2 நாளாகமம் 21 : 1 (RCTA)
யோசபாத் தன் மூதாதையரோடு கண்வளர்ந்து தாவீதின் நகரில் தன் முன்னோர் அருகில் புதைக்கப்பட்டான். அவனுடைய மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
2 நாளாகமம் 21 : 2 (RCTA)
யூதாவின் அரசன் யோசபாத்துக்குப் பிறந்த புதல்வர்களாகிய ஆசரியாஸ், யாகியேல், சக்கரியாஸ், அசாரியாஸ், மிக்காயேல், சப்பத்தியா என்பவர்கள் அவனுடைய சகோதரராவர்.
2 நாளாகமம் 21 : 3 (RCTA)
அவர்களின் தந்தை அவர்களுக்குப் பொன்னையும் வெள்ளியையும் நன்கொடையாய்க் கொடுத்ததுமன்றி, விலையேறப்பெற்ற சொத்துகளையும் யூதாவில் அரணுள்ள நகர்களையும் அவர்களுக்கு விட்டுச் சென்றிருந்தான். யோராம் தலை மகனானதால் அவனுக்கு அரசையே கொடுத்திருந்தான்.
2 நாளாகமம் 21 : 4 (RCTA)
யோராம் தன் தந்தையின் அரியணையில் அமர்ந்து தன் அரசை நிலை நாட்டின பின், தன் சகோதரர் எல்லாரையும் தன் வாளுக்கு இரையாக்கினான்.
2 நாளாகமம் 21 : 5 (RCTA)
யோராம் அரசு கட்டில் ஏறின போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் யெருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 நாளாகமம் 21 : 6 (RCTA)
அவன் இஸ்ராயேல் அரசர்களின் வழிகளிலே நடந்து ஆக்காபின் வீட்டார் செய்தது போல் தானும் செய்து வந்தான். ஆக்காபின் மகளே அவனுக்கு மனைவி. அவன் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து வந்தான்.
2 நாளாகமம் 21 : 7 (RCTA)
ஆயினும் ஆண்டவர் தாவீதோடு உடன்படிக்கை செய்து, அவருக்கும் அவருடைய புதல்வருக்கும் என்றென்றும் ஒரு ஒளிவிளக்கைக் கொடுப்பதாக வாக்களித்திருந்தமையால் அவர் தாவீதின் குலத்தை அழித்துவிட மனமில்லாதிருந்தார்.
2 நாளாகமம் 21 : 8 (RCTA)
அக்காலத்தில் இதுமேயர் யூதா அரசனுக்கு அடிபணிய மறுத்து, தங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்திக் கொண்டனர்.
2 நாளாகமம் 21 : 9 (RCTA)
யோராம் தன் படைத் தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாய் முற்றுகையிட்டிருந்த இதுமேயர்களையும் அவர்களின் குதிரைப் படைத்தலைவர்களையும் முறியடித்தான்.
2 நாளாகமம் 21 : 10 (RCTA)
ஆயினும் இதுமேயர் முன் போல் யூதாவுக்கு அடங்காது இன்று வரை கலகம் செய்து கொண்டு தான் வருகிறார்கள் லெப்னா நாட்டாரும் கிளர்ச்சி செய்து அவனை விட்டுப் பிரிந்து போயினர். யோராம் தன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால் இவ்வாறு நடந்தது.
2 நாளாகமம் 21 : 11 (RCTA)
மேலும் யூதாவின் எல்லா நகரங்களிலும் மேடைகளை அமைத்து யெருசலேமின் குடிகள் விபசாரம், செய்யவும், யூதாவின் குடிகள் பாவம் புரியவும் அவன் காரணமாய் இருந்தான்.
2 நாளாகமம் 21 : 12 (RCTA)
அப்பொழுது இறைவாக்கினர் எலியாசிடமிருந்து கடிதம் ஒன்று அவனுக்கு வந்தது. அதில் எழுதியிருந்ததாவது: "உம் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுகிறதாவது: 'நீ உன் தகப்பன் யோசபாத்தின் வழிகளிலும் நடவாமல்,
2 நாளாகமம் 21 : 13 (RCTA)
இஸ்ராயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆக்காபின் வீட்டாரைப் போல் யூதாவையும் யெருசலேமின் குடிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தினாய்; உன்னிலும் நல்லவர்களாயிருந்த உன் தந்தை வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்று குவித்தாய்.
2 நாளாகமம் 21 : 14 (RCTA)
எனவே, ஆண்டவராகிய நாம் உன்னையும் உன் குடிகளையும் உன் புதல்வர் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் கொள்ளை நோயால் வாதிப்போம்.
2 நாளாகமம் 21 : 15 (RCTA)
நீயோ மிகக் கொடிய வயிற்று நோயால் வாட்டி வதைக்கப்படுவாய். அதன் பொருட்டு நாளுக்கு நாள் உன் குடல்கள் கொஞ்சமாக அழுகி அழிந்து போகும்' என்கிறார்" என்பதாம்.
2 நாளாகமம் 21 : 16 (RCTA)
அவ்வாறே ஆண்டவர் பிலிஸ்தியர்களையும் எத்தியோப்பியரின் அண்டை நாட்டினரான அரேபியர்களையும் யோராமுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்.
2 நாளாகமம் 21 : 17 (RCTA)
அவர்கள் யூதாவில் நுழைந்து நாட்டைப் பாழ்படுத்தினர்; அரசனின் அரண்மனையில் புகுந்து அகப்பட்ட எல்லாப் பொருட்களையும் சூறையாடினர்; அவனுடைய கடைசிப் பிள்ளையான யோவக்காசைத் தவிர மற்ற மக்களையும் மனைவியரையும் அவர்கள் கடத்திச் சென்றனர்.
2 நாளாகமம் 21 : 18 (RCTA)
இது தவிர, தீராத குடல் நோயால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார்.
2 நாளாகமம் 21 : 19 (RCTA)
நாட்கள் நகர்ந்தன; இரண்டு ஆண்டுகளும் உருண்டோடின. இதற்குள் யோராமின் குடல்கள் அழுகிப்போயின. எனவே, அவன் உயிர் துறந்தான். அவன் இத்தகைய இழிவான நோய் கண்டு இறந்த காரணத்தால் மக்கள் அவனுடைய முன்னோர்களுக்குச் செய்து வந்த வழக்கப்படி நறுமணப்பொருள் ஒன்றும் கொளுத்தாமலே அவனை அடக்கம் செய்தார்கள்.
2 நாளாகமம் 21 : 20 (RCTA)
அவன் அரியணை ஏறியபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. யெருசலேமில் எட்டு ஆண்டுகள் அவன் அரசோச்சினான்; ஆனால் நேரிய வழியில் நடக்கவில்லை. தாவீதின் நகரில் அவனைப் புதைத்தனர். ஆயினும் அரசர்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்யவில்லை.
❮
❯