2 நாளாகமம் 29 : 1 (RCTA)
எசெக்கியாஸ் தன் இருபத்தைந்தாவது வயதில் அரியணை ஏறினான். யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். சக்கரியாசின் மகளான அவனுடைய தாயின் பெயர் ஆபியா.
2 நாளாகமம் 29 : 2 (RCTA)
அவன் தன் மூதாதையாகிய தாவீதைப் போன்று ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடந்து வந்தான்.
2 நாளாகமம் 29 : 3 (RCTA)
அவன் தன் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரது ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அதைப் பழுது பார்த்தான்.
2 நாளாகமம் 29 : 4 (RCTA)
குருக்களையும் லேவியர்களையும் கிழக்கு வீதியில் ஒன்று கூட்டினான்.
2 நாளாகமம் 29 : 5 (RCTA)
அவர்களை நோக்கி, "லேவியரே கேளுங்கள். உங்களைத் தூய்மைப் படுத்தி உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். திருவிடத்திலுள்ள குப்பைகளை வெளியேற்றுங்கள்.
2 நாளாகமம் 29 : 6 (RCTA)
நம் முன்னோர் பாவம் செய்து நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து அவரை விட்டு விலகினர்; அவர்கள் தங்கள் ஆண்டவரது திருவிடத்தை நாடாது அவரைப் புறக்கணித்தனர்.
2 நாளாகமம் 29 : 7 (RCTA)
அவர்கள் திருவிடத்தில் இஸ்ராயேலின் கடவுளுக்குத் தகனப்பலி செலுத்தாமலும் தூபம் காட்டாமலும் விளக்குகளை அணைத்துவிட்டு மண்டபக் கதவுகளைப் பூட்டிப் போட்டனர்.
2 நாளாகமம் 29 : 8 (RCTA)
அதன் காரணமாகவே ஆண்டவர் யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் வெஞ்சினம் கொண்டார். ஆண்டவர் அவர்களைத் துயரத்திற்கும் அழிவிற்கும் ஏளனத்திற்கும் கையளித்தார். இதை நீங்களே அறிவீர்கள்.
2 நாளாகமம் 29 : 9 (RCTA)
நம் முன்னோர் வாளால் வெட்டுண்டு விழுந்ததற்கும், நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் சிறைப்படுத்தப் பட்டதற்கும் அந்தப் பழிபாவமே காரணம்.
2 நாளாகமம் 29 : 10 (RCTA)
இப்போது எனக்குச் சிறந்ததெனத் தோன்றுவது என்னவெனில், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரோடு நாம் உடன்படிக்கை செய்ய வேண்டும்; அவ்வாறு செய்தால் தான் அவரது கடும் கோபம் நம்மை விட்டு விலகும்.
2 நாளாகமம் 29 : 11 (RCTA)
என் புதல்வர்களே, நீங்கள் வாளா இருக்க வேண்டாம், நீங்கள் ஆண்டவருக்கு முன்பாக நின்று திருப்பணி புரியவும் அவரை வழிபடவும் அவருக்குத் தூபம் காட்டவும் ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப் பட்டிருக்கிறீர்கள்" என்றார்.
2 நாளாகமம் 29 : 12 (RCTA)
அதைக் கேட்டு ககாத் புதல்வரில் அமசாயின் மகன் மகாத்தும், அசாரியாசின் மகன் யோவேலும், மேராரி புதல்வரில் அப்திக்கின் மகன் சீசும், யலலேயலின் மகன் அசாரியாசும், கெர்சோன் புதல்வரில் ஜெம்மாவின் மகன் யோவாவும், யோவாவின் மகன் ஏதனும்,
2 நாளாகமம் 29 : 13 (RCTA)
எலிசப்பான் புதல்வரில் சம்ரியும் யகியேலும், ஆசாப்பின் புதல்வரில் சக்கரியாசும் மத்தானியாசும்,
2 நாளாகமம் 29 : 14 (RCTA)
ஏமான் புதல்வரில் யகியேலும், செமேயீயும், இதித்தூன் புதல்வரில் செமேயாசும், ஓசியேலும் எழுந்தனர்.
