2 நாளாகமம் 6 : 1 (RCTA)
அப்பொழுது சாலமோன், "மேகத்திரைக்குள் வாழ்வோம்' என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.
2 நாளாகமம் 6 : 2 (RCTA)
நானோ அவர் என்றென்றும் தங்கும்படி அவரது திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தை எழுப்பியுள்ளேன்" என்று சொன்னார்.
2 நாளாகமம் 6 : 3 (RCTA)
பின் மக்கள் பக்கம் திரும்பி அவர்கள் அனைவர்க்கும் ஆசீர் அளித்தார். அவர்கள் அனைவரும் சாலமோன் சொல்லவிருந்ததைக் கேட்கும்படி கவனமாய் இருந்தார்கள்.
2 நாளாகமம் 6 : 4 (RCTA)
அவர் சொன்னதாவது, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஏனெனில் அவர் என் தந்தை தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
2 நாளாகமம் 6 : 5 (RCTA)
அதாவது, 'நாம் எகிப்து நாட்டிலிருந்து நம் மக்களை மீட்டுக் கொணர்ந்த நாள்முதல், எமது திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தை எழுப்புமாறு நாம் இஸ்ராயேலின் யாதொரு நகரையும் தேர்ந்து கொள்ளவில்லை. நம் மக்கள் இஸ்ராயேலரை ஆள நாம் வேறு எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை.
2 நாளாகமம் 6 : 6 (RCTA)
நமது புகழ் விளங்கும் இடமாக யெருசலேமையும், எம் மக்கள் இஸ்ராயேலை ஆளத் தாவீதையுமே தேர்ந்து கொண்டோம்' என்பதாம்.
2 நாளாகமம் 6 : 7 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதிற்கு இருந்தது.
2 நாளாகமம் 6 : 8 (RCTA)
ஆண்டவர் அவரை நோக்கி, 'எம்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற உன் விருப்பம் போற்றற்குரிதே!
2 நாளாகமம் 6 : 9 (RCTA)
ஆனால் நீ அதைக் கட்டமாட்டாய். உனக்குப் பிறக்கும் உன் மகனே அதைக் கட்டுவான்' என்றார்.
2 நாளாகமம் 6 : 10 (RCTA)
இவ்வாறு தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்தது போல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ராயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டியுள்ளேன்.
2 நாளாகமம் 6 : 11 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைக் கொண்டுள்ள திருப்பேழையையும் இவ்வாலயத்தில் கொண்டு வந்து வைத்துள்ளேன்" என்றார்.
2 நாளாகமம் 6 : 12 (RCTA)
இவ்வாறு சாலமோன் ஆண்டவரின் பலி பீடத்திற்கு முன்பாக இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.
2 நாளாகமம் 6 : 13 (RCTA)
சாலமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலப் பிரசங்க மேடை ஒன்று செய்து அதை ஆலயத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன்மேல் அவர் நின்று கொண்டிருந்தார். பிறகு இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி,
2 நாளாகமம் 6 : 14 (RCTA)
மீண்டும் சொல்லத் தொடங்கினதாவது: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும் மண்ணிலும் உமக்கு இணையான இறைவன் இல்லை. முழு இதயத்தோடும் உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள் மேல் நீர் அன்பு கூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்.
2 நாளாகமம் 6 : 15 (RCTA)
என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இன்று செய்து விட்டீர்.
2 நாளாகமம் 6 : 16 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியானுமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். 'நீ நம் முன்னிலையில் நடந்து வந்துள்ளது போல், உன் மக்களும் நமது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ராயேலின் அரசு உன் சந்ததியை விட்டு என்றும் நீங்காது' என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ?
2 நாளாகமம் 6 : 17 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியருளும்.
2 நாளாகமம் 6 : 18 (RCTA)
கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்ணகங்களும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்த ஆலயம் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்?
2 நாளாகமம் 6 : 19 (RCTA)
என் கடவுளாகிய ஆண்டவரே, அடியேனுடைய விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டருளும். அடியேனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்தருளும்.
2 நாளாகமம் 6 : 20 (RCTA)
'நம் திருப்பெயர் மன்றாடப்படும்' என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின் மேல் இரவும் பகலும் உமது அருட் பார்வை இருக்கட்டும்.
