2 நாளாகமம் 30 : 1 (RCTA)
பின்பு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்திற்கு வரவேண்டும் என்று பறைசாற்றும்படி எசெக்கியாஸ் இஸ்ராயேல், யூதா நாடெங்கும் ஆட்களை அனுப்பினதுடன், எப்பிராயீம், மனாசே குலத்தாருக்குக் கடிதங்களையும் அனுப்பிவைத்தான்.
2 நாளாகமம் 30 : 2 (RCTA)
அரசனும் தலைவர்களும் மக்கள் யாவரும் கலந்து பேசினர். பாஸ்காத் திருவிழாவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.
2 நாளாகமம் 30 : 3 (RCTA)
ஏனெனில் குறிக்கப்பட்ட காலத்தில் மக்கள் அத்திருவிழாவைக் கொண்டாட முடியாது போயிற்று. காரணம்: போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் யெருசலேமிற்கு இன்னும் வந்து சேரவில்லை.
2 நாளாகமம் 30 : 4 (RCTA)
இம்முடிவு அரசனுக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
2 நாளாகமம் 30 : 5 (RCTA)
மேலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடும்படி மக்கள் யெருசலேமிற்கு வரவேண்டும் என்று பெர்சாபே முதல் தாண் வரையுள்ள இஸ்ராயேல் நாடெங்கும் விளம்பரம் செய்யத் தீர்மானித்தனர். ஏனெனில் மக்களுள் பலர் சட்டப்படி அதைக் கொண்டாடவில்லை.
2 நாளாகமம் 30 : 6 (RCTA)
அரசனும் தலைவர்களும் கொடுத்த கடிதங்களைத் தூதுவர் வாங்கிக்கொண்டு இஸ்ராயேல், யூதா நாடெங்கும் போய் அரச கட்டளையைப் பறைசாற்றினார்கள்: 'இஸ்ராயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்புங்கள்; அப்படியாயின் அசீரிய அரசர்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்களுக்கு அவர் துணையாக வருவார்.
2 நாளாகமம் 30 : 7 (RCTA)
உங்கள் முன்னோரும் உங்கள் சகோதரரும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால் அன்றோ, அவர் அவர்களைச் சாவுக்குக் கையளித்தார்? அது உங்களுக்குத் தெரிந்ததே. எனவே நீங்கள் அவர்களைப் போல் நடவாதீர்கள்.
2 நாளாகமம் 30 : 8 (RCTA)
உங்கள் முன்னோரைப் போன்று நீங்களும் இறுமாப்புக் கொண்டவராய் இருக்க வேண்டாம். மாறாக ஆண்டவருக்குப் பணிந்து, அவர் என்றென்றும் பரிசுத்தமாக்கின அவருடைய திருவிடத்திற்குத் திரும்பி வந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பணி புரியுங்கள். அவ்வாறாயின் ஆண்டவரின் சீற்றம் உங்களை விட்டு அகலும்.
2 நாளாகமம் 30 : 9 (RCTA)
ஆம், ஆண்டவர் பக்கம் நீங்கள் மனம் திரும்பினால், உங்கள் சகோதரரும் புதல்வரும், தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போன தலைவரிடமிருந்து இரக்கம் பெறுவர்; இந்நாட்டிற்குத் திரும்பி வருவர். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அன்பும் இரக்கமும் உள்ளவர். நீங்கள் அவர் பக்கம் மனம் திரும்புவீர்களானால் அவரும் பாராமுகமாய் இரார்." இதுவே அந்த அரச கட்டளை.
2 நாளாகமம் 30 : 10 (RCTA)
தூதுவர் எப்பிராயீம் நாட்டிலும் மனாசே நாட்டிலும் சபுலோன் நாட்டிலும் ஊர் ஊராய் விரைந்து சென்றனர். அப்பொழுது அந்நாடுகளின் மக்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் கேலி செய்தனர்.
2 நாளாகமம் 30 : 11 (RCTA)
ஆயினும் ஆசரிலும் மனாசேயிலும் சபுலோனிலும் இருந்த ஒரு சிலர் அவர்களது சொல்லைக் கேட்டு யெருசலேமுக்கு வந்தனர்.
2 நாளாகமம் 30 : 12 (RCTA)
யூதாவிலேயோ ஆண்டவரின் கரம் அவர்களுக்குத் துணை நின்றது. ஆகவே அவர்கள் ஒரு மனப்பட்டு ஆண்டவரது திருவுளத்திற்குப் பணிந்தவராய், அரசனும் தலைவர்களும் கட்டளையிட்டிருந்தபடியே செய்து வந்தனர்.
2 நாளாகமம் 30 : 13 (RCTA)
திரளான மக்கள் யெருசலேமுக்கு இரண்டாம் மாதத்தில் வந்து புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாடினர்.
