2 நாளாகமம் 32 : 1 (RCTA)
இவை ஒழுங்காய் நடந்தேறிய பின், அசீரிய அரசன் சென்னாக்கெரீப் யூதா மேல் படையெடுத்து வந்து அரணுள்ள நகர்களை முற்றுகையிட்டான்.
2 நாளாகமம் 32 : 2 (RCTA)
சென்னாக்கெரீப் யெருசலேம் மீது படையெடுத்து வரவிருந்ததை எசெக்கியாஸ் அறிய வந்தான்.
2 நாளாகமம் 32 : 3 (RCTA)
உடனே நகருக்கு வேளியே இருந்த நீரூற்றுகளைத் தூர்த்துப் போடுவது பற்றித் தன் அலுவலர்களோடும் ஆற்றல் படைத்த மனிதரோடும் ஆலோசனை செய்தான். அவர்களும் அதற்கு இணங்கினர்.
2 நாளாகமம் 32 : 4 (RCTA)
எனவே திரளான மக்களைக்கூட்டி, நாட்டின் நீரூற்றுகளையும் ஓடைகளையும் தூர்த்துப் போட்டான். அசீரியர் வரும்போது அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடாது என்பதே அவன் எண்ணம்.
2 நாளாகமம் 32 : 5 (RCTA)
மேலும் எசெக்கியாஸ் முன்பு இடிந்திருந்த மதிலையெல்லாம் கவனமாய்ப் பழுது பார்த்து அதன் மேல் கொத்தளங்களையும், அதைச்சுற்றி மற்றொரு மதிலையும் எழுப்பினான். அதுவுமன்றி, தாவீதின் நகரில் மெல்லோ என்னும் கோட்டையையும் பழுது பார்த்துத் திரளான ஆயுதங்களையும் கேடயங்களையும் தயாரித்து வைத்தான்.
2 நாளாகமம் 32 : 6 (RCTA)
பின் படைவீரர்களுக்குத் தலைவர்களை நியமித்து அவர்களை நகரவாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்று திரட்டினான்.
2 நாளாகமம் 32 : 7 (RCTA)
அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; மனத்தைரியமாய் இருங்கள். அசீரிய அரசனுக்கும் அவனது பெரும்படைக்கும் நீங்கள் அஞ்சவோ நிலை கலங்கவோ கூடாது. ஏனெனில் அவனது படையை விட நமது படையே பெரிது.
2 நாளாகமம் 32 : 8 (RCTA)
அதாவது, அவனுக்கு உதவியாயிருக்கிறது தசைத்தோள் மட்டுமே. நமக்கோ நம் கடவுளாகிய ஆண்டவரே துணை. அவரே நமக்காகப் போரிடுவார்" என்றான். மக்கள் யூதாவின் அரசன் எசெக்கியாஸ் சொன்னதைக் கேட்டுத் திடம் கொண்டனர்.
2 நாளாகமம் 32 : 9 (RCTA)
பிறகு, தன் முழுப் படையோடும் லாகீஸ் நகரை முற்றுகையிட்டிருந்த அசீரிய அரசன் சென்னாக்கெரீப், யூதாவின் அரசன் எசெக்கியாசிடமும், யெருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடமும் தன் ஊழியர்களில் சிலரை அனுப்பி வைத்தான்.
2 நாளாகமம் 32 : 10 (RCTA)
அசீரிய அரசன் சென்னாக்கெரீப் சொல்வதைக் கேளுங்கள்: எதன்மேல் நம்பிக்கை கொண்டு முற்றுகையிடப்பட்ட யெருசலேமில் நீங்கள் தங்கியிருக்கிறீர்கள்?
2 நாளாகமம் 32 : 11 (RCTA)
நீங்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்திச் சாகும் வண்ணம், 'நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அசீரிய அரசனின் கைக்குத் தப்புவிப்பார்' என்று உங்களை ஏமாற்றியவன் அந்த எசெக்கியாஸ் அன்றோ?
2 நாளாகமம் 32 : 12 (RCTA)
அவருடைய மேடைகளையும் பலி பீடங்களைவும் அழித்து, 'நீங்கள் ஒரே பலிபீடத்திற்கு முன்பாக வழிபாடு நடத்தி, அதன்மேல் தூபம் காட்டக் கடவீர்கள்' என்று யூதாவுக்கும் யெருசலேமுக்கும் கட்டளையிட்டவனும் அதே எசெக்கியாஸ் அன்றோ?
