2 இராஜாக்கள் 12 : 1 (RCTA)
ஏகு ஆட்சி புரிந்த ஏழாம் ஆண்டில் யோவாசு அரியணை ஏறி யெருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெத்சாபே ஊராளாகிய அவனுடைய தாயின் பெயர் சேபியா.
2 இராஜாக்கள் 12 : 2 (RCTA)
குரு யோயியாதா யோவாசுக்கு அறிவுரை கூறி வந்த நாளெல்லாம் அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.
2 இராஜாக்கள் 12 : 3 (RCTA)
ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அங்கே பலியிட்டுக் கொண்டும் தூபங்காட்டிக் கொண்டும் இருந்தனர்.
2 இராஜாக்கள் 12 : 4 (RCTA)
யோவாசு குருக்களை நோக்கி, "வழிப்போக்கர்கள் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகிற பணத்தையும், ஒருவனுடைய மீட்புக்காகக் கொடுக்கப்படுகிற பணத்தையும், மக்கள் தமது விருப்பப்படி கொண்டு வருகிற பணத்தையும்,
2 இராஜாக்கள் 12 : 5 (RCTA)
குருக்கள் தத்தம் வரிசைப்படி பெற்று அவற்றைக் கொண்டு தேவைப்பட்ட இடங்களையெல்லாம் பழுது பார்ப்பார்களாக" என்றான்.
2 இராஜாக்கள் 12 : 6 (RCTA)
ஆயினும் யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டு வரை குருக்கள் ஆலயத்தைப் பழுது பார்க்கவில்லை.
2 இராஜாக்கள் 12 : 7 (RCTA)
எனவே யோவாசு அரசன் பெரிய குருவையும் குருக்களையும் வரவழைத்து, அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கிறதில்லை? நீங்கள் வரிசைப்படி பெற்று வந்த பணத்தை இனி மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது. அதை ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காகச் செலுத்துங்கள்" என்றான்.
2 இராஜாக்கள் 12 : 8 (RCTA)
அதுமுதல் குருக்கள் மக்களின் கையினின்று பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஆலயத்தைப் பழுது பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது.
2 இராஜாக்கள் 12 : 9 (RCTA)
பெரிய குரு யோயியாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, அதை ஆலயத்தில் நுழைபவர்கட்கு வலப்பக்கமாகப் பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காத்து வந்த குருக்கள் ஆண்டவரின் ஆலயத்துக்கு வரும் பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.
2 இராஜாக்கள் 12 : 10 (RCTA)
அப்பணப் பெட்டியில் அதிகம் பணம் சேர்ந்து விட்டது என்று கண்டால், அரசனுடைய கணக்கனும் பெரிய குருவும் வந்து ஆலயத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொட்டி எண்ணுவார்கள்.
2 இராஜாக்கள் 12 : 11 (RCTA)
எண்ணி முடிந்த பின் அதை ஆலயத்துக் கொத்தர்களின் தலைவர்களிடம் ஒப்படைப்பர். அப்பணம் ஆலயத்தைப் பழுது பார்க்கும் கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும்,
2 இராஜாக்கள் 12 : 12 (RCTA)
கல் வெட்டுபவர்களுக்கும், மரங்களையும் பொளிந்த கற்களையும் வாங்குவதற்கும், இவ்வாறாக ஆலயத்தைப் பழுது பார்த்து முடிக்க ஆகும் எல்லாச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
2 இராஜாக்கள் 12 : 13 (RCTA)
ஆயினும் அது ஆலயத்திற்குத் தேவையான பாத்திரங்கள், முட்கரண்டிகள், தூபக்கலசங்கள், எக்காளங்கள், பொன், வெள்ளிக் கிண்ணங்கள் முதலியவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படவில்லை.
2 இராஜாக்கள் 12 : 14 (RCTA)
ஆலயத்தைப் புதுப்பிக்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மட்டுமே அப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
2 இராஜாக்கள் 12 : 15 (RCTA)
கூலியாட்களுக்குக் கொடுக்கும்படி பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கப் பட வில்லை. இவர்கள் கபடில்லாமல் உண்மையுடன் செலவிட்டு வந்தார்கள்.
2 இராஜாக்கள் 12 : 16 (RCTA)
குற்றத்திற்கும் பாவத்திற்கும் பரிகாரமாகக் கொடுக்கப்படும் பணம் ஆலயக் கருவூலத்தில் சேர்க்கப் படவில்லை. ஏனெனில், அது குருக்களுக்குச் சேரவேண்டியதாயிருந்தது.
2 இராஜாக்கள் 12 : 17 (RCTA)
சீரியா நாட்டு அரசன் அசாயேல் கேத் நகரோடு போரிட்டு அதைப் பிடித்தான். பின்பு அங்கிருந்து அவன் யெருசலேமைப் பிடிக்கப் புறப்பட்டு வந்தான்.
2 இராஜாக்கள் 12 : 18 (RCTA)
ஆதலால் யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோராகிய யோசபாத், யோராம், ஒக்கோசியாசு என்ற யூத அரசர்களாலும், தன்னாலும் ஆண்டவருக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்த யாவற்றையும், ஆலயத்துக் கருவூலங்களிலிருந்தும் அரண்மனையிலிருந்தும் கிடைத்த எல்லாப் பணத்தையும் எடுத்துச் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு அனுப்பி வைத்தான். அவனும் யெருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.
2 இராஜாக்கள் 12 : 19 (RCTA)
யோவாசு அரசனின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசர்களுடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 12 : 20 (RCTA)
யோவாசின் பணியாளர்கள் அவனுக்கு எதிராய் எழுந்து, தங்களுக்குள் சதிசெய்து, செல்லா என்ற இறக்கத்திலிருந்த மெல்லோ அரண்மனையில் அவனைக் கொன்றனர்.
2 இராஜாக்கள் 12 : 21 (RCTA)
அவனைக் கொன்றவர்கள் செமகாத்தின் மகன் யோசக்காரும், சோமரின் மகன் யோசபாத் என்ற அவனுடைய ஊழியனுமாகும். இறந்துபோன அவனைத் தாவீதின் நகரில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுக்குப்பின் அவனுடைய மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21