2 இராஜாக்கள் 19 : 1 (RCTA)
எசேக்கியாசு அரசன் ரப்சாசேசு சொன்னவற்றைக் கேட்ட போது, தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி உடுத்தி ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைந்தான்.
2 இராஜாக்கள் 19 : 2 (RCTA)
மேலும், அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும் எழுத்தன் சொப்னாவையும் குருக்களின் முதியவரையும் கோணி உடுக்கச் செய்து, ஆமோசு மகன் இசயாசு என்னும் இறைவாக்கினரிடம் அனுப்பினான்.
2 இராஜாக்கள் 19 : 3 (RCTA)
அவர்கள் அவரை நோக்கி, "இதோ எசேக்கியாசு உமக்குச் சொல்வதாவது: ' இன்று துன்பமும் கண்டனமும் தேவதூஷணமும் மலிந்துள்ளன; பேறுகாலத்தை அடைந்துள்ள தாய் பிள்ளையைப் பெற்றெடுக்க வலுவற்றிருக்கிறாள்.
2 இராஜாக்கள் 19 : 4 (RCTA)
என்றும் வாழும் இறைவனைப் பழித்து இகழும் படி அசீரிய அரசனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட ரப்சாசேசு சொன்னவற்றை எல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார் என்பதற்கு ஐயமில்லை. அப்பழிச் சொற்களை அவர் கட்டாயம் கேட்டிருப்பார். ஆகையால் நீர் இன்னும் எஞ்சியிருக்கும் மக்களுக்காக ஆண்டவரை மன்றாடும்' என்பதாம்" என்றனர்.
2 இராஜாக்கள் 19 : 5 (RCTA)
எசேக்கியாசு அரசனின் ஊழியர்கள் இசயாசிடம் வந்து இதைக் கூறினர்.
2 இராஜாக்கள் 19 : 6 (RCTA)
இசயாசு அவர்களை நோக்கி, "உங்கள் தலைவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது: 'அசீரிய அரசனுடைய ஊழியர்களின் பழிச்சொல் கேட்டு நீர் அஞ்ச வேண்டாம்.
2 இராஜாக்கள் 19 : 7 (RCTA)
இதோ, நாம் அவனுக்கு ஒரு வான தூதரை அனுப்புவோம். அவன் அந்தச் செய்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிப் போவான். அவனது நாட்டில் நாம் அவனை வாளால் வெட்டி வீழ்த்துவோம் என்று ஆண்டவர் சொல்கிறார்' என்பதாம்" என்றார்.
2 இராஜாக்கள் 19 : 8 (RCTA)
அசீரிய அரசன் லாக்கீசை விட்டுப் புறப்பட்டான் என்று ரப்சாசேசு கேள்விப்பட்டுத் திரும்பிச் செல்ல, அங்கே அவன் லொப்னாவின் மேல் போர் தொடுத்துள்ளதைக் கண்டான்.
2 இராஜாக்கள் 19 : 9 (RCTA)
பின் எத்தியோப்பிய அரசன் தாராக்கா தனக்கு எதிரியாய்ப் படைதிரட்டி வருகிறான் என்று அறிந்து அவ்வரசனை எதிர்த்துப் போகுமுன், திரும்பவும் எசேக்கியாசிடம் தூதுவரை அனுப்பி,
2 இராஜாக்கள் 19 : 10 (RCTA)
நீங்கள் போய் யூதா அரசன் எசேக்கியாசுக்குச் சொல்லவேண்டியதாவது: ' உம் கடவுளை நம்பி ஏமாற்றம் அடையாதீர். யெருசலேம் அசீரிய அரசனின் கையில் பிடிபடாது என்று நீர் எண்ணவும் வேண்டாம்.
2 இராஜாக்கள் 19 : 11 (RCTA)
அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் அழித்து நிர்மூலமாக்கியதை நீர் அறிவீர். நீர் மட்டும் தப்பிவிட முடியுமோ?
2 இராஜாக்கள் 19 : 12 (RCTA)
என் முன்னோர் அழித்து விட்ட கோசான், ஆரான், ரெசேப், தெலாசாரில் வாழ்ந்து வந்த ஏதனின் மக்கள் முதலியோரை அவரவரின் தெய்வங்கள் மீட்டனரோ?
