2 நாளாகமம் 31 : 1 (RCTA)
இதன் பின்னர் யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப்போய் யூதா, பென்யமீன் நாடுகளில் மட்டுமன்றி எப்பிராயீம், மனாசே நாடுகளிலும் இருந்த சிலைகளை உடைத்து, சிலைத் தோப்புகளை அழித்து மேடைகளையும் பலிபீடங்களையும் தரைமட்டமாக்கினர். பிறகு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்பினர்.
2 நாளாகமம் 31 : 2 (RCTA)
எசெக்கியாஸ் குருக்கள், லேவியர்களை அவரவர் முறையின்படியும் அலுவலின் படியும் பல பிரிவுகளாகப் பிரித்து, தகனப்பலி, சமாதானப் பலி முதலியவற்றைச் செலுத்தவும், ஆண்டவரின் கூடார வாயில்களில் ஆண்டவருக்குப் புகழ்பாடவும், ஏனைய பணிவிடைகளைச் செய்யவும் அவர்களை நியமித்தான்.
2 நாளாகமம் 31 : 3 (RCTA)
மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டுள்ளபடி, காலை மாலைகளில் செலுத்த வேண்டிய தகனப் பலிகளுக்காகவும் மற்றத் திருநாட்களிலும் செலுத்த வேண்டிய தகனப்பலி, சமாதானப் பலிகளுக்காகவும், அரசன் தன் உடைமையில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தான்.
2 நாளாகமம் 31 : 4 (RCTA)
குருக்களும் லேவியரும் ஆண்டவரின் திருச்சட்டத்தின் வழி நின்று ஒழுகுமாறு அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்கும்படி அரசன் யெருசலேமின் குடிகளுக்குக் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 31 : 5 (RCTA)
இக் கட்டளை அறிவிக்கப்பட்டவுடன் இஸ்ராயேல் மக்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய், தேன் முதலியவற்றின் முதற் பலன்களை மிகுதியாகக் கொண்டு வந்தனர். மேலும் நிலத்தின் எல்லா விளைச்சல்களிலும் செலுத்த வேண்டிய பத்திலொரு பாகத்தையும் செலுத்தத் தொடங்கினர்.
2 நாளாகமம் 31 : 6 (RCTA)
அதுவுமன்றி யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களும் யூதாவின் மக்களும் ஆடுமாடுகளிலும் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அப்பணிக்கப்பட்டிருந்த நேர்ச்சைப் பொருட்களிலும் பத்திலொரு பாகத்தைக் குவியல் குவியலாகக் கொண்டு வந்து செலுத்தினர்.
2 நாளாகமம் 31 : 7 (RCTA)
மூன்றாம் மாதம் தொடங்கி ஏழாம் மாதம் வரை இவ்வாறு தொடர்ந்து நடந்தேறியது.
2 நாளாகமம் 31 : 8 (RCTA)
அரசனும் அவன் அலுவலர்களும் வந்து அக்குவியல்களைக் கண்டு ஆண்டவருக்குப் புகழ்பாடி இஸ்ராயேல் மக்களை ஆசீர்வதித்தனர்.
2 நாளாகமம் 31 : 9 (RCTA)
எசெக்கியாஸ் குருக்களையும் லேவியர்களையும் நோக்கி, "இத்துணை குவியல்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டன?" என்று வினவினான்.
2 நாளாகமம் 31 : 10 (RCTA)
அதற்குச் சாதோக் வழிவந்த அசாரியாஸ் என்ற தலைமைக் குரு அரசனைப் பார்த்து, "மக்கள் இந்த முதற்பலன்களை ஆண்டவரின் ஆலயத்துக்குக் கொண்டு வரத் தொடங்கின நாள் முதல் நாங்கள் திருப்தியாய் உண்டு வருகிறோம். எனினும் இன்னும் ஏராளம் எஞ்சியுள்ளது. ஏனெனில் ஆண்டவர் தம் மக்களை ஆசீர்வதித்துள்ளார். தாங்கள் காண்கிற இந்தக் குவியல்கள் மீதியாய் உள்ளவையே" என்று மறுமொழி சொன்னார்.
