2 இராஜாக்கள் 7 : 1 (RCTA)
அப்போது எலிசேயு, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவர் சொல்வதாவது: நாளை இதே நேரத்தில் சமாரியா நகர் வாயிலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சீக்கலுக்கு விற்கப்படும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சீக்கலுக்கு விற்கப்படும்" என்று கூறினார்.
2 இராஜாக்கள் 7 : 2 (RCTA)
அரசனுக்குப் பக்கபலமாய் இருந்து வந்த படைத்தலைவர்களில் ஒருவன் கடவுளின் மனிதரை நோக்கி, "ஆண்டவர் வானினின்று தானியத்தைத் திரளாகப் பொழிந்தாலும் நீர் கூறுவது நடக்குமா?" எனக் கேட்டான். அதற்கு எலிசேயு "நீர் அதை உமது கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது நீர் உண்ண மாட்டீர்" என்றார்.
2 இராஜாக்கள் 7 : 3 (RCTA)
நிற்க, நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளர்கள் இருந்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, "சாவை எதிர்பார்த்துக் கொண்டு நாம் இங்கு இருப்பது ஏன்?
2 இராஜாக்கள் 7 : 4 (RCTA)
நாம் நகருக்குள் சென்றால் பஞ்சத்தால் மடிவோம். இங்கேயே இருந்தாலும் நாம் சாகவேண்டியது தான். ஆதலால் சீரியர் பாசறைக்குள் தஞ்சம் அடைவோம், வாருங்கள்; அவர்கள் நமக்கு இரக்கம் காட்டினால் நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொல்லக் கருதினாலோ எங்கும் சாவுதான், செத்துப்போவோம்" என்று பேசிக் கொண்டனர்.
2 இராஜாக்கள் 7 : 5 (RCTA)
மாலை வேளையில் அவர்கள் சீரியரின் பாசறைக்கு வந்தனர். பாசறையின் முன் பகுதிக்கு அவர்கள் வந்த போது, அங்கே ஒருவரும் இல்லை.
2 இராஜாக்கள் 7 : 6 (RCTA)
ஏனெனில், ஆண்டவர் சீரியர் பாசறையில் குதிரைகளும் தேர்களும் பெரும் படையும் திரண்டு வருவது போன்ற பெரும் சத்தம் கேட்கும்படி செய்திருந்தார். சீரியர் இதைக் கேட்டு ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ராயேல் அரசன் தனக்குத் துணையாக ஏத்தையர் அரசனையும், எகிப்தியர் அரசனையும் அழைத்துக் கொண்டு நம்மீது படையெடுத்து வருகிறான்" எனச் சொல்லிக் கொண்டு,
2 இராஜாக்கள் 7 : 7 (RCTA)
பதறி எழுந்து கூடாரங்களையும் குதிரைகளையும் கழுதைகளையும் பாசறையிலேயே விட்டு விட்டு, உயிர் தப்பினால் போதும் என்று எண்ணி, இரவோடு இரவாய் ஓட்டம் பிடித்திருந்தனர்.
2 இராஜாக்கள் 7 : 8 (RCTA)
ஆகவே, மேற்சொன்ன தொழுநோயாளர்கள் பாசறையின் முன் பகுதியில் இருந்த ஒரு கூடாரத்தில் நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும், அங்கிருந்த பொன், வெள்ளி, ஆடை முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்த பின், மறுபடியும் வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து, அங்கே தென்பட்டவற்றையும் கொள்ளையிட்டு அவ்வாறே ஒளித்து வைத்தனர்.
2 இராஜாக்கள் 7 : 9 (RCTA)
பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி, "நாம் செய்வது சரியன்று; ஏனெனில், இன்று நமக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால் நாம் குற்றவாளிகளாக மதிக்கப்படுவோம். வாருங்கள், நாம் போய் அரச அவையில் இதை அறிவிப்போம்" என்று சொன்னார்கள்.
2 இராஜாக்கள் 7 : 10 (RCTA)
அவர்கள் நகர வாயிலை அடைந்ததும், "நாங்கள் சீரியருடைய பாசறைக்குள் சென்றோம். அங்குக் கட்டியிருந்த குதிரைகளையும் கழுதைகளையும் கூடாரங்களையும் தவிர ஒரு மனிதனைக்கூட நாங்கள் காணவில்லை" என வாயிற் காவலரிடம் தெரிவித்தனர்.
