2 இராஜாக்கள் 14 : 1 (RCTA)
இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 14 : 2 (RCTA)
அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். யெருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவன் தாயின் பெயர் யோவாதான்.
2 இராஜாக்கள் 14 : 3 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையானதையே செய்து வந்தான். ஆயினும், தன் தந்தை தாவீது போல் அல்லன்; தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் தானும் செய்தான்.
2 இராஜாக்கள் 14 : 4 (RCTA)
(விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை; மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
2 இராஜாக்கள் 14 : 5 (RCTA)
ஆட்சி தன் கைக்கு வந்தவுடன் அரசனாய் இருந்த தன் தந்தையைக் கொலை செய்த ஊழியர்களைக் கொன்று போட்டான்.
2 இராஜாக்கள் 14 : 6 (RCTA)
பிள்ளைகள் செய்த பாவத்துக்காகத் தந்தையர் சாக வேண்டாம்; தந்தையர் செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் உயிரிழக்க வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் சாகக்கடவான்" என ஆண்டவர் கட்டளையிட்டபடி மோயீசனின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அமாசியாசு தன் தந்தையைக் கொன்றவர்களுடைய பிள்ளைகளைக் கொன்று போடவில்லை.
2 இராஜாக்கள் 14 : 7 (RCTA)
அவன் உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் இதுமேயரை முறியடித்து, கற்கோட்டையைப் போரிட்டுப் பிடித்து, அதற்கு இது வரை வழங்கி வருகிற எக்தேயெல் என்ற பெயரை இட்டான்.
2 இராஜாக்கள் 14 : 8 (RCTA)
அப்போது அமாசியாசு இஸ்ராயேலின் அரசன் ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்தவனாகிய யோவாசிடம் ஆள் அனுப்பி, "வாரும், போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 9 (RCTA)
அதற்கு இஸ்ராயேல் அரசன் யோவாசு, யூதாவின் அரசன் அமாசியாசிடம் தூதரை அனுப்பி, "லீபானிலுள்ள நெருஞ்சிச் செடி லீபானிலிருக்கும் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ' என் மகனுக்கு உன் மகளை மனைவியாகத் தரவேண்டும் ' என்றதாம்! ஆனால் அந்த லீபான் காட்டு விலங்குகள் அந்த வழியே போகையில், நெருஞ்சிச் செடியைக் காலால் மிதித்துப் போட்டனவாம்!
2 இராஜாக்கள் 14 : 10 (RCTA)
நீர் இதுமேயரை முறியடித்ததினால் செருக்குற்றுள்ளீர் போலும். நீர் பெற்ற புகழுடன் உம் வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி தீமையைத் தேடிக்கொள்வானேன்?" எனச் சொல்லச் சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 11 (RCTA)
அதற்கு அமாசியாசு செவிகொடுக்கவில்லை. எனவே இஸ்ராயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். இவனும் யூதா அரசன் அமாசியாசும் யூதாவின் நகர் பெத்சாமேசின் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
2 இராஜாக்கள் 14 : 12 (RCTA)
யூதாவின் மக்கள் இஸ்ராயேலருக்கு முன் தோற்றுத் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர்.
2 இராஜாக்கள் 14 : 13 (RCTA)
இஸ்ராயேல் அரசன் யோவாசு, பெத்சாமேசில் ஒக்கோசியாசுக்குப் பிறந்த யோவாசின் மகனும் யூதாவின் அரசனுமான அமாசியாசைச் சிறைப்பிடித்து, யெருசலேமுக்குக் கொண்டு சென்றான். யெருசலேமின் மதிற்சுவரில் எபிராயீம் வாயில் முதல் மூலை வாயில் வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளிவிட்டு,
2 இராஜாக்கள் 14 : 14 (RCTA)
ஆண்டவருடைய ஆலயத்திலும் அரசனுடைய கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு, சிலரைப் பிணையாளராகவும் பிடித்துக் கொண்டு சமாரியவுக்குத் திரும்பிச் சென்றான்.
2 இராஜாக்கள் 14 : 15 (RCTA)
யோவாசின் மற்றச் செயல்களும், யூதா அரசன் அமாசியாசுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 14 : 16 (RCTA)
யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின், சமாரியாவில் இஸ்ராயேல் அரசருடைய கல்லறையில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் எரோபோவாம் அரசன் ஆனான்.
2 இராஜாக்கள் 14 : 17 (RCTA)
இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசு மாண்டபின், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.
2 இராஜாக்கள் 14 : 18 (RCTA)
அமாசியாசின் மற்றச் செயல்கள் யூதா அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 14 : 19 (RCTA)
யெருசலேமில் சிலர் அவனுக்கு எதிராகச் சதி செய்தனர். எனவே அவன் லாக்கீசு நகருக்கு ஓடிப்போனான். சதி செய்தவர்கள் அவனைப் பிடிக்க லாக்கீசுக்கு ஆள் அனுப்பி அவனை அங்குக் கொலை செய்தனர்.
2 இராஜாக்கள் 14 : 20 (RCTA)
பின் அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனைப் புதைத்தனர்.
2 இராஜாக்கள் 14 : 21 (RCTA)
யூதா மக்கள் எல்லாரும் அப்பொழுது பதினாறு வயதினனாய் இருந்த அசாரியாசைத் தேர்ந்தெடுத்து, அவனை அவன் தந்தை அமாசியாசுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
2 இராஜாக்கள் 14 : 22 (RCTA)
அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டபின், இவன் எலாத் நகரைக் கட்டி, அதைத் திரும்ப யூதா அரசுடன் இணைத்துக் கொண்டான்.
2 இராஜாக்கள் 14 : 23 (RCTA)
யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறிய பதினைந்தாம் ஆண்டில், இஸ்ராயேல் அரசன் யோவாசின் மகன் எரோபோவாம் சமாரியாவில் அரசுகட்டில் ஏறி, நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 14 : 24 (RCTA)
இவன் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவங்களில் ஒன்றையும் அவன் விட்டுவைக்கவில்லை.
2 இராஜாக்கள் 14 : 25 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஒபேரில் அமைந்திருந்த கேத் ஊரானாகிய தம் அடியானும் அமாத்தியின் புதல்வனுமாகிய யோனாசு என்ற இறைவாக்கினர் மூலம் கூறியபடி, எரோபோவாம் ஏமாத் முதல் பாலைவனக் கடல் வரை இஸ்ராயேலின் எல்லைகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
2 இராஜாக்கள் 14 : 26 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேலர் பட்ட மிதமிஞ்சிய துன்பத்தையும், சிறையில் அடைப்பட்டவர்களும், மக்களில் கடைப்பட்டவர்களும் முதலாய் எல்லோருமே துன்புறுவதையும், அவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் இல்லாதிருந்ததையும் கண்ணுற்றார்.
2 இராஜாக்கள் 14 : 27 (RCTA)
இஸ்ராயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவோம்" என்று ஆண்டவர் சொல்லவில்லை; ஆனால் யோவாசின் மகன் எரோபோவாமின் மூலம் அவர்களை மீட்டார்.
2 இராஜாக்கள் 14 : 28 (RCTA)
எரோபோவாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், போரில் அவன் காட்டிய வீரமும், யூதா நாட்டுடன் இருந்த தமாஸ்து, ஏமாத் நகர்களையும் இஸ்ராயேல் நாட்டுடன் மீண்டும் இணைத்துக் கொண்ட விதமும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 14 : 29 (RCTA)
எரோபோவாம் தன் முன்னோரான இஸ்ராயேல் அரசர்களோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் சக்கரியாசு அரசாண்டான்.
❮
❯