2 இராஜாக்கள் 19 : 13 (RCTA)
எமாத் அரசன் எங்கே? அர்பாத் அரசனின் கதி என்ன? செபர்வாயிம், ஆனா, ஆவா என்ற நகர்களின் அரசரும் எங்கே? என்பதாம்" என்று சொல்லுவித்தான்.
2 இராஜாக்கள் 19 : 14 (RCTA)
எசேக்கியாசு தூதுவர்களின் கையிலிருந்த ஓலையை வாங்கி வாசித்த பின்பு, ஆலயத்திற்குச் சென்று ஆண்டவர் திருமுன் அவ்வோலையை விரித்து வைத்தான்.
2 இராஜாக்கள் 19 : 15 (RCTA)
மேலும் ஆண்டவரை நோக்கி, "கெருபீம்களின் மேல் வீற்றிருக்கும் ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, நீர் இவ்வுலகத்து அரசர்களுக்கெல்லாம் கடவுளாய் இருக்கின்றீர். இவ்விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே.
2 இராஜாக்கள் 19 : 16 (RCTA)
ஆண்டவரே, செவிசாய்த்து என் வேண்டுதலைக் கேளும். உம் திருக்கண்களை என் மீது திருப்பியருளும். என்றும் வாழும் ஆண்டவரை எங்கள் முன்பாகப் பழித்துரைக்கும்படி சொல்லியனுப்பிய செனாகெரிபின் வார்த்தைகளைக் கேளும்.
2 இராஜாக்கள் 19 : 17 (RCTA)
ஆண்டவரே, அசீரிய அரசர்கள் எல்லாம் மக்களையும் அவர்கள் நாடுகளையும் அழித்து,
2 இராஜாக்கள் 19 : 18 (RCTA)
அவர்களின் தெய்வங்களையும் நெருப்பிலிட்டனர். அவை உண்மைக் கடவுளல்ல, மனிதன் வனைந்த கைவேலையான மரமும் கல்லுமே. எனவே தான் அவர்கள் அவற்றை அழிக்க முடிந்தது.
2 இராஜாக்கள் 19 : 19 (RCTA)
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உலக நாடுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்; நீர் ஒருவரே ஆண்டவர் என்று அறியும் பொருட்டு, அவனுடைய கையினின்று எங்களைக் காப்பீராக" என்று வேண்டினான்.
2 இராஜாக்கள் 19 : 20 (RCTA)
அப்பொழுது ஆமோசின் மகன் இசயாசு எசேக்கியாசிடம் ஆள் அனுப்பிச் சொன்னதாவது: "இதோ, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லதாவது: 'அசீரிய அரசன் செனாக்கெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டோம். '
2 இராஜாக்கள் 19 : 21 (RCTA)
அவனைக் குறித்து ஆண்டவர் சொல்கிறதாவது: 'சீயோனின் மகளான கன்னிப் பெண் உன்னை இகழ்ந்தாள்; உன்னை எள்ளி நகையாடினாள். யெருசலேமின் மகள் பின் நின்று உன்னைப் பரிகசித்தாள்.
2 இராஜாக்கள் 19 : 22 (RCTA)
நீ யாரைப் பழித்தாய்? யாரை இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்ப் பேசினாய்? யாருக்கு எதிராய் உன் கண்களைச் செருக்குடன் ஏறெடுத்துப் பார்த்தாய்? இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா?
2 இராஜாக்கள் 19 : 23 (RCTA)
நீர் உன் ஊழியர் மூலம் ஆண்டவரைப் பழித்து, " எண்ணற்ற என் தேர்களோடு நான் லீபான் மலையின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும், அங்கு நின்ற உயர்ந்த சப்பீன் மரங்களையும் வெட்டினேன். அதன் கடைக்கோடி வரை சென்றேன். கார்மேலைச் சார்ந்த காடுகளையும் அழித்துவிட்டேன்.
2 இராஜாக்கள் 19 : 24 (RCTA)
பிறநாடுகளின் நீரைப் பருகினேன். தேக்கி வைக்கப்பட்ட நீரை என் உள்ளங் கால்களினால் வற்றிடச் செய்தேன்" என்று சொன்னாய்.
2 இராஜாக்கள் 19 : 25 (RCTA)
நாம் ஆதி முதல் செய்து வந்துள்ளவற்றை நீ கேட்டதில்லையோ? பழங்காலம் தொட்டே நாம் திட்டமிட்டோம்; அதை இக்காலத்தில் நிறைவு செய்தோம்: அதாவது, போர் வீரர் நிறைந்தவையும் அரண் சூழ்ந்தவையுமான நகர்கள் பாழான குன்று போல் ஆயின.