2 இராஜாக்கள் 7 : 11 (RCTA)
இதைக் கேட்ட வாயிற் காவலர் அரண்மனைக்குள் சென்று அங்கு இருந்தோரிடம் இதை அறிவித்தனர்.
2 இராஜாக்கள் 7 : 12 (RCTA)
அரசன் அந்த இரவிலேயே எழுந்து தன் ஊழியர்களை நோக்கி, "சீரியர் நமக்கு எதிராகச் செய்ய நினைத்த சதியைக் கேளுங்கள். நாம் பசியால் வருந்துவதை அறிந்து அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, 'இஸ்ராயேலர் நகரிலிருந்து வெளியே வருவார்கள். அப்போது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு நகரினுள் நுழையலாம்' என்று எண்ணி, வயல் வெளிகளில் ஒளிந்திருக்கிறார்கள் போலும்" என்றான்.
2 இராஜாக்கள் 7 : 13 (RCTA)
அவனுடைய ஊழியரில் ஒருவன் அரசனை நோக்கி, "நகரில் ஐந்து குதிரைகள் தாம் எஞ்சியுள்ளன. (ஏனெனில் இஸ்ராயேலருக்குச் சொந்தமான மற்றக் குதிரைகள் எல்லாம் அழிந்து விட்டன). அவற்றைத் தயார்படுத்தி ஒற்றரை அனுப்பலாம்" என்று யோசனை கூறினான்.
2 இராஜாக்கள் 7 : 14 (RCTA)
ஆகையால் இரண்டு குதிரைகள் கொண்டு வரப்பட்டன. அரசன் இருவரைச் சீரியர் பாசறைக்கு அனுப்பி, "போய்ப் பார்த்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.
2 இராஜாக்கள் 7 : 15 (RCTA)
அவர்களோ சீரியரைத் தேடி யோர்தான் நதி வரை போனார்கள். சீரியர் பீதியுற்று ஒடின போது எறிந்து விட்ட உடைகளும் ஆயுதங்களும் வழி நெடுகக் கிடக்கக் கண்டு, திரும்பி வந்து அரசனிடம் தெரிவித்தனர்.
2 இராஜாக்கள் 7 : 16 (RCTA)
உடனே மக்கள் நகரைவிட்டு வெளியே வந்து சீரியர் பாசறையைக் கொள்ளையிட்டனர். ஆகவே, ஆண்டவரின் வாக்குப்படி முதல்தரக் கோதுமை மாவு சீக்கலுக்கு ஒரு மரக்காலும், வாற்கோதுமை சீக்கலுக்கு இரண்டு மரக்காலுமாக விற்கப்பட்டன.
2 இராஜாக்கள் 7 : 17 (RCTA)
அரசன் வழக்கம்போல் தனக்குப் பக்கபலமாய் இருந்து வந்த படைத் தலைவனை நகர் வாயிலில் காவலுக்கு வைத்திருந்தான். மக்கள் திரள்திரளாய் நகர வாயிலுக்கு வரவே, நெருக்கடியில் அவன் மிதிப்பட்டு உயிர் நீத்தான். இவ்வாறு அரசன் கடவுளின் மனிதரைப் பார்க்க வந்த போது, இவர் அவனுக்குச் சொல்லியிருந்தபடியே நடைபெற்றது.
2 இராஜாக்கள் 7 : 18 (RCTA)
இங்ஙனம், "நாளை இந்நேரம் ஒரு சீக்கலுக்கு வாற்கோதுமை இரண்டு மரக்காலும் கோதுமை மாவு ஒரு மரக்காலும் விற்கப்படும்" என்று கடவுளின் மனிதர் அரசனிடம் கூறியிருந்த வாக்கும் நிறைவேறியது.
2 இராஜாக்கள் 7 : 19 (RCTA)
அந்தப் படைத்தலைவன் கடவுளின் மனிதரை நோக்கி, "ஆண்டவர் வானினின்று தானியத்தைத் திரளாகப் பொழிந்தாலும் நீர் கூறுவது நிறைவேறாது" என்று சொல்லியிருந்தான். அதற்குக் கடவுளின் மனிதர் "நீர் அதை கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது உண்ணமாட்டீர்" என்று கூறியிருந்தார்.
2 இராஜாக்கள் 7 : 20 (RCTA)
இவ்வாறு இறைவாக்கினர் முன்னறிவித்தபடியே அவனுக்கு நிகழ்ந்தது; அதாவது, அவன் நகர வாயிலில் மக்கள் காலால் மிதிபட்டு இறந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20