2 கொரிந்தியர் 3 : 1 (RCTA)
மறுபடியும் எங்களைப்பற்றி நாங்களே நற்சான்று கூறத்தொடங்குகிறோமா? அல்லது நற்சான்றுக் கடிதங்கள் சிலருக்குத் தேவையாய் இருப்பதுபோல் அத்தகைய கடிதங்களை உங்களிடம் காட்டவோ, உங்களிடமிருந்து பெறவோ வேண்டிய தேவை எங்களுக்கு உண்டா?
2 கொரிந்தியர் 3 : 2 (RCTA)
நீங்களே எங்களுடைய நற்சான்றுக் கடிதம்; அது எங்கள் உள்ளங்களில் பொறிக்கப்பட்டுள்ளது; இதை எல்லா மனிதரும் பார்க்கவும் படிக்கவும் கூடும்.
2 கொரிந்தியர் 3 : 3 (RCTA)
எங்கள் ஊழியத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. எழுதியதோ மையினாலன்று, உயிருள்ள கடவுளின் ஆவியினாலே; கற்பலகையில் அன்று, உங்கள் உள்ளங்களாகிய உயிர்ப் பலகைகளிலேயே எழுதப்பட்டது.
2 கொரிந்தியர் 3 : 4 (RCTA)
இத்தகைய நம்பிக்கையே நாங்கள் கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்மேல் வைத்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 3 : 5 (RCTA)
நாங்களே செய்துவிட்டது போல எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ளும் தகுதி எங்களுக்கு இல்லை; எங்கள் தகுதியுடைமை கடவுளிடமிருந்தே வருகிறது.
2 கொரிந்தியர் 3 : 6 (RCTA)
அவரே எங்களுக்குப் புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைத் தந்தார்: அந்த உடன்படிக்கையோ எழுதிய சட்டத்தைச் சார்ந்ததன்று; ஆவியானவரையே சார்ந்தது. ஏனெனில், எழுதிய சட்டம் விளைப்பது சாவு, ஆவியானவர் அளிப்பதோ வாழ்வு.
2 கொரிந்தியர் 3 : 7 (RCTA)
கற்களில் எழுத்துக்களால் வரையப்பட்ட அச்சட்டத்தோடு பொருந்திய திருப்பணி சாவை விளைப்பதாய் இருந்தும், அத்திருப்பணி இறைமாட்சிமை சூழ அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அந்த மாட்சிமை மோயீசன் முகத்தில் எவ்வளவு ஒளி வீசிற்றென்றால், இஸ்ராயேல் மக்கள் அவர் முகத்தை உற்றுப் பார்க்கவும் இயலவில்லை.
2 கொரிந்தியர் 3 : 8 (RCTA)
அத்தகைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்ததென்றால், ஆவியின் திருப்பணியை இன்னும் எவ்வளவு மாட்சிமை சூழவேண்டும்!
2 கொரிந்தியர் 3 : 9 (RCTA)
ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!
2 கொரிந்தியர் 3 : 10 (RCTA)
உள்ளபடி அன்றைய மாட்சிமையை இவ்வளவு மேன்மையுள்ள இன்றைய மாட்சிமையோடு ஒப்பிட்டால் அது மாட்சிமையே அன்று.
2 கொரிந்தியர் 3 : 11 (RCTA)
ஏனெனில், மறையப்போவது மாட்சிமையினிடையே தோன்றியதென்றால், நிலைத்திருக்கப்போவது இன்னும் எவ்வளவோ மாட்சிமையோடு விளங்க வேண்டும்!
2 கொரிந்தியர் 3 : 12 (RCTA)
இத்தகைய நம்பிக்கைகொண்ட நாங்கள் மிக்க துணிவோடு இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 3 : 13 (RCTA)
மறைந்து போகும் மகிமையொளி மங்கி அணைவதை இஸ்ராயேல் மக்கள் உற்றுப் பார்க்காதபடி தம் முகத்தை மூடிக்கொண்ட மோயீசனைப் போல் நாங்கள் செய்வதில்லை...
2 கொரிந்தியர் 3 : 14 (RCTA)
அவர்களின் அறிவுப்புலன் மழுங்கிப் போயிற்று. ஆம், இன்று வரை, அவர்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது, அதே முகத்திரை இன்னும் எடுபடாமலே இருக்கிறது; கிறிஸ்துவில்தான் அது மறைந்தொழியும்.
2 கொரிந்தியர் 3 : 15 (RCTA)
உண்மைதான், இன்று வரை, மோயீசன் எழுதியதைப் படிக்கும்போதெல்லாம், அவர்களுடைய மனத்தின் மீது திரை ஒன்று கிடக்கிறது.
2 கொரிந்தியர் 3 : 16 (RCTA)
"ஆண்டவர்பால் திரும்பினால்தான் அந்த மூடு திரை அகற்றப்படும்."
2 கொரிந்தியர் 3 : 17 (RCTA)
ஆண்டவர் என்றது ஆவியானவரைத்தான்; ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ அங்கு விடுதலை உண்டு.
2 கொரிந்தியர் 3 : 18 (RCTA)
இப்பொழுது நாமனைவரும் மூடு திரையில்லா முகத்தினராய், ஆண்டவரின் மாட்சிமையைக் கண்ணாடிபோல் காட்டுகிறோம். அதனால் மேன்மேலும் மாட்சிமை ஒளி பெற்று. அதன் சாயலாகவே உருமாற்றம் அடைகிறோம்; இவையெல்லாம் ஆவியாகிய ஆண்டவரின் செயலே.
❮
❯