2 நாளாகமம் 29 : 15 (RCTA)
தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்துத் தங்களைத் தூய்மைப் படுத்திய பின்பு, அரச கட்டளைக்கும் ஆண்டவரின் கட்டளைக்கும் ஏற்ப ஆலயத்தைத் தூய்மைப் படுத்துவதற்காக அதனுள் நுழைந்தனர்.
2 நாளாகமம் 29 : 16 (RCTA)
குருக்களும் ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மைப்படுத்த உள்ளே புகுந்தனர்; ஆண்டவரது ஆலயத்தில் காணப்பட்ட அசுத்தங்களை எல்லாம் வாரியெடுத்தனர். லேவியர் அவற்றை வெளியே கொண்டுபோய் கெதிரோன் ஆற்றில் கொட்டினர்.
2 நாளாகமம் 29 : 17 (RCTA)
முதல் மாதம் முதல் நாள் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அதே மாதத்தின் எட்டாம் நாளன்று ஆண்டவரின் ஆலய மண்டபத்தில் அவர்கள் நுழைந்தனர். எட்டு நாட்களாக ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினர். அதே மாதம் பதினாறாம் நாள் வேலையை முடித்தனர்.
2 நாளாகமம் 29 : 18 (RCTA)
பிறகு அவர்கள் எசெக்கியாஸ் அரசனிடம் போய் அவனைப் பார்த்து, "நாங்கள் ஆண்டவரது இல்லம் அனைத்தையும் தகனப் பலிபீடத்தையும், அதன் எல்லாத் தட்டுமுட்டுகளையும் காணிக்கை அப்பங்களை வைக்கும் மேசையையும், அதைச் சேர்ந்த எல்லாத் தட்டு முட்டுகளையும்,
2 நாளாகமம் 29 : 19 (RCTA)
ஆக்காஸ் தன் ஆட்சிகாலத்தில் ஆண்டவரைப் புறக்கணித்துத் தீட்டுப்படுத்தியிருந்த ஆலயத்தின் எல்லாத் தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக அவற்றை ஒழுங்கோடு வைத்திருக்கிறோம்" என்றார்.
2 நாளாகமம் 29 : 20 (RCTA)
அரசன் எசெக்கியாஸ் காலையில் எழுந்து நகர அலுவலர்கள் அனைவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ஆண்டவரின் ஆலயத்திற்குச் சென்றான்.
2 நாளாகமம் 29 : 21 (RCTA)
அப்பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிப் பாவப்பரிகாரத்திற்காகவும் நாட்டிற்காகவும் திருவிடத்திற்காகவும் யூதா நாட்டுக்காகவும் பலி செலுத்துமாறு, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டு வந்தனர். ஆரோனின் புதல்வரான குருக்களை நோக்கி, "இவற்றை ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் பலியிடுங்கள்" என்று கூறினர்.
2 நாளாகமம் 29 : 22 (RCTA)
குருக்கள் காளைகளை வெட்டி அவற்றின் குருதியை எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஊற்றினர். ஆட்டுக் கடாக்களை வெட்டி அவற்றின் குருதியையும் பீடத்தின் மேல் ஊற்றினர். இறுதியில் ஆட்டுக்குட்டிகளை அறுத்து அவற்றின் குருதியைப் பீடத்தின் மேல் தெளித்தனர்.
2 நாளாகமம் 29 : 23 (RCTA)
பாவப் பரிகாரத்திற்காக ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் அரசனுக்கும் மக்கள் அனைவர்க்கும் முன்பாகக் கொண்டு வந்து அவற்றின் மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
2 நாளாகமம் 29 : 24 (RCTA)
குருக்கள் அவற்றை அறுத்து இஸ்ராயேலர் அனைவரின் பாவத்திற்கும் பரிகாரமாக அவற்றின் குருதியைப் பீடத்திற்கும் பரிகாரமாகத் தகனப் பலியைச் செலுத்த வேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.
2 நாளாகமம் 29 : 25 (RCTA)
மேலும் தாவீதின் கட்டளைப்படியும் காத் என்ற திருக்காட்சியாளரின் கட்டளைப்படியும் இறைவாக்கினர் நாத்தானுடைய கட்டளைப்படியும், எசெக்கியாஸ் ஆலயத்திலே கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் முதலியவற்றை இசைக்குமாறு லேவியர்களை ஏற்படுத்தினான். ஏனெனில் ஆண்டவரே அக்கட்டளையைத் தம் இறைவாக்கினர் வாயிலாகக் கொடுத்திருந்தார்.
