2 இராஜாக்கள் 9 : 1 (RCTA)
அப்போது இறைவாக்கினர் எலிசேயு, இறைவாக்கினரின் பிள்ளைகளில் ஒருவனை அழைத்து, "உன் இடையை வரிந்துகட்டி, கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு காலாதிலுள்ள இராமோத் நகருக்குப் போ.
2 இராஜாக்கள் 9 : 2 (RCTA)
அங்குச் சென்றதும் நம்சி மகன் யோசபாத்தின் புதல்வன் ஏகுவைக் காண்பாய். அவனை அணுகி, அவனுடைய சகோதரரின் நடுவினின்று அவனைத் தனியே அழைத்து அவனோடு ஓர் அறைக்குள் செல்.
2 இராஜாக்கள் 9 : 3 (RCTA)
அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து, அவனை நோக்கி, 'ஆண்டவர் சொல்கிறதாவது: உன்னை நாம் இஸ்ராயேலின் அரசனாக அபிஷுகம் செய்தோம்' என்று சொல்லி, அவன் தலை மேல் எண்ணெயை ஊற்றுவாய். ஊற்றினவுடனே கதவைத் திறந்து அங்கே நில்லாது ஓடிவிடி" என்றார்.
2 இராஜாக்கள் 9 : 4 (RCTA)
ஆதலின் இறைவாக்கினரின் சீடனான அவ்இளைஞன் காலாதிலுள்ள இராமோத் நகருக்கு உடனே புறப்பட்டான்.
2 இராஜாக்கள் 9 : 5 (RCTA)
அங்கே படைத்தலைவர்கள் அமர்ந்திருக்கக் கண்டு, "இளவரசே, உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்" என்றான். அதற்கு ஏகு, "யாரிடம் பேசவேண்டும்?" எனக் கேட்டான். அதற்கு அவன், "இளவரசே, உம்மிடந்தான்" என விடை பகன்றான்.
2 இராஜாக்கள் 9 : 6 (RCTA)
ஏகு எழுந்து ஓர் அறைக்குள் நுழைந்தான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெயை ஊற்றி, "இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் சொல்வதாவது: 'ஆண்டவரின் மக்களாகிய இஸ்ராயேலுக்கு உன்னை அரசனாக அபிஷுகம் செய்தோம்.
2 இராஜாக்கள் 9 : 7 (RCTA)
உன் அரசன் ஆக்காபின் வீட்டாரை அழித்துப் போடுவாயாக. இங்ஙனம் எசாபேல் என்பவளின் கையால் சிந்தப்பட்ட இறைவாக்கினரின் இரத்தத்திற்கும், ஆண்டவரின் எல்லா ஊழியர்களது இரத்தத்திற்கும் நாம் பழி வாங்குவோம்.
2 இராஜாக்கள் 9 : 8 (RCTA)
ஆக்காபு குலத்தவரை அழிப்போம். ஆக்காபின் வீட்டிலுள்ள சிறு பிள்ளைகள் முதல் இன்னும் பிறவாத சிசுக்களையும் இப்பொழுது பிறந்த குழந்தைகளையும் அழித்துப் போடுவோம்.
2 இராஜாக்கள் 9 : 9 (RCTA)
இந்த ஆக்காபு குடும்பத்தை நாபாத் மகன் எரோபோவாமின் வீட்டைப் போலும், ஆகியா மகன் பாவாசா வீட்டைப் போலும் ஒழித்துக் கட்டுவோம்.
2 இராஜாக்கள் 9 : 10 (RCTA)
எசாபேலை ஜெஸ்ராயேல் வயல் வெளியில் நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க ஒருவரும் இருக்க மாட்டார்' " என்று கூறிக் கதவைத் திறந்து ஓட்டம் பிடித்தான்.
2 இராஜாக்கள் 9 : 11 (RCTA)
பின்பு ஏகு தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனைப் பார்த்து, "நல்ல செய்தி தானா? அந்தக் கிறுக்கன் உம்மிடம் என்ன சொல்ல வந்தான்?" என்றனர். அதற்கு அவன், "அவன் யார் என்றும் அவன் சொன்னது என்ன என்றும் உங்களுக்குத் தெரியுமே" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 12 (RCTA)
அவர்கள் அதற்கு, "உண்மையில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீரே சொல்லும்" என்றனர். அப்போது ஏகு அவர்களை நோக்கி, "அவன் பல காரியங்களைப்பற்றி எனக்குச் சொன்ன பின்பு, 'ஆண்டவர் சொல்வதாவது: இஸ்ராயேலின் மீது உன்னை அரசனாக அபிஷுகம் செய்தோம்' எனச் சொன்னான்" என்று கூறினான்.