2 இராஜாக்கள் 19 : 26 (RCTA)
அவற்றின் குடிகள் கைவன்மை இழந்து, நடுநடுங்கிக் கலங்கினர். வயல்வெளியில் வளரும் புல்போலவும், கூரைகளில் முளைத்து ஓங்கி வளருமுன்னே பட்டுப்போகும் பூண்டு போலவும் ஆயினர்.
2 இராஜாக்கள் 19 : 27 (RCTA)
உன் வீட்டையும், உன் நடவடிக்கைகளையும், நீ நடக்கும் வழியையும், நமக்கு எதிராக நீ கொண்ட கோபத்தையும் நாம் முன்பே அறிவோம்.
2 இராஜாக்கள் 19 : 28 (RCTA)
நீ நம்மேல் கொண்ட பகைமையால் பித்தனானாய். உன் ஆணவம் நம் செவிகளுக்கு எட்டியது. எனவே உன் மூக்கில் ஒரு வளையத்தையும், உன் வாயில் ஒரு கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைக் கொண்டு போவோம்.
2 இராஜாக்கள் 19 : 29 (RCTA)
எசேக்கியாசே, உனக்கு இது அடையாளமாக இருப்பதாக. அதாவது: இவ்வாண்டில் உனக்குக் கிடைப்பதையும், அடுத்த ஆண்டில் தானாய் விளைவதையும் உண்பாய். மூன்றாம் ஆண்டிலோ நீ பயிரிட்டு அறுவடை செய்து, திராட்சைத் தோட்டங்களையும் நட்டு அவற்றின் பழங்களை உண்பாய்.
2 இராஜாக்கள் 19 : 30 (RCTA)
யூதா வம்சத்தாரில் எஞ்சியவை எல்லாம் ஆழமாக வேரூன்றி மேலே பலன் அளிக்கும்.
2 இராஜாக்கள் 19 : 31 (RCTA)
ஏனெனில் எஞ்சியோர் யெருசலேமிலிருந்து வெளியேறுவர்; உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று அளப்பெரிய அன்பே இவற்றை எல்லாம் செய்து முடிக்கும்.
2 இராஜாக்கள் 19 : 32 (RCTA)
ஆதலால் ஆண்டவர் அசீரியா வேந்தனைக் குறித்துச் சொல்கிறதாவது: இந்நகரில் அவன் காலடி வைக்கப் போவதில்லை. அதன் மேல் அம்பும் எய்யமாட்டான். ஒரு கேடயமாவது அதனுள் வராது. அதைச் சுற்றி முற்றுகையிட மாட்டான்.
2 இராஜாக்கள் 19 : 33 (RCTA)
அவன் வந்த வழியே திரும்பிப் போவான். இந்நகருக்குள் நுழையவே மாட்டான். இந்நகரை நாம் பாதுகாப்போம்.
2 இராஜாக்கள் 19 : 34 (RCTA)
வாக்குறுதியின் பொருட்டும், நம் ஊழியன் தாவீதின் பொருட்டும் நாம் இந்நகரை மீட்போம் என்கிறார் ஆண்டவர்" என்பதாம்.
2 இராஜாக்கள் 19 : 35 (RCTA)
அன்றிரவில் நிகழ்ந்ததாவது: ஆண்டவருடைய தூதர் வந்து அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேரைக் கொன்று குவித்தார். அசீரிய அரசன் செனாக்கெரிப் விடியற் காலையில் எழுந்த போது, அங்கு மடிந்து கிடந்த பிணங்களைக் கண்டு, உடனே அவன் அங்கிருந்து திரும்பிச் சென்றான்.
2 இராஜாக்கள் 19 : 36 (RCTA)
திரும்பிச் சென்று அவன் நினிவே நகரில் தங்கி இருந்தான்.
2 இராஜாக்கள் 19 : 37 (RCTA)
தன் தெய்வமாகிய நெஸ்ரோக்கின் கோயிலில் அவன் வழிபாடு செய்து கொண்டிருக்கையில், அவனுடைய புதல்வர்களாகிய அதிராமெலக்கும் சராசாரும் அவனை வாளால் வெட்டி விட்டு, அர்மேனியா நாட்டிற்கு ஓடிப்போயினர். அவனுடைய மகன் அசர்காதோன் அவனுக்குப் பின் அரசன் ஆனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: