கள்; எனினும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்ட விழைகிறேன்.
2 பேதுரு 1 : 13 (RCTA)
என் உடலாகிய இக்கூடாரத்தில் தங்கி இருக்கும் வரையில், இப்படி நினைவுறுத்தி, உங்களுக்கு விழிப்பூட்டுவது என் கடமை எனக் கருதுகிறேன்.
2 பேதுரு 1 : 14 (RCTA)
இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் அடுத்துள்ளது என அறிவேன்; நம் அண்டவராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குத் தெரிவித்துள்ளார்.
2 பேதுரு 1 : 15 (RCTA)
இக்கூடாரத்தைவிட்டு நான் வெளியேறிய பின்னும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வாய்ப்பு உண்டாகும்படி, என்னால் இயன்றதெல்லாம் இப்போது செய்யப்போகிறேன்.
2 பேதுரு 1 : 16 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் நாங்கள் உங்களுக்கு எடுத்துரைத்தபோது, சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளைப் பின்பற்றிப் பேசவில்லை; அவரது மாண்பை நாங்களே கண்ணால் கண்டோம்.
2 பேதுரு 1 : 17 (RCTA)
"இவரே என் அன்பார்ந்த மகன்; இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று அவரை நோக்கி உன்னத மாட்சிமையினின்று குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சிமையும் அவர் பெற்றபோது,
2 பேதுரு 1 : 18 (RCTA)
நாங்கள் அவரோடு பரிசுத்த மலையில் இருந்தோம்; விண்ணினின்று எழுந்த இக் குரலொலியை நாங்களே கேட்டோம்.
2 பேதுரு 1 : 19 (RCTA)
ஆகவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. இந்த இறைவாக்கை நீங்கள் இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கென மதித்து கவனித்தல் நலம். பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை, அவ்விளக்கு ஒளிர்கிறது.
2 பேதுரு 1 : 20 (RCTA)
ஆனால் மறைநூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதல் மனத்தில் வைக்க வேண்டும்.
2 பேதுரு 1 : 21 (RCTA)
ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு கடவுளின் ஏவுதலால் பேசினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21