2 நாளாகமம் 6 : 21 (RCTA)
உம் ஊழியனான நானும் உம் மக்களாகிய இஸ்ராயேலரும் இவ்விடத்தில் இப்போது செய்யும் விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தருளும். இதற்காகவே நான் இவ்வாலயத்தை கட்டினேன். இங்கு யார் வந்து மன்றாடினானலும், உமது உறைவிடமான விண்ணகத்திலிருந்து அவன் மேல் கருணை கூர்ந்து அவர்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2 நாளாகமம் 6 : 22 (RCTA)
தனக்குத் தீங்கு இழைத்த தன் அயலானை ஒருவன் சபித்து, ஆலய பீடத்தின் முன் அவனை ஆணையிடச் செய்தால்,
2 நாளாகமம் 6 : 23 (RCTA)
விண்ணிலிருக்கிற நீர் அதைக்கேட்டு, உம் அடியாருக்கு நீதி வழங்கும்; தீயவனுடைய நடத்தைக்கேற்ப, அவனுக்குத் தண்டனையும், குற்றமற்றவனின் மாசின்மைக்கேற்ப, அவனுக்கு வெகுமதியும் அளித்தருளும்.
2 நாளாகமம் 6 : 24 (RCTA)
உம் மக்களாகிய இஸ்ராயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால் தங்கள் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டு, உம் பக்கம் மனம் திரும்பித் தவம் புரிந்து, உமது திருப்பெயரைக் கூவியழைத்து இந்த ஆலயத்திலே உம்மை மன்றாட வந்தால்,
2 நாளாகமம் 6 : 25 (RCTA)
நீர் விண்ணிலிருந்து உம் மக்கள் இஸ்ராயேலரின் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்களின் முன்னோருக்கும் நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்கள் திரும்பச் செய்யும்.
2 நாளாகமம் 6 : 26 (RCTA)
மக்களின் பாவங்களுக்குத் தண்டனையாக வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும் போது, அவர்கள் உம்மை வேண்ட இவ்வாலயத்துக்கு வந்து உமது திருப் பெயரை ஏற்றுக்கொண்டு தங்கள் பாவ வழிகளை விட்டு மனந்திரும்புவார்களாகில்,
2 நாளாகமம் 6 : 27 (RCTA)
ஆண்டவரே, விண்ணிலிருந்து அதைக் கேட்டு உம் அடியார்களின் பாவங்களையும், உம் மக்கள் இஸ்ராயேலரின் பாவங்களையும் மன்னித்து, அவர்கள் நடக்க வேண்டிய நன்னெறியை அவர்களுக்குக் கற்பித்தருளும்; உம் மக்களுக்குச் சொந்தமாக நீர் கொடுத்த நாட்டில் மழை பெய்யக் கட்டளையிட்டருளும்.
2 நாளாகமம் 6 : 28 (RCTA)
நாட்டில் பஞ்சம், கொள்ளைநோய், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி முதலியன உண்டாகிற போதும், எதிரிகள் நாட்டைப் பாழாக்கி நகர்களைப் பிடிக்க முற்றுகையிடுகிற போதும், எவ்வித வாதையோ நோயோ வருகிற போதும்,
2 நாளாகமம் 6 : 29 (RCTA)
உம் மக்கள் இஸ்ராயேலரில் எவனாவது தன் வாதையையும் நோயையும் உணர்ந்து இவ்வாலயத்திற்கு வந்து, கைகளை விரித்து வேண்டினால்,
2 நாளாகமம் 6 : 30 (RCTA)
உமது உறைவிடமான விண்ணிலிருந்து அவனுக்குச் செவிமடுத்து அவனை மன்னித்தருளும். ஒவ்வொருவனுக்கும் அவனவன் நடத்தைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு செய்வீராக. ஏனெனில் நீர் ஒருவரே மனிதரின் உள்ளத்தை அறிகிறவர்!
2 நாளாகமம் 6 : 31 (RCTA)
நீர் இவ்வாறு செய்தால் அன்றோ அவர்கள் உமக்கு அஞ்சி, நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் தங்கள் வாழ்நாள் முழுவதும் உம் வழிகளில் நடப்பார்கள்?