2 இராஜாக்கள் 9 : 13 (RCTA)
இதைக் கேட்டவுடன், அவர்கள் அனைவரும் விரைந்து தத்தம் போர்வையை எடுத்து, நீதியிருக்கைப் போன்று அவற்றை ஏகுவின் பாதத்தின் கீழ் பரப்பி வைத்தனர். எக்காளம் ஊதி, "ஏகுவே நம் அரசர்" என்று ஆர்ப்பரித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 14 (RCTA)
நம்சிக்குப் பிறந்த யோசபாத்தினுடைய மகன் ஏகு, யோராமுக்கு எதிராகச் சதி செய்தான். யோராம் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராக இஸ்ராயேலின் எல்லாச் சேனைகளோடும் காலாதிலுள்ள இராமோத் நகரை முற்றுகையிட்டிருந்தான்.
2 இராஜாக்கள் 9 : 15 (RCTA)
இப்படிச் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராகப் போர் செய்கையில், யோராம் சீரியர் கையில் காயம் அடைந்து, சிகிச்சை பெற ஜெஸ்ராயேலுக்கு வந்திருந்தான். ஏகு தன் வீரர்களைப் பார்த்து, "நகரிலிருந்து யாராவது வெளியே போனால், ஜெஸ்ராயேலுக்குப் போய் செய்தி சொல்லுவர். எனவே, எவரும் நகரினின்று தப்பி ஓடாதவாறு கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டான்.
2 இராஜாக்கள் 9 : 16 (RCTA)
அவனோ ஜெஸ்ராயேலுக்குப் புறப்பட்டுச் சென்றான். ஏனெனில் யோராம் அங்கு நோயுற்றிருந்தான்; யூதா அரசன் ஒக்கோசியாசும் அவனைப் பார்த்து விட்டுப் போகும்படி அங்குச் சென்றிருந்தான்.
2 இராஜாக்கள் 9 : 17 (RCTA)
ஜெஸ்ராயேல் கோபுரத்தின் மேல் நின்று கொண்டிருந்த காவலன், தன் மனிதரோடு ஏகு வருவதைக் கண்டு, "அதோ ஒரு பெரிய கூட்டம் வருகிறது" என்றான். அதற்கு யோராம், "வருகிறவர்களுக்கு எதிராக ஒருவனைத் தேரில் அனுப்பி, அவர்களைப் பார்த்து, 'நீங்கள் சமாதான நோக்கோடு வருகிறீர்களா?' என்று கேட்கச் சொல்" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 18 (RCTA)
அவ்விதமே ஒருவன் தேரில் ஏறி ஏகுக்கு எதிர்கொண்டு போய்" "சமாதான நோக்கோடு வருகிறீர்களா?' என்று அரசர் கேட்கச் சொன்னார் " என்றான். அதற்கு ஏகு, "சமாதானத்திற்கும் உனக்கும் என்ன உறவு? நீ முன்னே நில்லாது என்பின்னே வரக்கடவாய்" என்றான். அந்நேரத்தில் காவலன், "தூதன் அவர்களிடம் சென்றான்; ஆனால் இன்னும் திரும்பவில்லை" என்று அறிவித்தான்.
2 இராஜாக்கள் 9 : 19 (RCTA)
யோராம் குதிரைகள் பூட்டிய வேறொரு தேரில் மற்றொருவனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, "சமாதானந்தானா?' என அரசர் கேட்கிறார்" என்றான். அதற்கு ஏகு, "சமாதானத்துக்கும் உனக்கும் என்ன உறவு? நீ முன்னே நில்லாது, என் பின்னே வரக்கடவாய்" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 20 (RCTA)
காவலன், "இரண்டாவது தேர்வீரன் அவர்களிடம் போனான். ஆனால் திரும்பவேயில்லை. வருகிறவனோ நம்சி மகன் ஏகுவாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவனைப் போல வெகு துரிதமாய் வருகின்றான்" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 21 (RCTA)
யோராம், "தேரில் குதிரைகளைப் பூட்டுங்கள்" என்று கட்டளையிட்டான். குதிரைகள் பூட்டப்படவே, இஸ்ராயேல் அரசன் யோராமும், யூதா அரசன் ஒக்கோசியாசும் தத்தம் தேரில் புறப்பட்டு ஏகுக்கு எதிரே போய், ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் அவனைச் சந்தித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 22 (RCTA)
யோராம் ஏகுவைக் கண்டு, "ஏகு, சமாதான நோக்குடன்தான் வருகிறீரா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "உன் தாய் எசாபேலின் வேசித்தனமும் மாயவித்தையும் இவ்வளவு பெருகியிருக்கச் சாமாதானம் இருக்கவும் கூடுமோ?" என்று மறுமொழி கூறினான்.
2 இராஜாக்கள் 9 : 23 (RCTA)
யோராம் உடனே கடிவாளத்தைத் திருப்பி ஒக்கோசியாசைப் பார்த்து, "ஒக்கோசியாசு, இதுவும் ஒரு சதியே" என்று சொல்லி ஓட்டம் பிடித்தான்.
2 இராஜாக்கள் 9 : 24 (RCTA)
அந்நேரத்தில் ஏகு கையால் வில்லை வளைத்து யோராமின் தோள்கள் நடுவே எய்தான். அம்பு இதயத்தை ஊடுருவ, யோராம் தேரிலிருந்து கீழே விழுந்து மடிந்தான்.
