2 இராஜாக்கள் 3 : 1 (RCTA)
யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆக்காபின் மகன் யோராம் இஸ்ராயேலின் ஆட்சி ஏற்றுப் பன்னிரு ஆண்டுகள் சமாரியாவில் ஆண்டான்.
2 இராஜாக்கள் 3 : 2 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் தீயவனாய் நடந்து வந்த போதிலும், தன் தாய் தந்தையரைப் போல் அவ்வளவு தீயவன் அல்லன். ஏனெனில் அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாவாலின் சிலைகளை அகற்றி விட்டான்.
2 இராஜாக்கள் 3 : 3 (RCTA)
எனினும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் தீய வழியிலேயே அவனும் நிலையாய் நின்றான். அவன் அப்பாவங்களை விலக்கிவிடவில்லை.
2 இராஜாக்கள் 3 : 4 (RCTA)
நிற்க, மோவாப் அரசன் மேசா ஏராளமான கால்நடைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ராயேல் அரசனுக்கு இலட்சம் ஆட்டுக் குட்டிகளையும், இலட்சம் மயிர் கத்தரிக்காத செம்மறிக் கடாக்களையும் செலுத்தி வந்தான்.
2 இராஜாக்கள் 3 : 5 (RCTA)
ஆனால் ஆக்காப் இறந்தபின் அவன் இஸ்ராயேல் அரசனோடு செய்திருந்த உடன்படிக்கையை மீறினான்.
2 இராஜாக்கள் 3 : 6 (RCTA)
ஆகையால் அன்று அரசன் யோராம் சமாரியாவினின்று புறப்பட்டு இஸ்ராயேல் வீரர் அனைவரையும் அணிவகுத்தான்.
2 இராஜாக்கள் 3 : 7 (RCTA)
யூதாவின் அரசன் யோசபாத்திடம், "மோவாபின் அரசன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, அவனுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வாரும்" எனத் தூது அனுப்பினான். யோசபாத் மறுமொழியாக, "உம்மோடு வருகிறேன். எனக்குச் சொந்தமானவன் உமக்கும் சொந்தமானவனே. என் குடிகள் உமக்கும் குடிகளே. எனக்குரிய குதிரைகள் உமக்கும் உரியனவே" என்று சொன்னான்.
2 இராஜாக்கள் 3 : 8 (RCTA)
மேலும், "எவ்வழியே நாம் செல்லலாம்?" எனக்கேட்டான். அதற்கு யோராம், "இதுமேயாவின் பாலைவனம் வழியாகப் போவோம்" எனப் பதில் உரைத்தான்.
2 இராஜாக்கள் 3 : 9 (RCTA)
ஆதலால், இஸ்ராயேல் அரசனும் யூதாவின் அரசனும் ஏதோமின் அரசனும் புறப்பட்டு ஏழுநாள் சுற்றித்திரிந்தனர். படை வீரர்களுக்கும், அவர்களைப் பின்தொடர்ந்த விலங்குகளுக்கும் தண்ணீர் இல்லாமல் போயிற்று.
2 இராஜாக்கள் 3 : 10 (RCTA)
அப்போது இஸ்ராயேலின் அரசன், "அந்தோ! அரசர் நம் மூவரையும் ஆண்டவர் இங்கே ஒன்றாகக் கூட்டி வந்தது, மோவாபியர் கையில் நம்மை ஒப்புவிக்கவே!" என்றான்.
2 இராஜாக்கள் 3 : 11 (RCTA)
அதற்கு யோசபாத், "ஆண்டவரை மன்றாடும்படி ஆண்டவரின் இறைவாக்கினர் இங்கு இல்லையா?" என்று கேட்டான். இஸ்ராயேல் அரசனின் ஊழியர்களில் ஒருவன், "எலியாசின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிவந்த சாபாத்தின் மகன் எலிசேயு இங்கு இருக்கிறார்" என்றான்.
2 இராஜாக்கள் 3 : 12 (RCTA)
யோசபாத், "ஆண்டவரின் வாக்கு அவர்பால் இருக்கிறது" என்றான். அப்போது இஸ்ராயேல் அரசனும் யூதா அரசனான யோசபாத்தும் ஏதோம் அரசனும் எலிசேயுவிடம் சென்றனர்.
2 இராஜாக்கள் 3 : 13 (RCTA)
எலியேசு இஸ்ராயேல் அரசனைப் பார்த்து, "உமக்கும் எனக்கும் என்ன? உம் தாய் தந்தையரின் இறைவாக்கினரிடம் செல்லும்" என்றார். அப்போது இஸ்ராயேலின் அரசன், "மோவாபியர் கையிலே இம்மூன்று அரசர்களையும் ஒப்புவிக்க ஆண்டவர் அவர்களை இங்கே ஒன்றாகக் கூட்டி வந்ததின் காரணம் என்ன?" என வினவினான்.
2 இராஜாக்கள் 3 : 14 (RCTA)
எலிசேயு அவனைப் பார்த்து, "நான் வழிபட்டுவரும் சேனைகளின் ஆண்டவர் மேல் ஆணை! நான் யூதாவின் அரசன் யோசபாத்துக்கு மரியாதை கொடுத்ததினால் தான் உமக்குச் செவி கொடுத்தேன்; உம்மை ஏறெடுத்தும் பார்த்தேன்.
