2 கொரிந்தியர் 4 : 1 (RCTA)
அதனால்தான் இறைவனின் இரக்கத்தால் இந்தத் திருப்பணியைப் பெற்றிருக்கும் நாங்கள் உள்ளம் தளராதிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4 : 2 (RCTA)
மறைவாக மக்கள் செய்யும் இழிவான செயல்களை வெறுத்துவிட்டோம்; எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை; கடவுள் வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; உண்மையை வெளிப்படுத்துவது தான் எங்களைப்பற்றி நாங்கள் தரும் நற்சான்று இதுவே கடவுள் முன்னிலையில் நல்ல மனச்சாட்சியுள்ள மனிதர் அனைவருக்கும் நாங்கள் தரும் சான்று.
2 கொரிந்தியர் 4 : 3 (RCTA)
நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி சிலருக்கு இன்னும் மறைபட்டாதாய் உள்ளதென்றால், அழிவுறுவோர்க்கே அது மறைபட்டுள்ளது.
2 கொரிந்தியர் 4 : 4 (RCTA)
கடவுளது சாயலான கிறிஸ்துவினுடைய மாட்சிமை விளங்கும் நற்செய்தியின் ஒளியை அவர்கள் பார்க்காதபடி இவ்வுலகத்தின் தெய்வம் விசுவாசமற்றவர்களின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.
2 கொரிந்தியர் 4 : 5 (RCTA)
நாங்கள் தூதுரைப்பது எங்களைப்பற்றியன்று, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனத் தூதுரைக்கிறோம். நாங்களோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்களே.
2 கொரிந்தியர் 4 : 6 (RCTA)
ஏனெனில், ' இருளினின்று ஒளி சுடர்க ' என்று சொன்ன கடவுள்தாமே கிறிஸ்துவின் முகத்தில் வீசிய இறைமாட்சிமையின் அறிவொளி மிளிரும்படி, எங்கள் உள்ளங்களிலும் ஒளி சுடரச் செய்தார்.
2 கொரிந்தியர் 4 : 7 (RCTA)
ஆயினும், இணையற்ற இவ்வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, கடவுளுக்கே உரியது என்று விளங்கும்படி, இந்தச் செல்வத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் வெறும் மட்கலங்களாகவே இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4 : 8 (RCTA)
எல்லாவகையிலும் வேதனையுறுகிறோம்; ஆனால், ஒடுங்கிபோவதில்லை. மனக்கலக்கம் அடைகிறோம்; ஆனால், மனம் உடைவதில்லை.
2 கொரிந்தியர் 4 : 9 (RCTA)
துன்புறுத்தப்படுகிறோம்; 'ஆயினும், இறைவனால் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்படுகிறோம்; ஆனால், அழிவுறுவதில்லை.
2 கொரிந்தியர் 4 : 10 (RCTA)
இயேசுவின் வாழ்வு எங்கள் உடலில் வெளிப்படும்படி, போகுமிடமெல்லாம் இயேசுவின் மரணப்பாடுகளைத் தாங்கிச் செல்கிறோம்.
2 கொரிந்தியர் 4 : 11 (RCTA)
ஏனெனில், இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் ஊனுடலில் வெளிப்படும்படி, உயிரோடிருக்கும்போதே இயேசுவுக்காக நாங்கள் எந்நேரமும் சாவுக்குக் கையளிக்கப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 4 : 12 (RCTA)
இவ்வாறு எங்களுள் சாவும், உங்களுள் வாழ்வும் செயலாற்றுகிறது.
2 கொரிந்தியர் 4 : 13 (RCTA)
' விசுவசித்தேன், ஆகவே பேசினேன் ' என்று எழுதியுள்ளபடி, அதே விசுவாச மனப்பான்மை கொண்டிருக்கும் நாங்களும் விசுவசிக்கிறோம், ஆகவே பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 4 : 14 (RCTA)
ஆண்டவராகிய இயேசுவை உயிர்ப்பித்தவர், எங்களை இயேசுவோடு உயிர்ப்பித்துத் தம் திருமுன் கொணர்ந்து நிறுத்துவார் என அறிந்திருக்கிறோம்; அவ்வாறே உங்களையும் நிறுத்துவார்.
2 கொரிந்தியர் 4 : 15 (RCTA)
இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே. அதனால் மக்களிடையே இறையருள் பெருகப்பெருக, கடவுளின் மகிமைக்காகப் பலருடைய உள்ளத்தில் நன்றியறிதலும் பெருகும்.
2 கொரிந்தியர் 4 : 16 (RCTA)
ஆகவே நாங்கள் உள்ளம் தளர்வதில்லை; ஆனால், எங்கள் புறவுடலைச் சார்ந்தது அழிந்த வண்ணமாய் இருந்தாலும், உள் மனம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 4 : 17 (RCTA)
நாம் படும் வேதனை அற்பமானது, நொடிப் பொழுதே நீடிப்பது; ஆயினும் அது நம்மில், அளவிடமுடியாத நித்திய மாட்சிமையை ஒப்புயர்வற்ற வகையில் விளைவிக்கிறது.
2 கொரிந்தியர் 4 : 18 (RCTA)
ஆனால், காண்பவற்றை அல்ல, காணாதவற்றையே நோக்கியவண்ணமாய் நாம் வாழ்தல் வேண்டும்; ஏனெனில், காண்பவை நிலையற்றவே; காணாதவை முடிவற்றவை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18