2 நாளாகமம் 30 : 14 (RCTA)
பின்பு அவர்கள் யெருசலேமில் எஞ்சியிருந்த பலிபீடங்களையும், சிலைகளுக்குத் தூபம் காட்டும் பற்பல தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றில் எறிந்துவிட்டனர்.
2 நாளாகமம் 30 : 15 (RCTA)
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் பாஸ்காச் செம்மறியைப் பலியிட்டனர். இதைக் கண்ணுற்ற குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தனர்; உடனே தங்களைத் தூய்மையாக்கிக் கொண்டு ஆண்டவரின் ஆலயத்திற்குள் தகனப் பலிகளைக் கொண்டு வந்தனர்.
2 நாளாகமம் 30 : 16 (RCTA)
அவர்கள் கடவுளின் மனிதர் மோயீசனின் திருச்சட்டத்திற்கு ஏற்றபடி தங்கள் முறையின்படியே தத்தம் கடமையைச் செய்தனர்.
2 நாளாகமம் 30 : 17 (RCTA)
மக்களுள் பலர் தீட்டுப்பட்டிருந்தனர். ஆகவே குருக்கள் லேவியரிடமிருந்து (பலிகளின்) இரத்தத்தை வாங்கித் தெளித்தனர். ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தப் போதிய தூய்மை இல்லாதவர்கள் சார்பாக லேவியர்கள் பாஸ்காப் பலியை ஒப்புக்கொடுத்தனர்.
2 நாளாகமம் 30 : 18 (RCTA)
உண்மையிலேயே ஏராளமான மக்கள், குறிப்பாக, எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் குலத்தாருள் பலர் தீட்டுப்பட்டிருந்த நிலையிலேயே திருச்சட்டத்திற்கு மாறாகப் பாஸ்காவை உண்டனர்; அதன் பொருட்டு எசெக்கியாஸ் அவர்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டான்: "ஆண்டவர் நல்லவர்.
2 நாளாகமம் 30 : 19 (RCTA)
எனவே யார் யார் முழு மனத்தோடும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் இரக்கம் காட்டுவார். அவர்கள் தூய்மையற்ற நிலையில் இருந்த போதிலும், அவர் அதைக் குற்றமாக எண்ணாது அவர்களை மன்னிப்பார்" என்று சொன்னான்.
2 நாளாகமம் 30 : 20 (RCTA)
ஆண்டவர் எசெக்கியாசின் மன்றாட்டை ஏற்று மக்களை மன்னித்தார்.
2 நாளாகமம் 30 : 21 (RCTA)
இவ்வாறு யெருசலேமில் இருந்த இஸ்ராயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாட்களாகப் பெரு மகிழ்ச்சியோடு ஆடம்பரமாய்க் கொண்டாடினார்கள். லேவியர்களும் குருக்களும் இசைக்கருவிகளை வாசித்து நாள் தோறும் ஆண்டவருக்குப் புகழ்பாடி வந்தனர்.
2 நாளாகமம் 30 : 22 (RCTA)
ஆண்டவருக்குத் திறமையுடன் திருப்பணி புரிந்து வந்த லேவியர் அனைவரையும் எசெக்கியாஸ் உற்சாகப்படுத்தினான். எனவே அவர்கள் திருவிழாவின் ஏழு நாட்களும் உணவு உண்டு, சமாதானப் பலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து வந்தனர்.
2 நாளாகமம் 30 : 23 (RCTA)
பின்பு மக்கள் எல்லாரும் திருவிழாவை இன்னும் ஏழு நாள் கொண்டாடத் தீர்மானித்து, அவ்வாறே மகிழ்ச்சி கொண்டாடினர்.
2 நாளாகமம் 30 : 24 (RCTA)
ஏனெனில் யூதாவின் அரசன் எசெக்கியாஸ் மக்களுக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமன்றி தலைவர்கள் மக்களுக்கு ஆயிரங் காளைகளையும் பத்தாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தனர். குருக்களில் பலரும் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர்.
2 நாளாகமம் 30 : 25 (RCTA)
யூதா மக்கள் அனைவரும் குருக்களும் லேவியரும், இஸ்ராயேலிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்தவரும் யூத மறையைத் தழுவியிருந்தோருமான அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
2 நாளாகமம் 30 : 26 (RCTA)
இவ்வாறு யெருசலேமில் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இஸ்ராயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் திருவிழா இவ்வளவு சிறப்புடன் நடந்ததில்லை.
2 நாளாகமம் 30 : 27 (RCTA)
கடைசியில் குருக்களும் லேவியர்களும் எழுந்து நின்று மக்கட்கூட்டத்தை ஆசீர்வதித்தனர். அவர்களது மன்றாட்டு கேட்டருளப்பட்டது. அவர்களது செபம் ஆண்டவரின் உறைவிடமான விண்ணகத்தை எட்டிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27