2 நாளாகமம் 35 : 1 (RCTA)
யோசியாஸ் யெருசலேமில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினான். முதன் மாதம் பதினான்காம் நாள் பாஸ்கா பலியிடப்பட்டது.
2 நாளாகமம் 35 : 2 (RCTA)
அவன் குருக்களுக்கு அலுவல்களைப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி புரியுமாறு அவர்களை ஊக்குவித்தான்.
2 நாளாகமம் 35 : 3 (RCTA)
மேலும் இஸ்ராயேலர் அனைவருக்கும் போதித்து வந்தவர்களும், ஆண்டவரின் பரிசுத்தர்களாய் விளங்கி வந்தவர்களுமான லேவியர்களைப் பார்த்து நற்புத்தி சொன்னான். "நீங்கள் உடன்படிக்கைப் பேழையை இஸ்ராயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியுள்ள ஆலயத்தின் திருவிடத்தில் வையுங்கள். இனி அதை எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை; இப்போது நீங்கள் உங்கள் கடவுளான ஆண்டவருக்கும், அவருடைய மக்களான இஸ்ராயேலருக்கும் ஊழியம் செய்யுங்கள்.
2 நாளாகமம் 35 : 4 (RCTA)
இஸ்ராயேலின் அரசராகிய தாவீதும் அவருடைய மகன் சாலமோனும் எழுதிக் கொடுத்துள்ளவாறு வம்சம் வம்சமாகவும், பிரிவு பிரிவாகவும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
2 நாளாகமம் 35 : 5 (RCTA)
நீங்கள் உங்கள் சகோதரராகிய மற்ற இஸ்ராயேலரின் வம்சப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு பிரிவுக்குப் பிரிவு திருவிடத்தில் நில்லுங்கள்.
2 நாளாகமம் 35 : 6 (RCTA)
பாஸ்காவைப் பிலியிட்டு உங்களைத் தூய்மைப்படுத்துங்கள்; மேலும் மோயீசன் வழியாக ஆண்டவர் சொல்லியருளியபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி அவர்களைத் தயார் செய்யுங்கள்" என்றான்.
2 நாளாகமம் 35 : 7 (RCTA)
பின்னர் அங்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் பாஸ்காப் பலிக்காக முப்பதினாயிரம் செம்மறிக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும் அரசன் யோசியாஸ் தன் உடைமையிலிருந்து கொடுத்தான்.
2 நாளாகமம் 35 : 8 (RCTA)
அவனுடைய அலுவலரோ மக்களும் குருக்களும் லேவியர்களும் செலுத்த வேண்டிய காணிக்கைப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து உதவினர். எல்கியாஸ், சக்கரியாஸ், யாகியேல் என்ற ஆண்டவரின் ஆலய மேற்பார்வையாளர்கள் குருக்களுக்குப் பாஸ்காப் பலிக்கென இரண்டாயிரத்து அறுநூறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும் காளைகளையும் கொடுத்தனர்.
2 நாளாகமம் 35 : 9 (RCTA)
மேலும் கொனேனியாசும் செமேயாசும் நத்தானியேலும் இவனுடைய சகோதரர்களும், அசாபியாஸ், ஏகியேல், யோசபாத் என்ற லேவியர் தலைவர்களும் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் லேவியருக்குக் கொடுத்தனர்.
2 நாளாகமம் 35 : 10 (RCTA)
இவ்வாறு வழிபாட்டிற்குத் தேவையான அனைத்தும் தயாராயின. அரசனின் கட்டளைப்படியே குருக்களும் லேவியரும் தத்தம் பிரிவுகளின்படி திருப்பணி புரிந்து வந்தனர்.
2 நாளாகமம் 35 : 11 (RCTA)
அவர்கள் பாஸ்காச் செம்மறியை அறுத்தனர். குருக்கள் தங்கள் கையாலேயே இரத்தத்தைத் தெளித்தனர். லேவியர்களோ தகனப்பலி மிருகங்களைத் தோலுரித்தனர்.
2 நாளாகமம் 35 : 12 (RCTA)
மோயீசனின் நூலில் எழுதப்பட்டிருக்கிறபடி மக்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தும்படி, தகனப் பலிப் பொருளைப் பல பாகங்களாகப் பிரித்து அவற்றைக் குடும்ப வரிசைப்படி கொடுத்தனர். காளைகளையும் அவ்வாறே செய்தனர்.
2 நாளாகமம் 35 : 13 (RCTA)
பாஸ்காச் செம்மறி திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கிறபடி தீயில் பொரிக்கப்பட்டது. சமாதானப் பலி மிருகங்களையோ அவர்கள் கொப்பரைகளிலும் பானைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்கள் அனைவருக்கும் விரைவாய் பரிமாறினார்கள்.
2 நாளாகமம் 35 : 14 (RCTA)
பின் தங்களுக்காகவும் குருக்களுக்காகவும் பாஸ்காவைத் தயார்ப்படுத்தினர். ஏனெனில், குருக்கள் தகனப் பலிகளையும் கொழுப்பையும் ஒப்புக்கொடுப்பதில் இரவு வரை ஈடுபட்டிருந்தனர். எனவே லேவியர் கடைசியில் தாங்களும், ஆரோனின் புதல்வரான குருக்களும் உண்ணும்படி பாஸ்காவைத் தயாரித்தனர்.