2 நாளாகமம் 29 : 26 (RCTA)
அதன்படி லேவியர்கள் தாவீது கட்டளையிட்ட இசைக்கருவிகளை வாசிக்கவும், குருக்கள் எக்காளங்களை ஊதவும் தொடங்கினர்.
2 நாளாகமம் 29 : 27 (RCTA)
மீண்டும் எசெக்கியாஸ் தகனப்பலிகளைப் பலிபீடத்தின் மேல் செலுத்தக் கட்டளையிட்டான். அவ்வாறு பலிகள் செலுத்தப்படும் போது, இஸ்ராயேல் அரசர் தாவீது தயாரித்திருந்த எக்காளங்களை ஊதியும் பற்பல இசைக் கருவிகளை இயக்கியும் அவர்கள் ஆண்டவரைப் பாடிப் புகழ்ந்தனர்.
2 நாளாகமம் 29 : 28 (RCTA)
பாடகரும் எக்காளம் ஊதுவோரும் ஆண்டவருக்கு வழிபாடு செய்யும் மக்கள் அனைவரும் தகனப்பலி முடியும் வரை தத்தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர்.
2 நாளாகமம் 29 : 29 (RCTA)
பலி முடிந்த பின் அரசனும் அவனோடு இருந்த அனைவரும் தலை வணங்கி வழிபடுவர்.
2 நாளாகமம் 29 : 30 (RCTA)
மேலும் எசெக்கியாசும் தலைவர்களும் லேவியர்களை நோக்கி, "தாவீதும் திருக்காட்சியாளர் ஆசாப்பும் பாடின பாடல்களை நீங்களும் பாடி ஆண்டவரைப் புகழுங்கள்" என்று கட்டளையிட்டனர். அவர்கள் அவ்வாறு செய்து மகா அக்களிப்போடு பாடவும், முழந்தாளிட்டு வழிபடவும் தொடங்கினர்.
2 நாளாகமம் 29 : 31 (RCTA)
அதன்பின் எசெக்கியாஸ் மக்களை நோக்கி, "நீங்கள் ஆண்டவருக்கென்று கை நிறையக் காணிக்கைகளைக் கொண்டு வந்ததால், அருகில் வந்து ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து, அவருக்குத் தோத்திரப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் தகனப் பலிகளையும் ஒப்புக்கொடுங்கள்" என்று அறிவுரை கூறினான். அதைக்கேட்டு எல்லா மக்களும் அவ்வாறு ஆண்டவருக்குத் தோத்திரப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் முழுமனத்துடன் ஒப்புக்கொடுக்கத் தொடங்கினர்.
2 நாளாகமம் 29 : 32 (RCTA)
எழுபது காளைகளையும் நூறு ஆட்டுக் கடாக்களையும் இருநூறு ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் தகனப் பலியாகக் செலுத்தினர்.
2 நாளாகமம் 29 : 33 (RCTA)
அதுவுமன்றி அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தனர்.
2 நாளாகமம் 29 : 34 (RCTA)
குருக்கள் சிலரே இருந்ததால், தகனப்பலி மிருகங்கள் எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப் படுத்தும் வரை அவர்களின் சகோதரரான லேவியர் அவர்களுக்கு உதவி செய்தனர். ஏனெனில் தூய்மைப் படுத்திக் கொள்வதில் குருக்களை விட லேவியர் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
2 நாளாகமம் 29 : 35 (RCTA)
தகனப்பலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், தகனப் பலிகளுக்கடுத்த பானப்பலிகளும் மிகுதியாகச் செலுத்தப்பட்டன. இவ்வாறு ஆண்டவரின் ஆலய வழிபாடு புதுப்பிக்கப் பெற்றது.
2 நாளாகமம் 29 : 36 (RCTA)
ஆலய வழிபாடு இவ்வளவு விரைவில் புதுப்பிக்கப் பெற்றதை எண்ணி, எசெக்கியாசும் மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36