2 இராஜாக்கள் 9 : 25 (RCTA)
ஏகு படைத்தலைவன் பதாசரை நோக்கி, "அவனைத் தூக்கி ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் தேரில் இவனுடைய தந்தை ஆக்காபைத் தொடர்ந்த போது, அவனுக்கு இக்கதி நேரிடும் என ஆண்டவர் கூறியது என் நினைவிற்கு வருகிறது.
2 இராஜாக்கள் 9 : 26 (RCTA)
அதாவது: ' நேற்று நம் திருமுன் நீ சிந்தின நாபோத்தின் இரத்தத்திற்கும், அவனுடைய பிள்ளைகளின் இரத்தத்திற்கும், அதே வயலில் நாம் உன்னைப் பழி வாங்காது விடோம் ' என்று ஆண்டவர் கூறியிருந்தார். ஆதலால் இப்போது ஆண்டவரின் வாக்குப்படி, நீ அவனைத் தூக்கி அந்த வயலில் எறிந்துவிடு" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 27 (RCTA)
யூதா அரசன் ஒக்கோசியாசு இதைக்கண்டு நந்தவனம் வழியாக ஓட்டம் பிடித்தான். அதை அறிந்த ஏகு அவனைப் பின்தொடர்ந்து தன் படைவீரர்களைப் பார்த்து, "இவனையும் இவனது தேரிலேயே கொன்று விடுங்கள்" என்றான். அவர்களும் எபிளாவாம் அருகே இருந்த கவேருக்குப் போகும் வழியில் அவனை வெட்டினார்கள். அவனோ மகேதோ வரை ஓடி அங்கு இறந்தான்.
2 இராஜாக்கள் 9 : 28 (RCTA)
அப்போது அவனுடைய ஊழியர்கள் அவனைத் தூக்கி அவனது தேரில் வைத்து யெருசலேமுக்குக் கொண்டு போய், தாவீது நகரில் அவனை அவனுடைய முன்னோரோடு அடக்கம் செய்தார்கள்.
2 இராஜாக்கள் 9 : 29 (RCTA)
ஆக்காபின் மகன் யோராம் அரியணை ஏறின பதினோராம் ஆண்டில் ஒக்கோசியாசு யூதாவின் அரசன் ஆனான்.
2 இராஜாக்கள் 9 : 30 (RCTA)
பின் ஏகு ஜெஸ்ராயேலுக்கு வந்து சேர்ந்தான். அப்போது அவன் வந்த செய்தியை அறிந்த எசாபேல் தன் கண்களுக்கு மையிட்டு, தலையை அலங்கரித்துச் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
2 இராஜாக்கள் 9 : 31 (RCTA)
ஏகு நகரவாயில் வழியாக வருவதைக்கண்டு, "தன் தலைவனைக் கொன்ற சம்பிரிக்கு அமைதி கிட்டுமா?" என்றாள்.
2 இராஜாக்கள் 9 : 32 (RCTA)
ஏகு தலை நிமிர்ந்து சன்னலைப் பார்த்து, "யார் அது?" என்றான். உடனே இரண்டு மூன்று அண்ணகர் தலை குனிந்து அவனை வணங்கினர்.
2 இராஜாக்கள் 9 : 33 (RCTA)
ஏகு அவர்களை நோக்கி, "அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்" என்றான். அவர்கள் அவளைக் கீழே தள்ள, அவளது இரத்தம் சுவரை நனைத்தது. அன்றியும் அவள் குதிரைகளின் கால்களினால் மிதிக்கப்பட்டாள்.
2 இராஜாக்கள் 9 : 34 (RCTA)
ஏகு உண்டு குடிக்க உள்ளே வந்து, "நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்து அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசனின் மகள்" என்றான்.
2 இராஜாக்கள் 9 : 35 (RCTA)
அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்ற போது, அவளுடைய தலையும் கால்களும், கைகளில் பாதியுமட்டும் அங்குக் கிடக்கக் கண்டனர்.
2 இராஜாக்கள் 9 : 36 (RCTA)
எனவே திரும்பி வந்து ஏகுக்கு அதை அறிவித்தனர். அதைக் கேட்டு அவன், "ஆண்டவர் தம் ஊழியனும் தெசுபித்தனுமான எலியாசின் மூலமாய் ' எசாபேலுடைய ஊனை நாய்கள் ஜெஸ்ராயேல் வயலிலே தின்னும்.
2 இராஜாக்கள் 9 : 37 (RCTA)
அவளுடைய பிணம் ஜெஸ்ராயேல் நிலங்களின் மீது எருபோன்று கிடக்கும். அதைக் கண்ணுறும் யாவரும், "அந்த எசாபேல் இவள் தானா?" என்பார்கள் ' என்று முன்பே சொல்லியிருந்தார் அன்றோ?" என்றான்.
❮
❯