2 கொரிந்தியர் 1 : 1 (RCTA)
கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கும், அக்காயா முழுவதிலுமுள்ள இறை மக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும் சகோதரனான தீமோத்தேயுவும் எழுதுவது:
2 கொரிந்தியர் 1 : 2 (RCTA)
நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகுக.
2 கொரிந்தியர் 1 : 3 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள்.
2 கொரிந்தியர் 1 : 4 (RCTA)
அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.
2 கொரிந்தியர் 1 : 5 (RCTA)
ஏனெனில், கிறிஸ்துவின் பாடுகள் எங்கள் வாழ்வில் மிகுந்திருப்பது போல், கிறிஸ்துவின் வழியாய் வரும் ஆறுதலும் மிகுந்திருக்கிறது.
2 கொரிந்தியர் 1 : 6 (RCTA)
நாங்கள் வேதனைக்குள்ளானால், அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவுமே; நாங்கள் ஆறுதல் அடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் படும் அதே பாடுகளை நீங்களும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளவே அந்த ஆறுதல் செயலாற்றுகிறுது.
2 கொரிந்தியர் 1 : 7 (RCTA)
ஆகவே, உங்களைப்பற்றி எங்களுக்குள்ள நம்பிக்கை உறுதியாய் உள்ளது; ஏனெனில், பாடுகளில் நீங்கள் பங்குபெறுவது போலவே ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் என்று அறிவோம்.
2 கொரிந்தியர் 1 : 8 (RCTA)
ஏனெனில், சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு நேர்ந்த வேதனை உங்களுக்குத் தெரியுமன்றோ? அது எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டியது; எங்களால் தாங்கமுடியாத சுமையாயிற்று; இனி பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமற் போயிற்று; இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறோம்.
2 கொரிந்தியர் 1 : 9 (RCTA)
சாகவேண்டுமென்ற தீர்ப்பு கிடைத்துவிட்டது போலவே மனத்தில் நினைத்துக்கொண்டோம். ஆனால், நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இறந்தோரை உயிர்ப்பிக்கும் கடவுள் ஒருவர்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டுமென உணரவே இவ்வாறு நிகழ்ந்தது.
2 கொரிந்தியர் 1 : 10 (RCTA)
அவரே எங்களை இத்துணை அச்சத்துக்குரிய சாவினின்று விடுவித்தார்; இனிமேலும் விடுவிப்பார்.
2 கொரிந்தியர் 1 : 11 (RCTA)
ஆம் நீங்களும் எங்களுக்காக வேண்டுதல் செய்து, துணை புரிந்தால், இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவர்மேல் வைத்திருக்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்கென மன்றாடி, இந்த வரத்தைப் பெறும்பொழுது அதற்காகப் பலரும் எங்கள் சார்பில் நன்றி செலுத்துவர்.
2 கொரிந்தியர் 1 : 12 (RCTA)
மக்களிடையே, குறிப்பாக உங்களிடம் நாங்கள் உலக ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளையே பின்பற்றி, கடவுளிடமிருந்து வரும் நேர்மையோடும், கள்ளமற்ற உள்ளத்தோடும் நடந்து வருகிறோம் என எங்கள் மனச்சான்று சாட்சி பகர்கிறது;
2 கொரிந்தியர் 1 : 13 (RCTA)
அதுவே எங்கள் பெருமை, ஏனெனில், நாங்கள் எழுதும் கடிதங்களில் நீங்கள் படித்துக் கண்டுணர்வதைத் தவிர வேறெந்தப் பொருளும் மறைந்தில்லை.
2 கொரிந்தியர் 1 : 14 (RCTA)
இப்பொழுது எங்களைப்பற்றி உங்களுக்கு ஒரளவுதான் தெரியும்; ஆனால் நம் ஆண்டவராகிய இயேசுவின் நாளில், எப்படி நாங்கள் உங்களைப்பற்றி பெருமை பாராட்டிக்கொள்வோமோ, அப்படியே நீங்களும் எங்களைப் பற்றிப்பெருமை பாராட்டிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் முற்றிலும் தெரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
2 கொரிந்தியர் 1 : 15 (RCTA)
இந்த நம்பிக்கையால் தான் உங்களுக்கு இரட்டிப்பான நன்மை தரும்படியே முதலில் உங்களிடம் வர எண்ணம் கொண்டிருந்தேன்.
2 கொரிந்தியர் 1 : 16 (RCTA)
உங்கள் நகரத்துக்கு வந்து, அங்கிருந்து மக்கெதோனியாவுக்குப் போய், உங்கள் ஊருக்குத் திரும்பியிருப்பேன்; அப்போது நீங்கள் என்னை யூதேயாவுக்கு வழி அனுப்பியிருப்பீர்கள்.
2 கொரிந்தியர் 1 : 17 (RCTA)
இவ்வாறு திட்டமிட்டபோது நான் எண்ணிப்பாராமல் செய்தேனே? நான் திட்டமிடுவதை மனிதப் போக்கின்படி திட்டமிடுகிறேனோ? ஒரே சமயத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்பவனா நான்?
2 கொரிந்தியர் 1 : 18 (RCTA)
உங்களிடம் நான் பேசும்போது, ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை; உண்மையாம் கடவுளே இதற்குச் சாட்சி.
2 கொரிந்தியர் 1 : 19 (RCTA)
என் வழியாகவும், சில்வானு, தீமோத்தேயு வழியாகவும் உங்களிடையே அறிவிக்கப்பட்ட இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை. ஆம் என்பது ஒன்றே அவரிடம் இருந்து வருகிறது.
2 கொரிந்தியர் 1 : 20 (RCTA)
ஏனெனில், கடவுளின் வாக்குறுதிகள் யாவற்றுக்கும் ஆம் என்பதே அவரிடம் இருந்தது. ஆகையால் தான் நாம் கடவுளுக்குப் புகழுரை கூறும் பொழுது, அவர் வழியாகவே ' ஆமென் ' என்கிறோம்
2 கொரிந்தியர் 1 : 21 (RCTA)
உங்களையும் எங்களையும் கிறிஸ்துவின் ஒன்றிப்பில் உறுதிப்படுத்தி நம்மை அபிஷுகம் செய்தவர் கடவுளே.
2 கொரிந்தியர் 1 : 22 (RCTA)
அவரே நம்மீது தம் முத்திரையிட்டு நம் உள்ளங்களில் இருக்கும்படி ஆவியானவரை அச்சாரமாக அளித்தார்.
2 கொரிந்தியர் 1 : 23 (RCTA)
கடவுளைச் சாட்சியாகக் கூப்பிட்டு, என் உயிரின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்: உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கமலிருக்கவே இதுவரை நான் கொரிந்து நகருக்கு வரவில்லை.
2 கொரிந்தியர் 1 : 24 (RCTA)
விசுவாசத்தைப் பொருத்தமாட்டில், உங்கள்மேல் நாங்கள் அதிகாரம் காட்டுகிறோம் என்று எண்ணாதீர்கள்; விசுவாசத்தில் நீங்கள் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள்; உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களோடு ஒத்துழைக்கிறோம்.
❮
❯