2 இராஜாக்கள் 24 : 1 (RCTA)
யோவாக்கிமின் ஆட்சி காலத்தில் பபிலோன் அரசன் நபுக்கொதொனோசோர் யூதாவின் மேல் போர் தொடுத்தான். (அதில் தோற்று) யோவாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்குப் பணிந்திருந்தான். பின்பு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 2 (RCTA)
ஆண்டவர் கல்தேயாவினின்றும் சீரியாவினின்றும் மோவாபினின்றும் அம்மோன் மக்களினின்றும் கொள்ளைக்காரர்களை அவன் மீது ஏவி விட்டார். அவர் தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்குப்படி யூதாவை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
2 இராஜாக்கள் 24 : 3 (RCTA)
மனாசே செய்திருந்த எல்லாப் பாவங்களின் காரணமாக யூதாவைத் தம் திருமுன் நின்றும் தள்ளி விடுவதாக ஆண்டவர் யூதாவுக்கு எதிராய்ச் சொல்லியிருந்த வாக்கின்படியே இது நிகழ்ந்தது.
2 இராஜாக்கள் 24 : 4 (RCTA)
மேலும் அவன் சிந்திய குற்றமற்ற குருதிக்காகவும், யெருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதினாலும் ஆண்டவர் மன்னிப்பளிக்க மனம் இரங்கவில்லை.
2 இராஜாக்கள் 24 : 5 (RCTA)
யோவாக்கிமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின்பின் யோவாக்கிம் தன் முன்னோரோடு துயில் கொண்டான்.
2 இராஜாக்கள் 24 : 6 (RCTA)
அவன் மகன் யோவாக்கின் அவனுக்குப் பின் அரசன் ஆனான்.
2 இராஜாக்கள் 24 : 7 (RCTA)
எகிப்திய அரசன் இதன்பின் தன் நாட்டிலிருந்து வெளிவரவேயில்லை. ஏனெனில், எகிப்திய நதி முதல் யூபிரட்டிசு நதி வரை எகிப்திய அரசன் கைவசம் இருந்த நாட்டையெல்லாம் பபிலோனிய அரசன் பிடித்திருந்தான்.
2 இராஜாக்கள் 24 : 8 (RCTA)
யோவாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. யெருசலேமில் மூன்று மாதம் அவன் அரசாண்டான். அவன் தாயின் பெயர் நோகெஸ்தா. இவள் யெருசலேமைச் சேர்ந்த எல்நாத்தான் என்பவனுடைய மகள்.
2 இராஜாக்கள் 24 : 9 (RCTA)
யோவாக்கின் தன் தந்தை செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
2 இராஜாக்கள் 24 : 10 (RCTA)
அக்காலத்தில் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோரின் படைவீரர் யெருசலேம் நகர் மேல் போர் தொடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.
2 இராஜாக்கள் 24 : 11 (RCTA)
பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் தன் மக்களோடு நகரைப் பிடிக்க வந்தான்.
2 இராஜாக்கள் 24 : 12 (RCTA)
அப்போது யூதாவின் அரசன் யோவாக்கினும் அவன் தாயும் அவன் ஊழியர்களும் பெருமக்களும் அண்ணகர்களும் பபிலோன் அரசனிடம் சரணடைந்தனர். பபிலோனின் அரசனும் அவனை ஏற்றுக்கொண்டான். இது நபுக்கொதொனோசோருடைய ஆட்சியின் எட்டாம் ஆண்டில் நிகழ்ந்தது.
2 இராஜாக்கள் 24 : 13 (RCTA)
பின்பு அவன் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையெல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் சொன்ன வாக்கின்படி ஆலயத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன் பாத்திரங்களையும் உடைத்தெறிந்தான்.
2 இராஜாக்கள் 24 : 14 (RCTA)
மேலும் யெருசலேம் நகர மக்கள் அனைவரையும், நகரப் பெருமக்கள், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்கள், சிற்பக் கலைஞர், கொல்லர் ஆகியோரையும் சிறைப்பிடித்துப் பபிலோன் நகருக்குக் கொண்டு சென்றான். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மட்டும் தங்கள் ஊரில் விடப்பட்டனர்.
2 இராஜாக்கள் 24 : 15 (RCTA)
இதுவுமன்றி, அவன் யோவாக்கினையும், அவன் தாயையும் மனைவியரையும் அண்ணகர்களையும் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான். நாட்டின் நீதிபதிகளையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு போனான்.
2 இராஜாக்கள் 24 : 16 (RCTA)
மேலும், உடல் வலிமையுள்ள ஏழாயிரம் பேரையும், சிற்பக் கலைஞரும் கொல்லருமாகிய ஆயிரம் பேரையும், ஆற்றல் மிக்கவர்களையும், போர் வீரர்களையும் அவன் சிறைப்படுத்திப் பபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
2 இராஜாக்கள் 24 : 17 (RCTA)
யோவாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிற்றப்பன் மாத்தானியாசை அரசனாக்கி அவனுக்கு செதேசியாசு என்ற மறு பெயரை இட்டான்.
2 இராஜாக்கள் 24 : 18 (RCTA)
செதேசியாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் யெருசலேமில் பதினொன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த ஏரேமியாசினுடைய மகள்.
2 இராஜாக்கள் 24 : 19 (RCTA)
யோவாக்கின் செய்தபடியே செதேசியாசும் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
2 இராஜாக்கள் 24 : 20 (RCTA)
யெருசலேமையும் யூதாவையும் தமது திருமுன் நின்று தள்ளிவிடும் அளவிற்கு ஆண்டவர் அவற்றின் மேல் கோபம் கொண்டிருந்தார். செதேசியாசு பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20