2 நாளாகமம் 35 : 15 (RCTA)
மேலும், தாவீதின் கட்டளைப்படியும், ஆசாப், ஏமான், இதித்தூன் என்ற அரசரின் இறைவாக்கினர்களின் கட்டளைப்படியும் ஆசாப்பின் புதல்வரான பாடகர்கள் தத்தம் பிரிவுப்படி நின்றனர். வாயிற்காவலர் ஒவ்வொரு வாயிலிலும் நின்று காவல்புரிந்தனர். இவர்கள் தங்கள் வேலையை விட்டுவர அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்களின் சகோதரரான லேவியர்கள் அவர்களுக்காகவும் பாஸ்காவைத் தயாரித்து வைத்திருந்தனர்.
2 நாளாகமம் 35 : 16 (RCTA)
இவ்வாறு அரசன் யோசியாஸ் கட்டளைப்படி, பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடவும், ஆண்டவரின் பலிபீடத்தில் தகனப்பலிகளைச் செலுத்தவும் வேண்டிய வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஒழுங்காக ஏற்பாடு செய்யப்படன.
2 நாளாகமம் 35 : 17 (RCTA)
ஆதலால் அங்கே வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவையும் புளியாத அப்பத் திருவிழாவையும் ஏழு நாள் வரை கொண்டாடினர்.
2 நாளாகமம் 35 : 18 (RCTA)
இறைவாக்கினர் சாமுவேல் காலம் முதல் இஸ்ராயேலில் இவ்வாறு பாஸ்காத் திருவிழா கொண்டாடப் பட்டதில்லை. மேலும் குருக்கள், லேவியர், யூதா மக்கள், இஸ்ராயேல் மக்கள், யெருசலேம் நகர மக்கள், ஆகிய அனைவரோடும் சேர்ந்து யோசியாஸ் கொண்டாடின இப்பாஸ்காவைப் போல் வேறு எந்த இஸ்ராயேல் அரசனும் இதற்கு முன் கொண்டாடியது இல்லை.
2 நாளாகமம் 35 : 19 (RCTA)
யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அப் பாஸ்காத் திருவிழா கொண்டாடப்பட்டது.
2 நாளாகமம் 35 : 20 (RCTA)
யோசியாஸ் கடவுளின் ஆலயத்தைச் செப்பனிட்ட பிறகு, எகிப்திய அரசன் நெக்காவோ யூப்ரட்டீஸ் நதி தீரத்திலிருந்த கர்கமீஸ் நகர் மேல் படையெடுத்து வந்தான். யோசியாஸ் அவனோடு போரிடப் புறப்பட்டான்.
2 நாளாகமம் 35 : 21 (RCTA)
அவனோ இவனிடம் தூதரை அனுப்பி, "யூதாவின் அரசே, உமக்கும் எனக்கும் பகை ஒன்றுமில்லை. நான் உம்மை எதிர்த்து வரவில்லை; வேறொருவனோடு போரிடவே வந்துள்ளேன். நான் உடனே செய்ய வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. கடவுள் என்னோடு இருப்பதால் நீர் அவரை எதிர்த்து நிற்க வேண்டாம். இல்லாவிடில், அவர் உம்மைக் கொன்று விடுவார்" என்று சொல்லச் சொன்னான்.
2 நாளாகமம் 35 : 22 (RCTA)
எனினும் யோசியாஸ் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நெக்காவோ மூலம் கடவுள் உரைத்திருந்த வார்த்தைக்கு அவன் செவி கொடாது, அவனுடன் போரிட ஆயத்தம் செய்தான்; மக்கெதோ என்ற சமவெளியில் அவனோடு போரிட்டான்.
2 நாளாகமம் 35 : 23 (RCTA)
அப்போரில் அவன் வில் வீரரால் காயம் அடைந்தான். அப்பொழுது அவன் தன் ஊழியரைப் பார்த்து, "நான் பெரிதும் காயம் அடைந்துள்ளேன். எனவே என்னைப் போர்க்களத்திற்கு வெளியே கொண்டு போங்கள்" என்றான்.
2 நாளாகமம் 35 : 24 (RCTA)
அவர்கள் அவனை அவனுடைய தேரிலிருந்து இறக்கி மற்றொரு தேரின் மேல் ஏற்றி யெருசலேமுக்குக் கொண்டு போனார்கள். அவன் அங்கே இறந்து தன் மூதாதையரின் கல்லறையில் புதைக்கப்பட்டான். யூதாவிலும் யெருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.
2 நாளாகமம் 35 : 25 (RCTA)
எரெமியாஸ் யோசியாசின் மீது ஒரு புலம்பல் பாடினார். அப் புலம்பலையே இன்று வரை பாடகர் பாடகிகள் அனைவரும் பாடி வருகின்றனர். இது இஸ்ராயேலில் வழக்கமாகி விட்டது. இது (எரெமியாசின்) புலம்பல் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.
2 நாளாகமம் 35 : 26 (RCTA)
யோசியாசின் மற்றச் செயல்களும் ஆண்டவரின் திருச்சட்டத்திற்கு ஏற்ப அவன் செய்த நற்செயல்களும்,
2 நாளாகமம் 35 : 27 (RCTA)
அவனது வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
❮
❯