2 இராஜாக்கள் 3 : 15 (RCTA)
இப்போது யாழிசைஞன் ஒருவனை அழைத்து வாருங்கள்" என்றார். யாழிசைஞன் ஒருவன் வந்து யாழை மீட்டவே ஆண்டவருடைய வல்லமை எலிசேயுவின் மேல் வந்தது.
2 இராஜாக்கள் 3 : 16 (RCTA)
அப்போது அவர் அவர்களை நோக்கி, "வறண்டு போன இந்த வாய்க்கால் நெடுகப் பல பள்ளங்களை வெட்டுங்கள்.
2 இராஜாக்கள் 3 : 17 (RCTA)
ஏனெனில், காற்றையாவது மழையையாவது காணமாட்டீர்கள்; என்றாலும், இதில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்நீரை நீங்களும் உங்கள் வீட்டாரும் விலங்குகளும் பருகுங்கள்' என்று ஆண்டவர் சொல்கிறார்.
2 இராஜாக்கள் 3 : 18 (RCTA)
ஆண்டவருக்கு இது அற்பக் காரியமே. அன்றியும் அவர் மோவாபியரையும் உங்களுக்குக் கையளிப்பார்.
2 இராஜாக்கள் 3 : 19 (RCTA)
அப்போது நீங்கள் அரண் சூழ்ந்த எல்லா நகர்களையும், சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; கனிதரும் மரங்களையெல்லாம் அடியோடு வெட்டிவிடுங்கள்; நீரூற்றுக்களை எல்லாம் அடைத்துவிடுங்கள். செழிப்பான நிலங்களை எல்லாம் கற்களால் நிரப்பிவிடுங்கள்" என்றார்.
2 இராஜாக்கள் 3 : 20 (RCTA)
மறுநாள் காலையில் பலி செலுத்தப்படும் நேரத்தில், இதோ தண்ணீர் ஏதோம் வழியாகப் பாய்ந்துவர நாடெங்கும் தண்ணீர் மயமாய் இருந்தது.
2 இராஜாக்கள் 3 : 21 (RCTA)
மோவாப் நாட்டினர் எல்லாரும் தங்களோடு போர்புரிய அரசர்கள் வருகிறார்கள் எனக் கேள்வியுற்று, அரைக்கச்சையில் வாளைக் கட்டியிருந்தவர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு தங்கள் எல்லைகளைக் காக்க வந்து சேர்ந்தார்கள்.
2 இராஜாக்கள் 3 : 22 (RCTA)
ஒரு நாள் மோவாபியர் அதிகாலையில் எழுந்தபோது தண்ணீரின்மேல் சூரியனின் கதிர்கள் விழ, அது இரத்தம் போல் சிவப்பாயிருக்கக் கண்டனர்.
2 இராஜாக்கள் 3 : 23 (RCTA)
இது வாளின் இரத்தம் அரசர்கள் தமக்குள்ளே சமர் செய்து ஒருவரை ஒருவர் கொன்று போட்டனர் போலும்! மோவாபியரே, இப்போது கொள்ளையிடப் புறப்படுவீர்" என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர்.
2 இராஜாக்கள் 3 : 24 (RCTA)
எனவே அவர்கள் இஸ்ராயேலின் பாசறைக்குள் நுழைந்தனர். இஸ்ராயேலரோ மோவாபியர்மேல் பாய்ந்து அவர்களை முறியடிக்க, அவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஆகையால் வெற்றி கொண்ட இஸ்ராயேலர் மோவாபியரைப் பின் தொடர்ந்து அவர்களைக் கொன்று குவித்தனர்.
2 இராஜாக்கள் 3 : 25 (RCTA)
பிறகு நகர்களை அழித்தனர். கற்களை வீசி செழிப்பான நிலங்களை எல்லாம் நிரப்பினர். எல்லா நீரூற்றுக்களையும் அடைத்தனர். செங்கற்சுவர் மட்டும் எஞ்சி நிற்க, கனிதரும் மரங்கள் அனைத்தையும் வெட்டி எறிந்தனர். அன்றியும், கவணில் கைதேர்ந்தோர் நகரை வளைத்துத்தாக்க, சுவர் பெரும்பாலும் இடிபட்டது.
2 இராஜாக்கள் 3 : 26 (RCTA)
எதிரிகள் வாகை சூடினர் என்று மோவாப் அரசன் கண்டபோது வாள் ஏந்தும் எழுநூறு வீரரைச் சேர்த்துக் கொண்டு ஏதோம் அரசனின் படையைத் தாக்க முற்பட்டான்; ஆனால் முடியவில்லை.
2 இராஜாக்கள் 3 : 27 (RCTA)
அப்போது தனக்குப்பின் அரசாள வேண்டிய தன் தலைமகனைப் பிடித்து மதிலின் மேல் அவனைத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தான். இதனால் இஸ்ராயேலில் கடுஞ்சினம் எழ, அவர்கள் விரைவில் அவனைவிட்டு அகன்று தம் சொந்த நாடு திரும்பினார்.
❮
❯