2 நாளாகமம் 31 : 11 (RCTA)
அப்பொழுது எசெக்கியாஸ் ஆண்டவரது ஆலயத்தில் அறைகளைத் தயாரிக்கக் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 31 : 12 (RCTA)
அவை தயாரான போது அவற்றில் முதற் பலன்களையும் பத்திலொரு பாகத்தையும் நேர்ச்சைப் பொருட்களையும் பத்திரமாக வைத்தனர். அவற்றையெல்லாம் கண்காணிக்க லேவியனான சொனேனியாஸ் தலைவனாகவும் அவனுடைய சகோதரன் செமேயி அவனுக்குத் துணையாகவும்,
2 நாளாகமம் 31 : 13 (RCTA)
இவ்விருவருக்கும் கீழ் யேகியேல், அசசியாஸ், நாகாத், அசாயேல், எரிமோத், யோசபாத், எலியேல், எஸ்மாக்கியாஸ், மாகாத், பனாயியாஸ் முதலியோர் அலுவலராகவும் நியமனம் பெற்றனர். இவர்கள் அனைவரும், அரசன் எசெக்கியாசும் ஆலயத்தைக் கண்காணித்து வந்த பெரிய குரு அசாரியாசும் கட்டளையிட்டிருந்தவாறே நியமிக்கப்பட்டனர்.
2 நாளாகமம் 31 : 14 (RCTA)
கிழக்கு வாயிலைக் காவல் புரிந்து வந்த எம்னாவின் மகன் கொரே என்ற லேவியன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை மேற்பார்த்து வந்தான். ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் பரிசுத்த பொருட்களையும் பங்கிடுவது இவன் வேலை.
2 நாளாகமம் 31 : 15 (RCTA)
அவனது அதிகாரத்தின் கீழ் ஏதென், பென்யமீன், யோசுவா, செமேயாஸ், அமாரியாஸ், செக்கேனியாஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் குருக்களின் நகர்களில் தங்கி இவர்களின் சகோதரருள் பெரியோர் கொடுத்து வந்தனர்.
2 நாளாகமம் 31 : 16 (RCTA)
ஆனால் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்று வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கும், தத்தம் பிரிவின்படி ஆண்டவரின் ஆலயத்தினுள் நாளும் திருப்பணி புரிந்து வந்த அனைவர்க்கும் பங்குகள் கொடுக்கப்படவில்லை.
2 நாளாகமம் 31 : 17 (RCTA)
குருக்களின் பெயர்கள் அவரவர் வம்ச முறைப்படியே தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன. இருபது வயதும் அதற்கும் மேற்பட்ட லேவியர்களின் பெயர்கள் அவரவர் அலுவலின்படியும் பிரிவின்படியும் தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன.
2 நாளாகமம் 31 : 18 (RCTA)
குருக்களோ தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய அனைவரோடும் பதிவு செய்யப்பட்டனர்; ஏனெனில் தங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் இவர்கள் கவனமாய் இருந்தார்கள்.
2 நாளாகமம் 31 : 19 (RCTA)
தங்கள் ஊர்களை அடுத்த வெளி நிலங்களில் வாழ்ந்து வந்த ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சேரவேண்டிய பங்குகளைக் கொடுக்கும்படி சிலர் ஊர்தோறும் நியமிக்கப் பெற்றனர். குருக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவருக்கும் லேவிய வம்சத்தாருள் யாவருக்குமே அவர்கள் பங்குகளைக் கொடுத்து வந்தனர்.
2 நாளாகமம் 31 : 20 (RCTA)
இவ்வாறு எசெக்கியாஸ் யூதா நாடெங்கும் செய்து தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் உண்மை உள்ளவனாகவும் நடந்து வந்தான்.
2 நாளாகமம் 31 : 21 (RCTA)
கடவுளின் ஆலயத் திருப்பணிக்கடுத்த காரியங்களை எல்லாம் திருச் சட்டத்திற்கும் சடங்கு முறைகளுக்கும் ஏற்ற விதமாகவே செய்து, தன் முழு மனத்தோடும் ஆண்டவரை நாடினான். எனவே எல்லாவற்றிலும் அவன் வெற்றி கண்டான்.
❮
❯