2 நாளாகமம் 32 : 13 (RCTA)
நானும் என் முன்னோரும் உலகத்தின் எல்லா இனத்தாருக்கும் செய்ததை நீங்கள் அறியாதிருக்கிறீர்களோ? எந்நாட்டுத் தெய்வங்களாலாவது அந்நாட்டை என்னிடமிருந்து காக்க முடிந்ததா?
2 நாளாகமம் 32 : 14 (RCTA)
என் முன்னோர் அழித்துப் போட்ட அந்நாடுகளின் தெய்வங்களிலே யாராலாவது தன்னை வழிபட்டு வந்த மக்கள் என் கைக்குத் தப்புவிக்க முடிந்ததா? அப்படியிருக்க உங்கள் கடவுள் மட்டும் உங்களை என்னிடமிருந்து காத்துவிடுவாரோ?
2 நாளாகமம் 32 : 15 (RCTA)
ஆகையால் எசெக்கியாசின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். உங்களை வஞ்சிக்க அவனுக்கு இடம் கொடாதீர்கள்; அவனை நம்பாதீர்கள். ஏனெனில் எவ்வினத்தின் தெய்வமும், எந்நாட்டின் கடவுளும் தம் மக்களை என் கைக்கும் என் முன்னோரின் கைக்கும் இதுவரை தப்புவிக்கவில்லை. எனவே, உங்கள் கடவுளும் உங்களை என் கைக்குத் தப்புவிக்க முடியாது" என்று சொல்லச் சொன்னான்.
2 நாளாகமம் 32 : 16 (RCTA)
சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவருடைய ஊழியன் எசெக்கியாசுக்கும் எதிராக இன்னும் பலவாறு பேசினார்கள்.
2 நாளாகமம் 32 : 17 (RCTA)
மேலும், சென்னாக்கெரீப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நிந்தனை நிறைந்த கடிதங்களையும் அனுப்பினான். அவற்றில் அவன், "மற்ற நாடுகளின் தெய்வங்கள் தங்களை வழிபட்டுவரும் மக்களை என் கைக்குத் தப்புவிக்கத் திறனற்றவராய் இருக்கின்றனர். அதுபோல், எசெக்கியாசின் கடவுளும் தம் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தான்.
2 நாளாகமம் 32 : 18 (RCTA)
இதைச் சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் யூத மொழியிலே உரக்கக் கூறி, யெருசலேம் மதிலின் மேல் இருந்த மக்களை அச்சுறுத்தி, அவர்கள் நிலை குலையச் செய்தனர். இவ்வாறு அவர்கள் நகரைக் கைப்பற்ற எண்ணியிருந்தனர்.
2 நாளாகமம் 32 : 19 (RCTA)
மனிதர்களின் கைவேலையான மண்ணுலக மக்களின் தெய்வங்களைப் பற்றிப் பேசினது போல் யெருசலேமின் கடவுளைப் பற்றியும் இழிவாகப் பேசத் துணிந்தனர்.
2 நாளாகமம் 32 : 20 (RCTA)
அதைக்கேட்டு எசெக்கியாசும் ஆமோசின் மகன் இசயாஸ் என்ற இறைவாக்கினரும் அந்தத் தெய்வ நிந்தனையின் பொருட்டு மன்றாடி விண்ணை நோக்கிக் கதறியழுதனர்.
2 நாளாகமம் 32 : 21 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் ஒரு வானவரை அனுப்பினார். அவர் அசீரியரின் பாசறையில் இருந்த ஆற்றல் படைத்த வீரர்களையும் படைத்தலைவர்களையும் கொன்று போட்டார். எனவே சென்னாக்கெரீப் மகா வெட்கத்துடன் தன் நாடு திரும்பினான். அங்கே அவன் தன் தேவனின் கோயிலினுள் இருந்த போது, அவனுடைய சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டிக் கொன்றனர்.
2 நாளாகமம் 32 : 22 (RCTA)
இவ்வாறு ஆண்டவர் எசெக்கியாசையும் யெருசலேம் குடிகளையும் அசீரிய அரசன் சென்னாக்கெரீப்பின் கைக்கும், மற்ற எல்லாருடைய கைக்கும் தப்புவித்து மீட்டு, அவர்களது சுற்றுப் புறத்திலும் சமாதானத்தைத் தந்தருளினார்.
