2 இராஜாக்கள் 22 : 1 (RCTA)
யோசியாசு அரியணை ஏறிய போது அவனுக்கு எட்டு வயது. முப்பத்தொன்று ஆண்டுகள் அவன் யெருசலேமில் அரசாண்டான். பேசகாத் ஊரினனான அதாயாவின் மகள் இதிதா இவனுடைய தாய்.
2 இராஜாக்கள் 22 : 2 (RCTA)
அவன் ஆண்டவர் விரும்பியதையே செய்தான். தன் தந்தை தாவீது நடந்து காட்டிய எல்லா வழிகளிலும் வலப்புறமோ இடப்புறமோ சாயாது நடந்தான்.
2 இராஜாக்கள் 22 : 3 (RCTA)
தனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் யோசியாசு, ஆலயத்தின் கணக்கனும் மெச்சுலாமின் மகன் அசுலியாவின் மகனுமான சாபானை அழைத்து,
2 இராஜாக்கள் 22 : 4 (RCTA)
நீ பெரிய குரு எல்கியாசிடம் சென்று, 'ஆலயத்தின் உபயோகத்திற்காக மக்களிடமிருந்து வாயிற்காப்போர் பெற்றுக்கொண்ட பணத்தையெல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும்.
2 இராஜாக்கள் 22 : 5 (RCTA)
பின் ஆலயத்தை மேற்பார்ப்பவரிடம் அதைக் கொடுக்க, அவர்கள் அதை ஆலயத்தைப் பழுது பார்க்கும் தச்சர்களுக்கும் கொத்தர்களுக்கும்,
2 இராஜாக்கள் 22 : 6 (RCTA)
சுவர் வெடிப்புகளைப் பழுது பார்ப்பவருக்கும் கொடுக்கட்டும். தேவைக்கேற்ப அவர்கள் கருங்கற்களையும் மரங்களையும் விலைக்கு வாங்கிக் கொள்ளட்டும்.
2 இராஜாக்கள் 22 : 7 (RCTA)
பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். அதை அவர்கள் தங்களிடம் வைத்துக்கொண்டு உண்மையுடன் செலவிட வேண்டும்' என்று சொல்வாய்" என்றான்.
2 இராஜாக்கள் 22 : 8 (RCTA)
பெரிய குரு எல்கியாசு கணக்கனான சாபானை நோக்கி, "ஆலயத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லி, அந்நூலைச் சாபானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
2 இராஜாக்கள் 22 : 9 (RCTA)
பின் கணக்கன் சாபான் அரசனிடம் வந்து தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆணையைப்பற்றிக் கூறி, "அரசே, உம் அடியார்கள் ஆலயத்தில் கிடைத்த பணத்தைச் சேகரித்து அதை வேலையாட்களுக்குக் கொடுக்கும்படி ஆலயத்தை மேற்பார்ப்பவரிடம் கொடுத்தனர்" என்று சொன்னான்.
2 இராஜாக்கள் 22 : 10 (RCTA)
மேலும், "குரு எல்கியாசு என்னிடம் ஒரு நூல் கொடுத்துள்ளார்" என்று கூறி, சாபான் அதை அரசனுக்கு முன் படித்துக் காட்டினான்.
2 இராஜாக்கள் 22 : 11 (RCTA)
அரசன் ஆண்டவருடைய சட்ட நூலின் வாக்கியங்களைக் கேட்டதும் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான்.
2 இராஜாக்கள் 22 : 12 (RCTA)
பின் குரு எல்கியாசையும், சாபானின் மகன் அயிக்காமையும், மிக்காவின் மகன் அக்கோபோரையும், கணக்கன் சாபானையும், அரசனின் ஊழியன் அசாயியாசையும் நோக்கி,
2 இராஜாக்கள் 22 : 13 (RCTA)
நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட நூலில் எழுதியுள்ளதன்படி, என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் யூதாவின் மக்கள் எல்லாரையும் பற்றியும் ஆண்டவர் திருவுளம் என்ன என்று விசாரியுங்கள். ஏனெனில் அந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் முன்னோர் செவி கொடுக்கவும் இல்லை; அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவர் நம்மேல் மிகுந்த கோபம் கொண்டுள்ளார்" என்றார்.
2 இராஜாக்கள் 22 : 14 (RCTA)
குரு எல்கியாசும் அயிக்காமும். அக்கோபோரும் சாபானும் அசாயியாசும் ஒல்தாம் என்ற இறைவாக்கினளிடம் சென்று அவளைக் கண்டு பேசினார்கள். இவள் யெருசலேமில் இரண்டாம் தெருவில் குடியிருந்தவனும் ஆலய ஆடைகளை மேற்பார்த்து வந்தவனுமான ஆரவாசின் மகன் தேக்குவாவின் புதல்வன் செல்லோமின் மனைவி.
2 இராஜாக்கள் 22 : 15 (RCTA)
ஒல்தாம் அவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது:
2 இராஜாக்கள் 22 : 16 (RCTA)
யூதாவின் அரசன் வாசித்த அந்தச் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளவை எல்லாம் நிறைவேறும். இதோ நாம் இந்நகருக்கும் அதன் குடிகளுக்கும் அந்நூலில் கூறப்பட்டுள்ள துன்பங்கள் வரச் செய்வோம்.
2 இராஜாக்கள் 22 : 17 (RCTA)
ஏனெனில் அவர்கள் நம்மைப் புறக்கணித்து விட்டுப் பிற தெய்வங்களுக்குப் பலி செலுத்தி, தங்கள் நடத்தையால் நமக்குக் கோபமுண்டாக்கினர். எனவே நாம் இவ்விடத்தின் மேல் கொண்ட வெறுப்பு நெருப்பாய்ப் பற்றி எரியும்; அது அவிக்கப்படாது.'
2 இராஜாக்கள் 22 : 18 (RCTA)
ஆண்டவரிடம் (அவர் திருவுளம் என்ன என்று) விசாரிப்பதற்கு உங்களை அனுப்பிய யூதா அரசனிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: நீ அந்நூலில் கூறப்பட்டுள்ளதைக் கேட்டதினாலும்,
2 இராஜாக்கள் 22 : 19 (RCTA)
இவ்விடத்திற்கும் இதன் குடிகளுக்கும் எதிராக, இவர்கள் சபிக்கப்பட்டவர்களாயும் அச்சத்திற்கு உரியவர்களாயும் இருப்பர் என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தினதனாலும், உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நம் கண்முன் அழுததனாலும் நாமும் உன் வேண்டுதலுக்குச் செவி கொடுத்தோம்.
2 இராஜாக்கள் 22 : 20 (RCTA)
ஆதலால் இந்நகரின்மேல் நாம் வருவிக்க இருக்கும் தீமைகளை எல்லாம் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் முன்னோர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்போம். நீ உள அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்' என்பதாம்" என்றாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20