2 நாளாகமம் 6 : 32 (RCTA)
உம் மக்களான இஸ்ராயேலர் அல்லாத புறவினத்தாருள் ஒருவன் உமது மாண்புமிகு பெயரைக் குறித்தும் உமது பேராற்றல், பரிவிரக்கத்தைக் குறித்தும் தொலை நாட்டிலிருந்து வந்து இந்த ஆலயத்தில் உம்மைத் தொழுது மன்றாடினால்,
2 நாளாகமம் 6 : 33 (RCTA)
உமது நிலையான உறைவிடமான விண்ணிலிருந்து அவன் மன்றாட்டுக்குச் செவிகொடுத்து அவன் கேட்பதையெல்லாம் கொடுத்தருளும். இதனால் உலக மக்கள் அனைவரும் உம் திருப்பெயரை அறிந்து, உம் மக்கள் இஸ்ராயேலரைப் போல் அவர்களும் உமக்கு அஞ்சி நடப்பர். இவ்வாறு நான் கட்டியுள்ள இந்த ஆலயத்தில் உமது திருப்பெயரே கூவி அழைக்கப்படுகிறது என்று அவர்கள் அறியும்படி செய்தருளும்.
2 நாளாகமம் 6 : 34 (RCTA)
உம் மக்கள் நீர் காட்டின வழியிலே நடந்து தங்கள் எதிரிகளோடு போரிடச் செல்லும் போது, நீர் தேர்ந்து கொண்ட இந்நகருக்கும், உமது திருப்பெயருக்கு நான் கட்டியுள்ள இவ்வாலயத்துக்கும் நேராக நின்று அவர்கள் உம்மைத் தொழுது மன்றாடினால்,
2 நாளாகமம் 6 : 35 (RCTA)
நீர் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதல்களையும் ஏற்று, அவர்களுக்கு நீதி செலுத்தியருளும்.
2 நாளாகமம் 6 : 36 (RCTA)
பாவம் செய்யாத மனிதனே இல்லை. ஆதலால் ஒருவேளை அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தாலும் அதன்பொருட்டு நீர் அவர்கள் மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளின் கையில் ஒப்புவிக்க எதிரிகள் அவர்களைச் சிறைபிடித்து, அண்மையிலோ சேய்மையிலோ இருக்கிற நாட்டிற்குக் கொண்டு போனால்,
2 நாளாகமம் 6 : 37 (RCTA)
தாங்கள் சிறையிருக்கும் நாட்டில் மனம் திரும்பித் தவம் புரிந்து அங்கேயே உம்மை நோக்கி, 'நாங்கள் பாவம் செய்தோம்; அக்கிரமம் புரிந்தோம்; அநீதியாய் நடந்ததோம்' என்று சொல்லி,
2 நாளாகமம் 6 : 38 (RCTA)
தங்கள் முழு இதயத்தோடும் முழு மனத்தோடும் உம்மை நோக்கி மன்றாடினாலும், நீர் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டின் திசையை நோக்கியாகிலும், நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், நான் உமது திருப்பெயருக்குக் கட்டியுள்ள இந்த ஆலயத்திற்கும் நேராகவுமாகிலும் நின்று உம்மைத் தொழுது வேண்டிக்கொண்டாலும்,
2 நாளாகமம் 6 : 39 (RCTA)
நீர் உமது நிலையான உறைவிடமான விண்ணிலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்களுக்கு நீதி வழங்கியருளும். பாவிகளான உம் மக்களை மன்னித்தருளும்.
2 நாளாகமம் 6 : 40 (RCTA)
நீரே என் கடவுள். எனவே இவ்வாலயத்தில் மன்றாடுவோர் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பி அவர் தம் மன்றாட்டிற்குச் செவிகொடுத்தருளும்.
2 நாளாகமம் 6 : 41 (RCTA)
கடவுளாகிய ஆண்டவரே, எழுந்தருளும்! உமது உறைவிடத்திற்கு வந்தருளும்! உமது பேராற்றல் விளங்கும் உம் திருப்பேழையும் எழுந்து வரட்டும்! கடவுளான ஆண்டவரே, உம் குருக்கள் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ளட்டும். உம் புனிதர்கள் நன்மைகள் பெற்று மகிழட்டும்.
2 நாளாகமம் 6 : 42 (RCTA)
கடவுளாகிய ஆண்டவேர, நீர் அபிஷுகம் செய்துள்ள என்னைப் புறக்கணியாதேயும். உம் ஊழியன் தாவீதுக்கு நீர் காட்டின கருணையை நினைவுகூர்ந்தருளும் என்று மன்றாடினார்.
❮
❯