2 நாளாகமம் 32 : 23 (RCTA)
அப்போது பலர் ஆண்டவருக்கென்று பலியிட மிருகங்களை யெருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அத்தோடு யூதாவின் அரசன் எசெக்கியாசுக்குப் பரிசுகளை வழங்கினர். அதனால் எசெக்கியாசின் புகழ் நாடுகள் எங்கணும் பரவிற்று.
2 நாளாகமம் 32 : 24 (RCTA)
அக்காலத்தில் எசெக்கியாஸ் நோய்வாய்பட்டுச் சாகக்கிடந்தான். அப்பொழுது அவன் ஆண்டவர் அவன் மேல் இரங்கி அவனுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.
2 நாளாகமம் 32 : 25 (RCTA)
ஆனால் எசெக்கியாஸ் தனக்கு அருளப்பட்ட உதவிகளுக்குத் தகுந்தபடி நன்றியுள்ளவனாய் நடந்துகொள்ள வில்லை. ஏனெனில் அவன் செருக்குக் கொண்டான். அதன் பொருட்டு அவன்மேலும் யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் ஆண்டவர் கோபம் கொண்டார்.
2 நாளாகமம் 32 : 26 (RCTA)
பிறகு அவனும் யெருசலேமின் குடிகளும் தங்கள் செருக்கை முன்னிட்டுத் தம்மையே தாழ்த்தினதால், ஆண்டவரின் சீற்றம் எசெக்கியாசின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மேல் வரவில்லை.
2 நாளாகமம் 32 : 27 (RCTA)
எசெக்கியாஸ் செல்வமும் செல்வாக்கும் உள்ளவனாயினான். பொன், வெள்ளி, இரத்தினம், நறுமண வகைகள், பலவித ஆயுதங்கள் விலையேறப் பெற்ற தட்டுமுட்டுகள் ஆகியவற்றைத் திரளாகச் சேகரித்துக் கொண்டான்.
2 நாளாகமம் 32 : 28 (RCTA)
அதுவுமன்றித் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேமித்து வைக்கப் பற்பல பண்டசாலைகளையும், கால் நடைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்குப் பட்டிகளையும் அமைத்தான்.
2 நாளாகமம் 32 : 29 (RCTA)
அவன் பல நகர்களையும், கட்டினான்; ஆடுமாடுகள் அவனுக்கு ஏராளமாயிருந்தன. ஆண்டவர் அவனுக்கு மிகுந்த செல்வம் கொடுத்திருந்தார்.
2 நாளாகமம் 32 : 30 (RCTA)
இதே எசெக்கியாஸ்தான் கியோன் ஆற்றின் மேல் ஊற்றை மறித்துத் தண்ணீரைத் தாவீதின் நகருக்கு மேற்குப்புறமாகத் திருப்பிவிட்டவன். எசெக்கியாஸ் தான் செய்ய நினைத்ததையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்தான்.
2 நாளாகமம் 32 : 31 (RCTA)
நாட்டில் நிகழ்ந்திருந்த அரும் பெரும் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரம் அறியும் பொருட்டுப் பபிலோனிலிருந்து சில தலைவர்கள் தூதுவர்களாக அவனிடம் வந்தனர். அவ்வேளையில் கடவுள் அவனைச் சோதிக்கிறதற்காகவும், அவன் இதயச் சிந்தனைகளை அறியும் பொருட்டும் அவனைக் கைவிட்டு விட்டார்.
2 நாளாகமம் 32 : 32 (RCTA)
எசெக்கியாசின் மற்ற வரலாறும் அவன் நற்செயல்களும் ஆமாசின் மகன் இசயாஸ் இறைவாக்கினரின் நூலிலும், யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளன.
2 நாளாகமம் 32 : 33 (RCTA)
எசெக்கியாஸ் தன் முன்னோரோடு கண்வளர்ந்து, தாவீது குடும்பத்தாரின் கல்லறைக்கு மேலுள்ள ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டான். யூதா நாட்டார் அனைவரும் யெருசலேமின் எல்லாக் குடிகளும் அவனைக் குறித்துத் துக்கம் கொண்டாடினர். அவனுடைய மகன் மனாசே அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33